தேடுதல்

மறைக்கல்வி உரையின் இறுதியில் ஆசி வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் மறைக்கல்வி உரையின் இறுதியில் ஆசி வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

மறைக்கல்வியுரை : இறைவேண்டலின் உயரிய கல்விக்கூடம் திருஅவை

நம் குழந்தைப் பருவத்தில் பெற்ற இறைவேண்டல் குறித்த பாடங்கள், நம் பங்குத்தள, மற்றும் கிறிஸ்தவ சமுதாயங்கள் வழியாக ஆழம்பெறுவதை உணர்கிறோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

கோவிட்-19 பெருந்தொற்றுக் கட்டுப்பாடுகள் இத்தாலியில் இன்னும் நீடித்துவரும் நிலையில், இவ்வாரமும் தன் நூலக அறையிலிருந்தே புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவேண்டலின் உயரிய கல்விக்கூடம் திருஅவை, என்ற தலைப்பில் தன் கருத்துக்களை இணையதளம், மற்றும் தொலைக்காட்சி வழியே பகிர்ந்துகொண்டார். ஏப்ரல் 14, இப்புதனன்று இடம்பெற்ற மறைக்கல்வி உரையில், முதலில், திருத்தூதர் பணிகள் நூலின் 4ம் பிரிவிலிருந்து, 'துணிவு பெற மன்றாட்டு' என்ற பகுதி, பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டது.

விடுதலை பெற்ற அவர்கள், தங்களைச் சேர்ந்தவர்களிடம் வந்து, தலைமைக் குருக்களும் மூப்பர்களும் தங்களுக்குக் கூறிய யாவற்றையும் அறிவித்தார்கள். இவற்றைக் கேட்ட யாவரும் ஒரே மனத்துடன் தங்கள் குரலைக் கடவுள்பால் எழுப்பி, பின்வருமாறு மன்றாடினர்: “ஆண்டவரே, விண்ணுலகையும் மண்ணுலகையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்தவர் நீரே … உம் அடியார் முழுத் துணிவுடன் உமது வார்த்தைகளை எடுத்துக்கூற அருள் தாரும். உமது தூய ஊழியர் இயேசுவின் பெயரால் உமது கையை நீட்டி நோயுற்றோருக்கு நலமளியும்; அடையாளங்களும் அருஞ் செயல்களும் நடைபெறச் செய்யும்.”  இவ்வாறு மன்றாடியவுடன் அவர்கள் கூடியிருந்த இடம் அதிர்ந்தது. அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய், கடவுளின் வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துக்கூறினர். (தி.ப. 4,23-24.29-31)

இவ்வாசகத்தையடுத்து, திருத்தந்தையின் சிந்தனைப் பகிர்வுகள் துவங்கின.

மறைக்கல்வியுரை

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, கிறிஸ்தவ இறைவேண்டல் குறித்த நம் தொடர் மறைக்கல்வியுரையில், இன்று, இறைவேண்டலில் மிகப்பெரிய கல்விக்கூடம் திருஅவை என்பது குறித்து சிந்திப்போம்.  இறைவேண்டல் செய்வது எவ்வாறு என்பதை, முதன் முதலில், நம் பெற்றோர், மற்றும் தாத்தா பாட்டிகளின் மடிகளில் அமர்ந்தே நாம் கற்றுக்கொண்டோம். நாம் வளர வளர, ஏனைய சந்திப்புக்கள், சான்றுகள், மற்றும் இறைவேண்டலின் ஆசிரியர்களைப் பார்த்து அந்த அனுபவங்களின் வழியாக நம் இறைவேண்டல் வாழ்வு முதிர்ச்சி பெறுகின்றது. நம் குழந்தைப்பருவத்தில் பெற்ற இறைவேண்டல் குறித்த பாடங்கள், நம் பங்குத்தள, மற்றும் கிறிஸ்தவ சமுதாயங்கள் வழியாக ஆழம்பெறுவதை உணர்கிறோம். அது அப்படியே இருந்துவிடுவதில்லை, மாறாக, வளர்கின்றது. அதாவது, நெருக்கடிகள், மற்றும் உயிர்ப்பின் வழியாக வளர்ச்சி பெறுகின்றது. ஏனெனில், நெருக்கடிகள் இன்றி வளர்ச்சியைக் காணமுடியாது. நம்பிக்கையின் உயிர்முச்சு இறைவேண்டலாகும். இறைவனுக்கென தங்களை அர்ப்பணித்தவர்கள் வாழும் துறவு இல்லங்கள், ஆன்மீக ஒளியின் மையங்களாக இருந்து, மத வாழ்வுக்கு மட்டுமல்ல, சமுதாய வாழ்வுக்கும் இன்றியமையாதவையாக உள்ளன. இதற்கு உதாரணமாக, ஐரோப்பிய நாகரீகத்திற்கும், ஏனைய பல கலாச்சாரங்களுக்கும் துறவுமாட வாழ்வு ஆற்றியுள்ள பங்களிப்பை இங்கு குறிப்பிடலாம்.

