இத்தாலியின் Monte Rosa பகுதியில் காணப்படும் அழகிய மலைத்தொடர் - Laudato si இத்தாலியின் Monte Rosa பகுதியில் காணப்படும் அழகிய மலைத்தொடர் - Laudato si 

'பூமிக்கோள நாள்’ – படைப்புடன் மீண்டும் உறவைப் புதுப்பிக்க...

"படைத்தவரோடும், ஏனைய மனிதர்களோடும், படைப்பு அனைத்தோடும் நாம் முறித்துள்ள உறவுகளை குணமாக்கவேண்டும்" - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஏப்ரல் 22, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட '51வது உலக பூமிக்கோள நாளை’யொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், நாம் படைப்புடன் உருவாக்கியுள்ள உறவு முறிவை குணமாக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளார்.

"படைத்தவரோடும், ஏனைய மனிதர்களோடும், படைப்பு அனைத்தோடும் நாம் உறவுகளை முறித்துள்ளோம். வாழ்வின் அடித்தளமாக விளங்கும் இவ்வுறவு சிதைக்கப்பட்டுள்ளதால், அதை நாம் குணமாக்கவேண்டும்" என்ற சொற்கள் திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

13 மணி நேர பூமிக்கோள நாள் நிகழ்ச்சிகள்

இத்தாலியில் இயங்கும் Focolare இயக்கம் மற்றும் இத்தாலிய பூமி நாள் இயக்கம் ஆகிய இரு அமைப்புக்களும், உலக பூமிக்கோள நாளையொட்டி, RaiPlay என்ற தொலைக்காட்சி அலைவரிசையில், காலை 7.30 முதல் மாலை 8.30 வரை, பல்வேறு நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்தன.

#OnePeopleOnePlanet என்ற விருதுவாக்குடன் செயலாற்றும் இவ்விரு அமைப்புக்களும், 2015ம் ஆண்டு பாரிஸ் மாநகரில் நிகழ்ந்த சுற்றுச்சூழல் உச்சி மாநாட்டையடுத்து, 2016ம் ஆண்டு இத்தாலியில் பூமி நாள்  விழிப்புணர்வு நிகழ்வுகளை கொண்டாட ஆரம்பித்த வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் அமைந்துள்ள Villa Borghese பூங்காவில் "பூமிக்காக கிராமம்" என்ற முயற்சியைத் துவக்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஏப்ரல் 22, இவ்வியாழனன்று, திருத்தந்தை வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் பதிவில் "திறந்த மனம், வரவேற்கும் மனநிலை, நன்மைத்தனம் ஆகிய பண்புகளுடன், நற்செய்திக்காகவும், நமது சகோதரர்கள், சகோதரிகளுக்காக, ஒருவர், தன்னையே வழங்கும்போது, வாழ்வு, மற்றும் மகிழ்வின் முழுமையைக் காண்பார்" என்ற சொற்கள் காணப்பட்டன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 April 2021, 15:46