'வானக அரசியே' வாழ்த்தொலி உரைக்குப்பின், மக்களை வாழ்த்தும் திருத்தந்தை பிரான்சிஸ் 'வானக அரசியே' வாழ்த்தொலி உரைக்குப்பின், மக்களை வாழ்த்தும் திருத்தந்தை பிரான்சிஸ் 

அனைத்து அன்னையருக்கும் வாழ்த்து தெரிவித்த திருத்தந்தை

உலகின் அனைத்து அன்னையருக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், ஆப்கானிஸ்தான், மற்றும் கொலம்பியாவிற்க்காக செபிக்க அழைப்பு விடுத்த திருத்தந்தை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் வானொலி

உலகின் அனைத்து அன்னையருக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக, மே மாதம் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வோர் ஆண்டும், மே மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையன்று உலகில் சிறப்பிக்கப்படும் அன்னையின் உலக தினத்தையொட்டி, தன் நண்பகல் 'வானக அரசியே' வாழ்த்தொலி உரைக்குப்பின் தன் வாழ்த்துக்களை வெளியிட்ட திருத்தந்தை, உலகில் வாழும் அனைத்து அன்னையருக்கும், இவ்வுலகிலிருந்து மறைந்து போயிருக்கும் அன்னையருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக கூறினார்.

மேலும், ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் கல்விக்கூடத்திலிருந்து வெளியே வந்த மாணவர்கள்மீது பயங்கரவாதக் கும்பல் ஒன்றால் சனிக்கிழமையன்று நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

50 பேருக்கு மேல், அதிலும் குறிப்பாக, இளையோர் கொல்லப்பட்டுள்ள இந்த பயங்கரவாத தாக்குதலை, மனிதாபிமானமற்ற செயல் என வன்மையாக கண்டித்த திருத்தந்தை, இதில் உயிரிழந்தோருக்காகவும், ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவும்படியாகவும் அனைவரும் இறைவேண்டல் செய்வோம் எனவும் விண்ணப்பித்தார்.

இலத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியாவில் வன்முறை மோதல்களும், சமூக பதட்ட நிலைகளும் முடிவுக்கு வரவேண்டுமென அனைவரும் ஒன்றிணைந்து செபிப்போம் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வரி சீர்திருத்த திட்டமொன்றை கொலம்பிய அரசு முன்வைத்ததைத் தொடர்ந்து, அந்நாட்டில் துவங்கிய போராட்டங்கள், தற்போது சீரிய நல ஆதரவு, கல்வி, மற்றும் ஓய்வூதிய திட்டங்களுக்கு அழைப்பு விடுத்து, தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 May 2021, 12:55