திருத்தந்தை 2ம் யோவான் பவுல், கர்தினால் Stanislaw Dziwisz திருத்தந்தை 2ம் யோவான் பவுல், கர்தினால் Stanislaw Dziwisz  

திருத்தந்தையின் குரலை ஒடுக்க நினைத்தவர்களின் தோல்வி

கொலைமுயற்சிகளுக்குப்பின், மக்களை நேரடியாக சந்திப்பது, மனித உரிமைகளுக்கு குரல் கொடுப்பது ஆகிய பணிகளை, எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்த திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனித உரிமைகளுக்காக,  குறிப்பாக, அடக்குமுறை ஆட்சியாளர்களின் அடிமைத்தன முயற்சிகளுக்கு எதிராக, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் குரல் எழுப்பியது, பலருக்கு இடைஞ்சலாக இருந்ததன் விளைவாகவே, அவர் மீது கொலை முயற்சி இடம்பெற்றது, என்று கூறினார், போலந்து நாட்டு கர்தினால் Stanislaw Dziwisz.

திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்கள் திருஅவையை வழிநடத்திய 27 ஆண்டு காலம் முழுவதும், அவரின் தனிப்பட்டச் செயலராகப் பணியாற்றிய கர்தினால் Dziwisz அவர்கள், திருத்தந்தை மீது இடம்பெற்ற கொலைமுயற்சியின் 40ம் ஆண்டு நினைவையொட்டி அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

20ம் நூற்றாண்டின் அடக்குமுறை ஆட்சிகளின் பாதிப்புக்களை நேரடியாக உணர்ந்திருந்த திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், தான் திருஅவையை வழிநடத்தத் துவங்கிய முதல்நாளிலிருந்தே, மக்களின் உரிமைகளுக்காகவும், மாண்புக்காகவும் தொடர்ந்து குரலெழுப்பி, அதற்கென பெரியதொரு விலையைக் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவரின் இத்தகைய பணி தடைப்பட்டதேயில்லை என்று தன் பேட்டியில் கூறினார், போலந்து கர்தினால் Dziwisz.

துப்பாக்கிச் சூட்டால் பெரிய அளவில் இரத்தம் வெளியாகி, மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வழியில் சுயநினைவை இழக்கும் முன் தன்னிடம் பேசிய திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்கள், தன்னைச் சுட்டவரை மன்னித்ததுள்ளதாக அவ்வேளையில் கூறியதை, கர்தினால் Dziwisz அவர்கள் நினைவுகூர்ந்தார்

இந்தக் கொலைமுயற்சிக்குப்பின், திருத்தந்தைக்கு பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்ட போதிலும், மக்களை நேரடியாக சந்திப்பது, மனித உரிமைகளுக்கு குரல் கொடுப்பது ஆகிய தன் பணிகளில், எவ்வித மாற்றமும் இன்றி திருத்தந்தை தொடந்தார் என்று கூறிய கர்தினால் Dziwisz  அவர்கள், தன் உயிரை காப்பாற்றியது அன்னை மரியா என்பதில் உறுதியான நம்பிக்கைக் கொண்டிருந்த திருந்தத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், தன்னை சுட்டவரை சிறையில் சந்தித்ததையும் எடுத்துரைத்தார்.

1981ம் ஆண்டு, பாத்திமா அன்னை மரியா திருவிழாவான மே மாதம் 13ம் தேதியன்று, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், கொலை முயற்சியிலிருந்து தப்பியது மட்டுமல்ல, அவரின் குரலை முடக்க நினைத்தவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி, நான்கே நாட்களில், அதாவது மே 17ம் தேதி, ஞாயிறன்று, வத்திக்கான் வானொலி வழியாக, வானக அரசியே வாழ்த்தொலி உரையையும்  வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனக்காக செபித்தவர்களுக்கு நன்றி கூறுவதாகவும், இந்த துப்பாக்கிச் சூட்டின்போது தன்னுடன் காயமடைந்த இருவருடன் தான் நெருக்கமாக இருப்பதாகவும், தன்னை சுட்டவர்க்காக செபித்ததாகவும், அவரை மன்னித்துள்ளதாகவும், தன் வேதனைகளை திருஅவை மற்றும் உலகின் நலனுக்காக ஒப்படைப்பதாகவும், தன் வானக அரசியே வாழ்த்தொலி உரையில் தெரிவித்தார், திருத்தந்தை 2ம் யோவான் பவுல்.

தன் கொலைமுயற்சி இடம்பெற்ற அடுத்த ஆண்டே, திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்கள், பாத்திமா திருத்தலத்திற்கு திருப்பயணம் மேற்கொண்டது, மற்றும் தன்னைத் துளைத்த குண்டை, பாத்திமா அன்னை திருத்தலத்திற்கு காணிக்கையாக வழங்கியது, ஆகியவை, இங்கு நினைவுகூரத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 May 2021, 15:14