தேடுதல்

Vatican News
புனித பேதுரு பெருங்கோவிலில் அருள்பணித்துவ திருப்பொழிவு (2019.05.12) புனித பேதுரு பெருங்கோவிலில் அருள்பணித்துவ திருப்பொழிவு (2019.05.12)  (Vatican Media)

உரோம் மறைமாவட்டத்திற்கு 9 புதிய அருள்பணியாளர்கள்

கடவுளுக்கு, ஒரு சிறிய நாணயம் போன்ற நம் ஒவ்வொருவரையும் ஆண்டவர் ஓய்வின்றித் தேடுகின்றார் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“கடவுளுக்கு, ஒரு சிறிய நாணயம் போன்ற உங்களை, ஆண்டவர் ஓய்வின்றித் தேடுகின்றார். அவரது கண்களுக்கு நீங்கள் விலையேறப் பெற்றவர்கள், மற்றும், தனித்துவமிக்கவர்கள். கடவுளின் இதயத்திலுள்ள உங்களது இடத்தை, யாராலும் பறித்துவிட முடியாது” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 20, இச்செவ்வாயன்று கூறியுள்ளார்.

நம் ஒவ்வொருவர் மீதும் கடவுள் வைத்துள்ள அன்புக்கு எல்லையே கிடையாது என்பதை உணர்த்தும் விதமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று, தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி அமைந்துள்ளது.

9 புதிய அருள்பணியாளர்கள்

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் மறைமாவட்டத்திற்கென்று, ஒன்பது புதிய அருள்பணியாளர்களை, ஏப்ரல் 25, நல்லாயன் ஞாயிறன்று திருப்பொழிவு செய்யவுள்ளார்.

நல்லாயன் ஞாயிறாகிய, நான்காவது உயிர்ப்பு ஞாயிறன்று சிறப்பிக்கப்படும், இறையழைத்தல்களுக்காக இறைவேண்டல் செய்யும் நாளன்று, உரோம் மறைமாவட்ட ஆயராகிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒன்பது தியாக்கோன்களை, அருள்பணித்துவ வாழ்வுக்கென்று, திருப்பொழிவு செய்வார்.

வருகிற ஞாயிறன்று உரோம் நேரம் காலை ஒன்பது மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் துவங்கும் இத்திருப்பொழிவு திருப்பலியில், கோவிட்-19 விதிமுறைகளுக்கு உட்பட்டு, விசுவாசிகள் பங்குகொள்வர்.

பல்வேறு மறைமாவட்ட அருள்பணித்துவ பயிற்சி மையங்களில் பயின்ற இந்த ஒன்பது பேரில், ஒருவர் ருமேனியா நாட்டையும், மற்றொருவர் கொலம்பியா நாட்டையும், இன்னொருவர் பிரேசில் நாட்டையும் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

20 April 2021, 15:17