தேடுதல்

Vatican News
அல்லேலூயா வாழ்த்தொலி  உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ்  (AFP or licensors)

மருத்துவப் பணியாளர்கள், சமுகப் பணியாளர்களுக்கு சிறப்பு நன்றி

மக்களுக்குத் தொண்டாற்றுவோர் அனைவரும், இறைஇரக்க நடவடிக்கைகளின் உறுதியான சான்றுகளாக உள்ளார்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இறைஇரக்கத்தின் ஞாயிறை முன்னிட்டு, உரோம் நகரின் Santo Spirito in Sassia எனும் கோவிலில் காலை திருப்பலி நிறைவேற்றி, அதன் இறுதியில் அல்லேலூயா வாழ்த்தொலி  உரையும் வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோயாளிகளிடையே பணியாற்றுவோர், நோயுற்றோர், புலம்பெயர்ந்தோர், சமூகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்போர் ஆகிய அனைவருக்கும் தன் சிறப்பு வாழ்த்துக்களை வெளியிட்டார்.

உரோம் நகரில், இறைஇரக்கத்தின் திருத்தலமாக விளங்கும், இக்கோவிலில் ஞாயிறு திருப்பலியில் கலந்துகொண்ட பங்குமக்கள், நோயுற்றோர், தாதியர், மாற்றுத்திறனாளிகள், புலம்பெயர்ந்தோர், மருத்துவமனை அருள்சகோதரிகள், மக்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வப் பணியாளர்கள் என அனைவரையும் நன்றியுடன் நினைவுகூர்வதாக தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்கள் அனைவரும் இரக்க நடவடிக்கைகளின் உறுதியான சான்றுகளாக உள்ளனர் எனவும் தெரிவித்தார்.

மக்களுக்காக உழைக்கும் மருத்துவப் பணியாளர்களும், சமூகப் பாதுகாப்புத் தொண்டர்களும், துன்பத்தில் இருப்போருக்கு அருகாமை, சேவை, மற்றும் அக்கறையின் சான்றுகளாக உள்ளார்கள் என்பதையும் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இவர்கள் இறைஇரக்கத்தைப் பெற்று, அதன் வழியாக, மற்றவர்களை இரக்கமுடன் நடத்துவார்களாக, என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

இத்திருப்பலிக்கு ஏற்பாடு செய்து, சமூகத்தொடர்பு சாதனங்கள் வழி மக்களைச் சென்றடைய உதவிய அனைவருக்கும் தன் தனிப்பட்ட நன்றியையும் வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் அன்னையும், இரக்கத்தின் தாயுமாகிய கன்னிமரியா, இறைஇரகக்கத்தைப் பெற்றுத்தருவாராக என வேண்டுதல் செய்து தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையை நிறைவுச் செய்தார்.

இறைஇரக்க ஞாயிறு திருப்பலிக்குப்பின் வழங்கப்பட்ட அல்லேலூயா வாழ்த்தொலி  உரையின் இறுதியில், அன்றைய திருப்பலியில் கலந்து கொண்ட நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள், சமூகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்போர், அகதிகள், புலம்பெயர்ந்தோர் ஆகிய அனைவரையும், திருப்பலிப் பீடத்தின் முன் ஒவ்வொருவராக சந்தித்து, தன் வாழ்த்துக்களை வெளியிட்டார் திருத்தந்தை.

கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே விசுவாசிகள் திருப்பலியில் பங்குபெற அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

11 April 2021, 12:54