Vatican News
மறைக்கல்வியுரை - 050521 மறைக்கல்வியுரை - 050521 

மறைக்கல்வியுரை : ஆழ்நிலை தியான இறைவேண்டல்

புனித சிலுவையின் யோவான் கூறுவதுபோல், மற்ற எல்லா நடவடிக்கைகளையும் விட, உண்மையான அன்பின் ஒரு நடவடிக்கை, திரு அவைக்கு மிகவும் பயனுடையது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உரோம் நகரில், கோடைக்காலம்  துவங்கியுள்ளபோதிலும், கோவிட் பெருந்தொற்றின் கட்டுப்பாடுகள் இன்னும் அமலில் இருப்பதால், உரோம் நகர், சுற்றுலா, மற்றும் திருப்பயணிகளின் நடமாட்டம் அதிகமின்றி, அமைதியாகவே உள்ளது. கடந்த பல வாரங்களைப்போல், இவ்வாரமும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் நூலக அறையிலிருந்தே, இறைவேண்டல் குறித்த தன் புதன் மறைக்கல்வித் தொடரை வழங்கினார். முதலில் எட்டாம் திருப்பாடலின் சில வரிகள் பல மொழிகளில் வாசிக்கப்பட்டது.

  • ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது! உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது.
  • உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்?
  • ஆயினும், அவர்களைக் கடவுளாகிய  உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்;
  • மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.
  • ஆண்டவரே, எங்கள் தலைவரே, உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய்
  • விளங்குகின்றது! (தி.பா. 8,1.3-5.9)

இந்த வாசகத்தைத் தொடர்நது, திருத்தந்தையின் மறைக்கல்வியுரை இடம்பெற்றது.

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, கிறிஸ்தவ இறைவேண்டல் குறித்த நம் மறைக்கல்வித்தொடரில், இன்று, ஆழ்நிலை தியான இறைவேண்டல் குறித்து காண்போம். கிறிஸ்தவர்களைப் பொருத்தவரையில், ஆழ்நிலைத் தியானம் என்பது, இதயத்தின் ஒரு செயல்பாடு, அதாவது, இயேசுவின் மீது நம் பார்வையை விசுவாசத்தில் பதித்து, அவரின் வார்த்தைகள், மற்றும் மீட்பு வல்லமை குறித்து அமைதியாக இறைவேண்டல் செய்வதாகும். ஒரு சாதாரண விவசாயி, புனித ஜான் வியான்னியிடம் ஒருமுறை, 'திருநற்கருணைப் பெட்டி முன் நான் செபிக்கும்போது, நான் இயேசுவைப் பார்க்கிறேன், அவர் என்னைப் பார்க்கிறார்', என்று கூறியதை ஒத்தது, இந்த இறைவேண்டல்.

நாம் இயேசுவை இவ்வாறு நோக்கும்போது, அன்புடன் கூடிய அவரது பார்வையை நாம் உணர்வதுடன், நம் இதயங்கள் தூய்மையடைகின்றன. அதேவேளையில், இயேசு கொணரும் இந்த உண்மை, மற்றும் இரக்கத்தின் ஒளியில், நாம் பிறரை பார்க்கவும் இது உதவுகிறது. நம் ஆழ்நிலை தியான இறைவேண்டலின் எடுத்துக்காட்டாக, இயேசுவே உள்ளார். அவர், தன் பொதுவாழ்வின் பல்வேறு நடவடிக்கைகளின் இடையே, இறைத்தந்தையோடு அன்புடன் கூடிய இணக்கத்தை வெளிப்படுத்தும் இறைவேண்டலுக்கு நேரத்தை ஒதுக்கினார். அவரின் தோற்றமாற்ற நிகழ்வின் வழியாக, அவரின் தெய்வீக மகிமையை குறித்து சீடர்கள் இறைவேண்டல் செய்யத் தூண்டியதன் வழியாக, வரவிருக்கும் தன் பாடுகள், மற்றும் மரணம் குறித்து அவர்களை தயார்படுத்தினார் இயேசு.  இறைவேண்டலின் வழியாக நாமும் அன்பின் பாதையில் இயேசுவோடு ஒன்றித்து நிலைத்திருப்போமாக. இந்த அன்பின் பாதையில் இறைவேண்டலும் பிறரன்பும் ஒன்றாகின்றன. ஆழ்நிலை தியான இறைவேண்டலின் மிகப்பெரும் ஆசிரியரான, புனித சிலுவையின் யோவான் கூறுவதுபோல், மற்ற எல்லா நடவடிக்கைகளையும் விட, உண்மையான அன்பின் ஒரு நடவடிக்கை, திரு அவைக்கு மிகவும் பயனுடையது.

இவ்வாறு, தன் மறைக்கல்வியுரையை நிறைவுச் செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகின் வெவ்வேறு திருத்தலங்களிலிருந்து இந்த மே மாதத்தின் ஒவ்வொரு நாளும் இடம்பெறும் செபமாலை பக்திமுயற்சியில், கத்தோலிக்கர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு, இப்புதன்கிழமை மறைக்கல்வியுரைக்குப்பின் அழைப்பு விடுத்தார்.

05 May 2021, 12:22

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >