மறைக்கல்வியுரையின்போது - 120521 மறைக்கல்வியுரையின்போது - 120521 

மறைக்கல்வியுரை - இறைவேண்டலில் சந்திக்கும் ஆன்மீகப் போராட்டம்

நாம் சந்திக்கும் ஆன்மீகப் போராட்டங்களில், தொடக்க நூலில் நாம் காணும் யாக்கோபு போல், “உண்மையாகவே ஆண்டவர் இவ்விடத்தில் இருக்கிறார்; நானோ இதை அறியாதிருந்தேன்”, என உரைப்போம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கோவிட்-19 கொள்ளைநோய் கட்டுப்பாடுகளையொட்டி, கடந்த பல வாரங்களாக, தன் நூலகத்திலிருந்தே மறைக்கல்வி உரைகளை, காணொளி வழியாக வழங்கிக் கொண்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே மாதம் 12ம் தேதி, புதன் கிழமை,  வத்திக்கானிலுள்ள புனித தமாசோ (San Damaso) வளாகத்தில், மக்களை நேரடியாக சந்தித்து, இறைவேண்டல் குறித்த தம் மறைக்கல்வியுரையை தொடர்ந்தார்.

முதலில், 10ம் திருப்பாடலிலிருந்து ஒரு பகுதி, பல மொழிகளில் வாசிக்கப்பட்டது.

  • ஆண்டவரே, ஏன் தொலைவில் நிற்கின்றீர்?
  • தொல்லைமிகு நேரங்களில் ஏன் மறைந்துகொள்கின்றீர்? […]
  • ஆண்டவரே, எழுந்தருளும்! இறைவா, எமது ஆற்றலை வெளிப்படுத்தும்!
  • எளியோரை மறந்துவிடாதேயும்.
  • பொல்லார் கடவுளைப் புறக்கணிப்பது ஏன்?
  • அவர் தம்மை விசாரணை செய்யமாட்டாரென்று அவர்கள்
  • தமக்குள் சொல்லிக்கொள்வது ஏன்?
  • ஆனால், உண்மையில் நீர் கவனிக்கின்றீர்;
  • கேட்டையும் துயரத்தையும் பார்த்து, உதவி செய்யக் காத்திருக்கின்றீர்;
  • திக்கற்றவர் தம்மை உம்மிடம் ஒப்படைக்கின்றனர்; அனாதைக்கு நீரே துணை.(தி.பா. 10,1.12-14)

அதன்பின், 'ஆன்மீகப் போராட்டம்' என்ற தலைப்பில், தன் எண்ணங்களை திருப்பயணிகளோடு பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்

மறைக்கல்வியுரை

அன்பு சகோதரரே, சகோதரிகளே, கிறிஸ்தவ இறைவேண்டல் குறித்த நம் மறைக்கல்வித் தொடரில், இன்று, 'ஆன்மீகப் போராட்டம்' என்பது குறித்து நோக்குவோம். இறைவேண்டல் செய்வது அவ்வளவு எளிதானதல்ல என்று கூறும் ஆன்மீகத் தந்தையர்கள், முக்கியமானவை என நமக்குத் தோன்றும் விடயங்களால் நம் கவனம் திசைத்திருப்பப்படுவதும், நாம் சோதனைகளுக்கு உள்ளாவதும் இதற்கு காரணமாகின்றன என உரைக்கின்றனர். நாம் தகுதியற்றவர்களாக செயல்படுகின்றபோதும், நமக்கு இலவசமாக வழங்கப்படும் இறையருளின் கொடையாக இறைவேண்டல் இருக்கின்ற நிலையில், அது, ஊக்கமின்மை, கவலை, ஏமாற்றம் என்ற மனித அனுபவங்களால் பாதிக்கப்படுகிறது என திருஅவையின் மறைக்கல்வி ஏடு நமக்கு கற்பிக்கிறது. பல புனிதர்கள், தங்கள் வாழ்வில் ஆன்மீக வறட்சி, மற்றும் இருளின் நேரங்களைச் சந்தித்துள்ளனர். இத்தகைய சோதனைகளுக்கான நம் பதிலுரை, இறைவேண்டலில் உறுதியாக நிலைத்திருப்பதேயாகும் என அப்புனிதர்கள் நமக்குக் கற்றுத்தருகின்றனர். கிறிஸ்துவின் கொடியின் கீழ் பணிபுரிவதற்குரிய நம் முயற்சியில், ஒழுக்கக் கட்டுப்பாடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தமுனையும் இலயோலாவின் புனித இஞ்ஞாசியார் அவர்கள், இராணுவத்தை, அதற்கு முன்மாதிரியாகக் காட்டுகிறார். பாலைவனத்தில் தான் அனுபவித்த மிகக்கடுமையான ஆன்மீகப் போராட்டத்தின்போது, கடவுள் சில நேரங்களில்  காணாமல்போய்விடுவதுபோல் தோன்றினாலும், அவர் எப்போதும் அருகிலேயே இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டார், புனித அந்தோனியார். இறைவேண்டலில் நிலைத்திருக்கும் முயற்சியில் நாம் சந்திக்கும் ஆன்மீகப் போராட்டங்களில், தொடக்க நூலில் நாம் காணும் யாக்கோபு போல், “உண்மையாகவே ஆண்டவர் இவ்விடத்தில் இருக்கிறார்; நானோ இதை அறியாதிருந்தேன்” (தொ.நூ. 28:16), என உரைப்போம். இது நமக்கும் இறைவனுக்கும் இடையே நிலவும்  உறவில் ஆழத்தையும் முதிர்ச்சியையும் உருவாக்கி, நற்கனிகளைக் கொணரும்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வரும் ஞாயிறன்று நாம் சிறப்பிக்கவிருக்கும் இயேசுவின் விண்ணேற்ற விழாவிற்கான தயாரிப்புக்கள்பற்றி குறிப்பிட்டு, உயிர்த்த இயேசுவின் அமைதியும், மகிழ்வும் அனைத்துக் குடும்பங்கள் மீதும் பொழியப்படுவதாக என வேண்டினார்.

அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த மே மாதத்தில், அன்னை மரியாவின் பாதுகாப்பை அனைவருக்காகவும் வேண்டுகிறேன் என உரைத்த திருத்தந்தை, செபமாலை செபித்தல் போன்ற, அன்னை மரியா அவர்கள் மீதான பக்தி முயற்சிகள், நம் விசுவாச வாழ்வுப் பயணத்திலும், கிறிஸ்தவ சான்று வழங்கலிலும் உதவும் என்ற நம்பிக்கையை வெளியிட்டு, மறைக்கல்வியுரையை நிறைவுச் செய்து, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 May 2021, 11:36

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >