புனித பேதுரு பெருங்கோவிலில் தூய ஆவியார் வருகைப் பெருவிழா – திருத்தந்தையின் மறையுரை புனித பேதுரு பெருங்கோவிலில் தூய ஆவியார் வருகைப் பெருவிழா – திருத்தந்தையின் மறையுரை 

தூய ஆவியார் வருகைப் பெருவிழா – திருத்தந்தையின் மறையுரை

இவ்வுலகின் பொய்மையை வெல்வதற்கு, நிகழ்பொழுதில் வாழ்வது, முழுமையைக் காண்பது, கடவுளை முதன்மைப்படுத்துவது என்ற மூன்று வழிகளை தூய ஆவியார் நமக்குச் சொல்லித்தருகிறார் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறைவன் வழங்கிய கொடைகள் அனைத்திற்கும் சிகரமாக விளங்கும் கொடை, தூய ஆவியார் என்றும், அவரே, இறைவனின் அன்பு என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 23, இஞ்ஞாயிறன்று வழங்கிய மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட தூய ஆவியார் வருகைப் பெருவிழாவையொட்டி, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, துணையாளர் என்ற சொல்லில், ஆறுதல் அளிப்பவர், மற்றும் வழக்காடுபவர் என்ற இரு பொருள்கள் பொதிந்துள்ளன என்பதை தன் மறையுரையின் இரு கருத்துக்களாகப் பகிர்ந்துகொண்டார்.

ஆறுதல் அளிக்கும் துணையாளர்

நாம் கடினமான நேரங்களைச் சந்திக்கும்போது, ஆறுதல்பெற விழைகிறோம், ஆனால், இவ்வுலகம் நமக்கு வழங்கும் ஆறுதல், நீடித்த தீர்வுகளை வழங்குவதில்லை என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வலியைப்போக்கும் மருந்துகள், அந்த நேரத்திற்கு வலியை மறக்கச் செய்கின்றனவே தவிர, அவை வலியிலிருந்து நமக்கு முழுமையான குணம் அளிக்காது என்ற எடுத்துக்காட்டைப் பயன்படுத்தினார்.

நாம் துன்புறும் வேளையில், தூய ஆவியார் நம் புலன்களுக்கு சுகம் தருவதைக் காட்டிலும், நம் உள்ளத்திற்கு ஆறுதல் தரும் ஆண்டவரின் அன்பாக விளங்குகிறார் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

எல்லாம் நல்லமுறையில் செல்லும்வேளையில், இவ்வுலகம், நம்மீது புகழைக் குவிக்கும் என்பதையும், நாம் வேதனையிலும், இருளிலும் சிக்கிக்கொள்ளும்போது, இவ்வுலகம் நம்மைக் கண்டனம் செய்யும் என்பதையும், தன் மறையுரையில் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியாரோ, சீடர்கள், இருளிலும், துயரிலும் மூழ்கியிருந்த வேளையில், அவர்களுக்கு உறுதியளித்தார் என்பதை எடுத்துரைத்தார்.

ஆறுதலைத் தேடிஅலையும் இன்றைய உலகிற்கு, நாம் அனைவரும் நம்மால் இயன்ற அளவு துணையாளர்களாக செயல்படவேண்டும் என்ற அழைப்பை திருத்தந்தை முன்வைத்தார்.

நமக்காக வழக்காடும் துணையாளர்

உண்மையின் சான்றாக விளங்கும் தூய ஆவியார், இவ்வுலகின் பொய்மைகளுக்கு எதிராக, நம்மைக் காப்பதற்கு, நம் சார்பில் வழக்காடுபவராக வருகிறார் என்று தன் மறையுரையில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகின் பொய்மை, நம்மைக் கவர்ந்திழுக்கும் சோதனையாக அமைந்துள்ளது என்ற எச்சரிக்கையையும் விடுத்தார்.

இவ்வுலகின் பொய்மையை வெல்வதற்கு, தூய ஆவியார் நமக்கு மூன்று வழிகளை கூறுகிறார் என்று குறிப்பிட்டத் திருத்தந்தை, நிகழ்பொழுதில் வாழ்வது, முழுமையைக் காண்பது, கடவுளை முதன்மைப்படுத்துவது என்ற மூன்று வழிகளைக் குறித்து, தன் கருத்துக்களை, சுருக்கமாகப் பகிர்ந்துகொண்டார்.

தூய ஆவியார் வழங்கும் மூன்று வழிகள்

இன்று, நிகழ்பொழுது ஆகியவற்றைக் காட்டிலும், சிறந்த கொடை வேறெதுவும் இல்லை என்பதை தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த காலத்தைப்பற்றிய குற்ற உணர்விலும், எதிர்காலத்தைப்பற்றிய அச்சத்திலும் வாழ்வதை விடுத்து, இப்போதைய நேரத்தை ஆண்டவர் வழங்கியுள்ள பரிசாகக் கொண்டாடுவோம் என்று கேட்டுக்கொண்டார்.

வேற்றுமைகள் நடுவே, ஒருங்கிணைப்பை, முழுமையைக் காண்பது, தூய ஆவியார் நமக்கு வழங்கும் அடுத்த வழி என்று கூறிய திருத்தந்தை, பழமைவாதி, முன்னேற்றவாதி, இடது, வலது என்ற வேற்றுமைகளைப் பெரிதுபடுத்தாமல், ஒற்றுமையை வளர்ப்பதை, இன்றைய முதல் வாசகத்தில் தெளிவாகக் காண்கிறோம் என்பதை நினைவுறுத்தினார்.

இறுதியாக, அனைத்திற்கும் மேலாக இறைவனை முதன்மைப்படுத்துவது, தூய ஆவியாரின் மூன்றாவது வழி என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் ஒவ்வொருவரும் நமக்கென வகுத்துள்ள திட்டங்களில் மூழ்கிவிடாமல், இறைவனை முதன்மைப்படுத்தவேண்டும், ஏனெனில், திருஅவை மனித நிறுவனம் அல்ல, மாறாக, அது, தூய ஆவியாரின் ஆலயம் என்று கூறி, திருத்தந்தை தன் மறையுரை கருத்துக்களை நிறைவுசெய்தார்.

"தூய ஆவியாரே, நிகழ்பொழுதின் இறைவனை இவ்வுலகிற்கு காட்டும் சாட்சிகளாக எங்களை உருவாக்கியருளும், அனைத்தையும் புதுப்பிக்கும்வண்ணம், திருஅவையிலும், மனித சமுதாயத்திலும் ஒற்றுமையைக் கொணரும் இறைவாக்கினார்களாக வாழ எங்களுக்கு உதவியருளும்" என்ற வேண்டுதலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையின் இறுதியில் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 May 2021, 14:40