திருஅவையில் அனைத்தும் துவங்குவதும் வளர்வதும் இறைவேண்டலிலேயே. தீயோன் திருஅவையை தகர்க்க முயலும்போது, அவன் முதலில் செய்வது, அதன் இறைவேண்டல் வாழ்வை அசைத்துப் பார்ப்பதுதான். திருஅவையின் வளர்ச்சிக்கு தூண்டுதலாக இருக்கும் தூய ஆவியாரை நோக்கிய கதவுகளைத் திறப்பது இறைவேண்டலே. திருஅவையில் இறைவேண்டலின் துணையின்றி புகுத்தப்படும் மாற்றங்கள் அனைத்தும் திருஅவையின் மாற்றங்கள் அல்ல, மாறாக சில குழுக்களின் மாற்றங்கள்.

புனிதர்களான ஆண்களும், பெண்களும் பெறுகின்ற பலம் என்பது இறைவேண்டலே. அவர்கள் திருஅவையின் வற்றாத கிணற்றிலிருந்து தங்கள் பலத்தைப் பெறுகின்றனர். இறைவேண்டல் என்பது ஓர் ஆயுதம்.

'மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?' (லூக் 18:8), என்ற கேள்வியை முன்வைத்தார் இயேசு. அவர் வரும்போது, நம்பிக்கையை காண்பாரா, அல்லது, நம்பிக்கையை ஒரு தொழில்போல ஏற்று செயல்படுவோர், அதாவது, அனைத்தையும் ஒழுங்காக வடிவமைத்து, பிறரன்பு நடவடிக்கைகளையும் உள்புகுத்தி, அதேவேளை, நம்பிக்கையின்றி செயல்படும் ஓர் அமைப்பைப் பார்ப்பாரா?

நாம் நாமக்குள்ளேயே கேட்கவேண்டிய கேள்வி ஒன்று உள்ளது. நான் இறைவேண்டல் செய்கின்றேனா? நாம் இறைவேண்டல் செய்கிறோமா? கிளிப்பிள்ளைபோல் செபிக்கிறோமா? அல்லது, இதயத்தின் துணைகொண்டு இறைவேண்டல் செய்கிறோமா?

திருஅவையின் முக்கியப்பணி, இறைவேண்டல் செய்வதும், இறைவேண்டல் செய்ய கற்றுத்தருவதுமாகும். நம்பிக்கை எனும் விளக்கையும் இறைவேண்டல் எனும் எண்ணெயையும் தலைதலைமுறையாக வழங்குவது அதன் பணியாகிறது. இதற்கு இணையாக இன்னொன்று இல்லை. நம்பிக்கையும் இறைவேண்டலும் ஒன்றிணைந்தே உள்ளன. இதன் காரணமாக, ஒன்றிப்பின் இல்லமாகவும், கல்விக்கூடமாகவும் இருக்கும் திருஅவை, நம்பிக்கை மற்றும் இறைவேண்டலின் இல்லமாகவும், கல்விக்கூடமாகவும் இருக்கிறது.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இணையதளம், தொலைக்காட்சி என பல்வேறு சமூகத்தொடர்புச் சாதனங்கள் வழியாக தனக்கு செவிமடுக்கும் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 April 2021, 12:00

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >