திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

“போர்களை நாம் எவ்வாறு தடுத்து நிறுத்தப் போகிறோம்?

எந்த ஒரு சமுதாயக் குழுவும், எந்தவொரு தனிப்பட்ட நபரும், தனித்து நின்று, உலகில், அமைதி, வளமை, பாதுகாப்பு, மற்றும், மகிழ்ச்சியை நிலவச்செய்ய இயலாது - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலகில் அமைதி, பாதுகாப்பு, மகிழ்ச்சி போன்றவை நிலவுவதற்கு, எந்த ஒரு நாடும், தனித்து நின்று சாதிக்கமுடியாது, மாறாக, உலகநாடுகளின் ஒன்றிணைந்த முயற்சியாலேயே அந்த இலக்கை எட்டமுடியும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளார்.

ஏப்ரல் 24, இச்சனிக்கிழமையன்று, “அமைதிக்காக, பன்னாட்டு உறவுகள், மற்றும், அரசியல் செயலாண்மைத்திறன் உலகநாள்” கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, அந்த உலகநாளை மையப்படுத்தி, தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில், இவ்வாறு கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“ஆயுதமோதல்களை நாம் எவ்வாறு தடுத்து நிறுத்தப்போகிறோம்? எந்த மக்களும், எந்த ஒரு சமுதாயக் குழுவும், எந்தவொரு தனிப்பட்ட நபரும், உலகில், அமைதி, வளமை, பாதுகாப்பு, மற்றும், மகிழ்ச்சியை நிலவச்செய்ய இயலாது. நாம் எல்லாரும், உலகளாவிய குழுமம், அனைவரும் ஒரே படகில் உள்ளோம் என்ற விழிப்புணர்வை, கோவிட்-19 பெருந்தொற்று கற்றுக்கொடுத்துள்ளது” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில், அமைதிக்கு அரசியல் செயலாண்மைத்திறன் (#DiplomacyForPeace) என்ற ஹாஷ்டாக்குடன்  இடம்பெற்றிருந்தன.

மேலும், திருப்பீடத்திற்கென்று பணியாற்றும், பல்வேறு நாடுகளின் அரசியல் தூதர்களோடு, புத்தாண்டு நல்வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டபோதும் (பிப்.8,2021;சன.7,2019), ஐக்கிய நாடுகள் நிறுவனம் உருவாக்கப்பட்டதன் 75ம் ஆண்டு நிறைவையொட்டி நாடுகளின் அரசியல் தூதர்களைச் சந்தித்தபோதும் (சன.9,2020) ஆற்றிய உரைகளிலும், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவையின் 75வது அமர்வுக்கு அனுப்பிய காணொளிச் செய்தியிலும் (செப்.25,2020,), இவ்வாறு பல்வேறு கட்டங்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக அமைதிக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளில், நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு அவசியம் என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

2015ம் ஆண்டு செப்டம்பரில், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் உரையாற்றியபோது,  உலகில் அமைதியை உருவாக்குவதற்கு, பன்னாட்டு உறவுகளின் முக்கியத்துவம் அவசியம் என்று கூறியதோடு, அண்மை ஆண்டுகளில், பன்னாட்டு அரசியலில் நெருக்கடிகள் ஆழப்பட்டுவருகின்றன என்பதையும், எடுத்துக்காட்டுகளோடு குறிப்பிட்டார் திருத்தந்தை.

2018ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவையால் உருவாக்கப்பட்ட, “அமைதிக்காக, நாடுகளின் பன்னாட்டு உறவுகள், மற்றும், அரசியல் செயலாண்மைத்திறன் உலக நாள்”, 2019ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி முதல்முறையாக சிறப்பிக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 April 2021, 15:01