C-9 கர்தினால்கள் அவை (Vatican media) C-9 கர்தினால்கள் அவை (Vatican media) 

பெருந்தொற்று காலத்தில் திருஅவையின் வாழ்வு பற்றி கர்தினால்கள்

C-9 கர்தினால்கள் அவையின் அடுத்த கூட்டம், வருகிற ஜூன் மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலகெங்கும் கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியுள்ள நெருக்கடிகள், மற்றும், அவற்றுக்கு, திருஅவையின் பதிலுறுப்பு ஆகியவை பற்றி, C-9 கர்தினால்கள் அவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து கலந்தாலோசித்தது என்று, திருப்பீடத் தகவல் தொடர்பகம் அறிவித்துள்ளது.

திருப்பீடத் தலைமையகத்தின் சீர்திருத்தப் பணிகளில் திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும், C-9 கர்தினால்கள் அவை, திருத்தந்தையின் பங்கேற்புடன், மே 06, இவ்வியாழன் பிற்பகலில், இணையம்வழி நடத்திய கூட்டத்தில், திருப்பீட தலைமையகத்தை மையப்படுத்தி, வெளிவரவிருக்கின்ற திருத்தூது கொள்கை விளக்கம் குறித்தும் கலந்துரையாடினர் என்று, திருப்பீட தகவல் தொடர்பகம் மேலும் கூறியுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று, பொருளாதார, மற்றும், சமுதாய அளவில் உருவாக்கியுள்ள எதிர்விளைவுகள் குறித்த, தங்களின் அனுபவங்களை, கர்தினால்கள் பகிர்ந்துகொண்டனர் என்றும், மக்களின் நலத்தையும், பொருளாதாரச் சரிவையும் மீட்டெடுப்பதற்கும், அதிகத் தேவையில் இருப்போருக்கு ஆதரவு வழங்குவதற்கும், திருஅவையின் அர்ப்பணம் குறித்து கலந்துரையாடினர் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இக்கூட்டத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானில், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்தும், C-9 கர்தினால்கள் அவையைச் சார்ந்த கர்தினால்கள்,  Oscar Rodriguez Maradiaga, Reinhard Marx, Sean Patrick O’Malley, Oswald Gracias, Fridolin Ambongo Besungo ஆகியோர் தங்களின் நாடுகளிலிருந்தும், கர்தினால்கள் பியெத்ரோ பரோலின், ஜூசப்பே பெர்த்தெல்லோ ஆகிய இருவரும், அந்த அவையின் செயலர் ஆயர் மாற்கோ மெலினோ அவர்களோடு சேர்ந்து வத்திக்கானிலிருந்தும் கலந்துகொண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

C-9 கர்தினால்கள் அவையின் அடுத்த கூட்டம், இவ்வாண்டு, ஜூன் மாதத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 May 2021, 15:06