ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை 

இதயங்களுடன் பேசும் தூய மூவொரு கடவுள் மறையுண்மை

எங்கிருந்து வந்தோமே, எதை நோக்கி நம் வாழ்வு வழிநடத்தப்படுகின்றதோ, அந்த ஒளி மற்றும் அன்பின் வியத்தகு மறையுண்மை குறித்து தியானிக்க அழைப்பு விடுக்கிறது மூவொரு கடவுள் திருவிழா

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அனைவரையும் அன்புகூர்வதே தூய மூவொரு கடவுளின் வாழும் அடையாளம் என மே 30, ஞாயிற்றுக்கிழமை நண்பகல் மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தூய மூவொரு கடவுள் திருவிழாவான ஞாயிறன்று, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, நாம் எங்கிருந்து வந்தோமே, எதை நோக்கி நம் வாழ்வு வழிநடத்தப்படுகின்றதோ, அந்த ஒளி மற்றும் அன்பின் வியத்தகு மறையுண்மை குறித்து தியானிக்க அழைப்பு விடுக்கிறது மூவொரு கடவுள் திருவிழா என்று கூறினார்.

தூய மூவொரு கடவுள் குறித்த மிகப்பெரும் மறையுண்மை, நம் அறிவுக்கு புலப்படாதவகையில், நம் கிரகித்துக்கொள்ளும் திறனைத் தாண்டியதாக இருந்தாலும், நம் இதயங்களுடன் அது பேசுகின்றது, என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித யோவான் கூறுவதுபோல், 'கடவுளே அன்பு' என்ற பதத்தில் அனைத்தும் அடங்கியுள்ளன என்று எடுத்துரைத்தார்.

கடவுளே அன்பு, மற்றும் அவர் ஒருவரே, என்பதுபோல், தந்தை, மகன் தூய ஆவியாருக்கு இடையே ஒன்றிப்பு உள்ளது என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை, மகனை உருவாக்கியதில் தந்தை தன்னையே வழங்கினார், மகனும் அதற்கு மறுமொழியாக தன்னை முழுமையாக தந்தையிடம் கையளிக்கிறார், அவர்களுக்கு இடையே நிலவும் அன்பாகவும், ஒன்றிப்பின் இணைப்புச் சங்கிலியாகவும் தூய ஆவியார் உள்ளார் என்று கூறினார்.

தூய ஆவியாரின் மறையுண்மை நமக்கு இயேசு கிறிஸ்துவால் வெளிப்படுத்தப்பட்டது, இறைத்தந்தையை இரக்கமிகு கடவுளாக நமக்கு வெளிப்படுத்திய இறைமகன் இயேசு, தன்னை உண்மை மனிதராகவும், இறைவார்த்தையாகவும் வெளிப்படுத்தியுள்ளதை சுட்டிக்காட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தந்தை, மற்றும் மகனிலிருந்து புறப்பட்டுவரும் தூய ஆவியார், உண்மையின் ஆவியார், துணையாளர், ஆறுதலளிப்பவர் மற்றும், நமக்காக பரிந்துரைப்பவர் என அவரைப்பற்றி இயேசு கூறிய வார்த்தைகளையும் நினைவூட்டிய திருத்தந்தை,  நம் துவக்கமாகவும் இறுதி நோக்கமாகவும் இருக்கும் அன்பு, மற்றும் ஒளி குறித்து ஆழ்ந்து தியானிக்க, இந்த தூய மூவொரு கடவுள் விழா நமக்கு அழைப்பு விடுக்கிறது என்று கூறினார்.

வேறுபட்டவர்களாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும், இணக்கத்தில் வாழவேண்டும் என நற்செய்தி நமக்கு அழைப்பு விடுக்கின்றது, ஏனெனில், இது அன்பு, இறைஇரக்கம், இயேசுவின் நீதி, நம் இதயங்களில் தூய ஆவியாரின் இருப்பு ஆகியவையிலிருந்து பிறப்பதால்,  ஒன்றிப்பு என்பது மிகவும் இன்றியமையாதது, என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 May 2021, 12:30