மருத்துவமனையில் புதிய ஆயர் Carlassare  மருத்துவமனையில் புதிய ஆயர் Carlassare  

புதிய ஆயர் Carlassare, விரைவில் நலமடைய திருத்தந்தை செபம்

தென் சூடானில், இரு ஆயுதம் ஏந்திய ஆண்கள், 43 வயது நிரம்பிய, புதிய ஆயர் Carlassare அவர்களைக் கடுமையாய் அடித்து, அவரது கால்களிலும் நான்குமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உயிர்த்த இயேசுவை, நம் தினசரி வாழ்வில், நாம் எங்கே காணலாம் என்ற கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 27, இச்செவ்வாயன்று வெளியிட்ட, தன் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த இயேசுவை, தினசரி வாழ்வில், நம் சகோதரர், சகோதரிகளின் முகங்களில், எல்லாவற்றிற்கும் மேலாக, வறியோர் மற்றும், சமுதாயத்தின் விளிம்புநிலையில் உள்ளோர் முகங்களில், நாம் கண்டுகொள்ளலாம். அப்போது, கடவுளின் மகத்துவம், மதிப்புக்குறைவானவைகளிலும், அவரது அழகு, ஏழைகள் மற்றும், எளியவர்களிலும்,  எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றன என்பதை அறிந்து, நாம் வியப்படைவோம் என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

தென் சூடான் புதிய ஆயர் Carlassare

மேலும், தென் சூடான் நாட்டின் Rumbek மறைமாவட்டத்தில், கடுமையாய்த் தாக்கப்பட்டுள்ள, கொம்போனி மறைப்பணி சபையைச் சார்ந்த, புதிய ஆயர் Cristian Carlassare அவர்கள், விரைவில் நலமடைய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறைவனை மன்றாடி வருவதாக, திருப்பீட தகவல் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள்  கூறியுள்ளார்.

Rumbek மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் Cesare Mazzolari அவர்கள், 2011ம் ஆண்டில் இறைபதம் அடைந்ததைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணி Carlassare அவர்களை, இவ்வாண்டு மார்ச் மாதம் 8ம் தேதி, அம்மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமித்தார். இப்புதிய ஆயரின், திருப்பொழிவு நிகழ்வு, வருகிற மே மாதம் 23ம் தேதி நடைபெறுவதாய் அறிவிக்கப்பட்டிருந்தது.

43 வயது நிரம்பிய, இத்தாலியரான, புதிய ஆயர் Carlassare அவர்கள் அறையில், ஏப்ரல் 25, இஞ்ஞாயிறு நள்ளிரவில், இரு ஆயுதம் ஏந்திய ஆண்கள் நுழைந்து, அவரைக் கடுமையாய் அடித்து, அவரது கால்களிலும் நான்குமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

புதிய ஆயர் Carlassare அவர்கள், தாக்கப்பட்ட தகவல் வெளியானபின், அவர் உடனடியாக, நைரோபிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அந்நகரில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருகிறார் என்று கூறியுள்ள, புரூனி அவர்கள், புதிய ஆயர் Carlassare அவர்கள், தன்னை தாக்கியவர்களை மன்னித்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தென் சூடானில் பெரும்பான்மையாக வாழ்கின்ற dinka இன மக்கள், Rumbek மறைமாவட்டத்தில் அதிகம் என்றும், அந்த மறைமாவட்ட மக்கள், இம்மாதம் 16ம் தேதி, புதிய ஆயர் Carlassare அவர்களுக்கு, தங்கள் இன கலாச்சார முறையில் மகிழ்வோடு வரவேற்பளித்தனர் என்றும், புரூனி அவர்கள் கூறியுள்ளார்.

தென் சூடான் நாட்டில், வன்முறையும், இனவாதமும் அதிகரித்து வருகின்றன என்று கூறப்படும்வேளை, அந்நாட்டு அரசுத்தலைவர் Salva Kiir அவர்கள், திருஅவையின் செயல்பாடுகளில் தலையிடும் குற்றவாளிகளை, அரசு அனுமதிக்காது என்று அறிவித்துள்ளார்.

18 இலட்சம் மக்கள் வாழ்கின்ற Rumbek மறைமாவட்டத்தில், 2 இலட்சம் பேர் கத்தோலிக்கர், மற்றும், 8 இலட்சம் பேர் பிற கிறிஸ்தவ சபையினர்.

மேலும், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயமும், Rumbek மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆயர் Christian Carlassare அவர்கள் தாக்கப்பட்டதற்கு தன் ஆழ்ந்த வருத்தத்தையும், அவரோடு தன் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 April 2021, 15:01