புனித வெள்ளியன்று, இறையடி சேர்ந்த கர்தினால் கிறிஸ்தியான் தூமி புனித வெள்ளியன்று, இறையடி சேர்ந்த கர்தினால் கிறிஸ்தியான் தூமி  

கர்தினால் தூமியின் மறைவுக்கு திருத்தந்தையின் இரங்கல் செய்தி

காமரூன் நாட்டின் முதல் கர்தினாலாக பணியாற்றிய கர்தினால் கிறிஸ்தியான் தூமி அவர்கள், 2021ம் ஆண்டு, ஏப்ரல் 2, புனித வெள்ளியன்று, தன் 91வது வயதில் இறையடி சேர்ந்தார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஏப்ரல் 2, புனித வெள்ளியன்று, காமரூன் நாட்டில் இறையடி சேர்ந்த கர்தினால் Christian Wiyghan Tumi அவர்களின் மறைவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டின் Douala உயர் மறைமாவட்டத்தின் பேராயர் Samuel Kleda அவர்களுக்கு, இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார்.

குடியரசு மற்றும் மனித உரிமை ஆகிய விழுமியங்களை, துணிவுடன் காத்ததன் வழியே, கர்தினால் தூமி அவர்கள், காமரூன் நாட்டின் அரசியல் மற்றும் சமுதாய வாழ்வில் மறக்கமுடியாத தாக்கத்தை உருவாக்கிச் சென்றுள்ளார் என்று திருத்தந்தை இச்செய்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது பிரிவால் துயருறும் உறவினர்கள், நண்பர்கள், ஆகியோருக்கு தன் செபங்களையும், அருகாமையையும் வெளியிட்டுள்ள திருத்தந்தை, உயிர்ப்பின் நம்பிக்கையுடன், அவரது அடக்கத் திருப்பலியில் கலந்துகொள்ளவிருக்கும் அனைவரோடும் தானும் ஆன்மீக வழியில் ஒன்றித்திருப்பதாக இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

காமரூன் நாட்டின் Kikaikelaki என்ற ஊரில் 1930ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி பிறந்த கிறிஸ்தியான் தூமி அவர்கள், 1966ம் ஆண்டு அருள்பணியாளராக, அருள்பொழிவு செய்யப்பட்டார்.

1980ம் ஆண்டு, சனவரி 6ம் தேதி, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், அருள்பணி தூமி அவர்கள், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களால் ஆயராக திருப்பொழிவு பெற்றார்.

1984ம் ஆண்டு Garoua உயர் மறைமாவட்டத்தின் பேராயராகப் பொறுப்பேற்ற தூமி அவர்களை, 1988ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், கர்தினாலாக உயர்த்தினார்.

1991ம் ஆண்டு முதல் Douala உயர் மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றி வந்த கர்தினால் தூமி அவர்கள், 2009ம் ஆண்டு, தன் 79வது வயதில் பணி ஒய்வு பெற்றார்.

காமரூன் நாட்டின் முதல் கர்தினாலாக பணியாற்றிய கர்தினால் தூமி அவர்கள், 2021ம் ஆண்டு, ஏப்ரல் 2, புனித வெள்ளியன்று, தன் 91வது வயதில் இறையடி சேர்ந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 April 2021, 12:24