'La Civiltà Cattolica' இதழின் இஸ்பானிய இணையதளப் பதிப்பு 'La Civiltà Cattolica' இதழின் இஸ்பானிய இணையதளப் பதிப்பு 

'La Civiltà Cattolica' இதழுக்கு திருத்தந்தையின் வாழ்த்து

தற்போது நிலவும் பெருந்தொற்று நெருக்கடி வேளையில், 'La Civiltà Cattolica' இதழில் பணியாற்றுவோர், தங்கள் சிந்தனைகள் வழியே, இறையரசின் நற்செய்தியை, மீட்பின் பாதையாக அனைத்து மக்களுக்கும் அறிவிக்கும்படி அழைக்கிறேன் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உரோம் நகரில், இயேசு சபையினர் நடத்திவரும் 'La Civiltà Cattolica' என்ற இத்தாலிய இதழ், தன் வேற்று மொழி பதிப்புக்களில், இஸ்பானிய மொழியை மீண்டும் துவங்கியிருப்பது குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் பணியாற்றும் இயேசு சபையினர், மே 20, இவ்வியாழனன்று, "இக்னேசியஸ் 500" என்ற சிறப்பு ஆண்டு கொண்டாட்டங்களைத் துவங்கியிருக்கும் தருணத்தையொட்டி, 'La Civiltà Cattolica' இதழ், தன் இஸ்பானியப் பதிப்பை மீண்டும் துவங்கியுள்ளது.

இத்தருணத்தையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பிய வாழ்த்து மடலில், 170 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் 'La Civiltà Cattolica', வெறும் இதழ் மட்டுமல்ல, மாறாக, இது, ஓர் ஆன்மீக, அறிவு சார்ந்த அனுபவத்தை வழங்கும் குழுமம் என்று கூறியுள்ளார்.

இத்தாலியம், ஆங்கிலம், ஃபிரெஞ்சு, இரஷ்யம், சீனம், கொரியன், மற்றும் ஜப்பானிய பதிப்புக்கள் வழியே உலகில் பல்லாயிரம் வாசகர்களைக் கவர்ந்துள்ள 'La Civiltà Cattolica' இதழ், தற்போது, மீண்டும் தன் இஸ்பானிய பதிப்பைத் துவங்கியிருப்பதன் வழியே, 21 நாடுகளில் இஸ்பானிய மொழி பேசுவோரை அடைந்துள்ளது என்று, திருத்தந்தை, தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.

பேதுருவின் படகை இவ்வுலகில் ஆர்வத்துடன் செலுத்த, தங்கள் பேனா என்ற துடுப்பைப் பயன்படுத்தும் அனைவருக்கும் 'ஆர்வத்துடன் உங்கள் துடுப்பைப் பயன்படுத்துங்கள், பரந்து விரிந்த கடலில் துணிந்து பயணம் செய்யுங்கள்' என்று தான் கூற விழைவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மடலில் கூறியுள்ளார்.

தற்போது நிலவும் பெருந்தொற்று நெருக்கடி வேளையில், இவ்விதழில் பணியாற்றுவோர், தங்கள் சிந்தனைகள் வழியே, இறையரசின் நற்செய்தியை, மீட்பின் பாதையாக அனைத்து மக்களுக்கும் அறிவிக்கும்படி இம்மடலின் வழியே திருத்தந்தை விண்ணப்பித்துள்ளார்.

மே 20, இவ்வியாழனன்று வெளியாகும் இஸ்பானிய பதிப்பு, உரோம் நகரில் உள்ள 'Villa Malta' என்ற இல்லத்தில் வாழும் இயேசு சபையினரால், டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும் என்று, 'La Civiltà Cattolica' இதழின் அறிக்கையொன்று கூறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 May 2021, 14:33