அவிலா நகர் புனித தெரேசா அவிலா நகர் புனித தெரேசா 

அவிலா நகர் புனித தெரேசா, தன் வழிகாட்டி - திருத்தந்தை

1970ம் ஆண்டு, செப்டம்பர் 27ம் தேதி, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், புனித அவிலா தெரேசாவை, திருஅவையின் மறைவல்லுனராக அறிவித்தார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஏராளமான சொற்கள், மற்றும், கருத்தியல்களின் இரைச்சல்கள் நடுவே, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று தொடர்ந்து கூறிவரும் உயிர்த்த ஆண்டவரின் மென்மையான குரல் ஒலிக்கின்றது, எனவே, முரண்பாடுகள், மற்றும், மனக்குழப்பங்கள் ஆகியவற்றின் மத்தியில், ஒவ்வொரு நாள் வாழ்வையும் சவாலோடு நாம் எதிர்கொள்ளவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 13, இச்செவ்வாயன்று கூறியுள்ளார்.

உயிர்ப்புக் காலத்தின் இரண்டாவது வாரத்தில் வாழ்ந்துவரும் நம் அனைவருக்கும், உயிர்ப்புக்காலச் சிந்தனைகளை, தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் எழுதிவரும்  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இச்செவ்வாயன்று, இச்சொற்கள் வழியே நமக்கு அழைப்பு விடுத்துள்ளார்

புனித அவிலா தெரேசா

மேலும், அவிலா நகர் புனித தெரேசா, திருஅவையின் மறைவல்லுனர் என்று அறிவிக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டை முன்னிட்டு, இஸ்பெயின் நாட்டு, அவிலா நகரில் நடைபெற்றுவரும் பன்னாட்டு கருத்தரங்கிற்கு, இஸ்பானிய மொழியில், செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

1970ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், அவிலா நகர் புனித தெரேசாவை, திருஅவையின் மறைவல்லுனராக அறிவித்தார் என்று, தன் செய்தியைத் தொடங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புனிதர், விண்ணகத்தை மண்ணகத்திற்குக் கொணரத் தெரிந்தவர் என்று கூறியுள்ளார்.

அர்ப்பணிக்கப்பட்ட துறவு வாழ்வுக்கென அழைக்கப்பட்டவர்களுக்கு மட்டுமன்றி, அனைத்துவிதமான உலகப்போக்கினின்று விலகி, தூய்மையான பாதையில் முன்னேற விரும்பும் எல்லாருக்கும், அவிலா நகர் புனித தெரேசா எடுத்துக்காட்டு என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார். 

புனித அவிலா தெரேசா, "ஓர் அசாதாரண பெண்" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு அனுப்பியுள்ள செய்தியில், இவ்வுலகப் பயணத்தில், பாதுகாப்பும், மனஅமைதியும் பெறுவதற்கு, அப்புனிதரை, ஒரு நண்பராக, உடன்பயணிப்பவராக, மற்றும், வழிகாட்டியாக, தான் கொண்டிருப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இஸ்பெயின் நாட்டின், அவிலா நகரின் புனித இயேசுவின் தெரேசா கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில், ஏப்ரல் 12, இத்திங்களன்று துவங்கியுள்ள நான்கு நாள் பன்னாட்டு மெய்நிகர் கருத்தரங்கையொட்டி, அவிலா நகர் ஆயர் Jose Maria Gil Tamayo அவர்களுக்கு, திருத்தந்தை, இச்செய்தியை அனுப்பியுள்ளார்.

இக்கருத்தரங்கு, ஏப்ரல் 15, இவ்வியாழனன்று நிறைவடையும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 April 2021, 14:51