La Soufrière எரிமலை La Soufrière எரிமலை 

Saint Vincent தீவு மக்களுடன் திருத்தந்தை ஒருமைப்பாடு

கரீபியன் கடலின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள Saint Vincent, மற்றும், Grenadines நாடு, முப்பதுக்கும் மேற்பட்ட தீவுகளையும், மண்திட்டுகளையும் உள்ளடக்கியது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கரீபியன்  பகுதியிலுள்ள Saint Vincent, மற்றும், Grenadines தீவு நாட்டின் La Soufrière சக்திவாய்ந்த எரிமலை தொடர்ந்து வெடித்ததையடுத்து, அதில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், மற்றும், தலத்திருஅவையின் அதிகாரிகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார்.

அந்நாட்டிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ள தந்திச் செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரில், Saint Vincent மற்றும், Grenadines தீவு நாட்டின் தலத்திருஅவைக்கு அனுப்பியுள்ளார்.

இந்தப் பேரிடரால், தங்கள் வீடுகளைவிட்டு கட்டாயமாகப் புலம்பெயர்ந்துள்ள ஏராளமான மக்களோடு ஆன்மீக முறையில், திருத்தந்தை ஒன்றித்திருப்பதாகவும், இடர்துடைப்பு அவசரகாலப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள், மற்றும், உதவிகள் ஆற்றிவரும் தன்னார்வலர்களுக்காக, திருத்தந்தை சிறப்பாக செபிப்பதாகவும், அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் தோழமையுணர்வு

மேலும், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்களும், Saint Vincent மற்றும், Grenadines தீவு நாட்டின் அரசு, மற்றும், மக்களோடு, தன் தோழமையுணர்வைத் தெரிவித்துள்ளார்.

உலகம் கோவிட்-19 பெருந்தொற்றின் கடும் தாக்கத்தையும், அத்தீவு நாடு, புயல் வீசும் காலநிலையையும் எதிர்கொண்டுவருகின்ற இவ்வேளையில், இந்த எரிமலை வெடிப்பு இடம்பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், அத்தீவு நாடு மேற்கொண்டுவரும், இடர்துடைப்புப் பணிகளுக்கு. ஐ.நா., தன் முழு ஆதரவை வழங்கும் என்று உறுதியளித்துள்ளார்.

அத்தீவு நாட்டில் மிகப் பெரிய தீவாகிய Saint Vincentலுள்ள, La Soufrière எரிமலை, நான்காயிரம் அடி உயரம்கொண்டது. 1979ம் ஆண்டிலிருந்து அமைதியாக இருந்த இந்த எரிமலை, கடந்த ஆண்டு டிசம்பரில், மிகச் சிறிய அளவில் புகைகளையும், தூசிகளையும் வெளியிட்டது. இம்மாதம் 9ம் தேதி, அது முழு அளவில் வெடித்து புகைகளை வெளியிடத் தொடங்கியது. அப்பகுதியிலிருந்து வெளியேறிய ஏறத்தாழ 15 ஆயிரம் மக்களுக்கு, அவசர உதவிகள் தேவைப்படுகின்றன என்று ஐ.நா. கூறியுள்ளது.

கரீபியன் கடலின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள Saint Vincent மற்றும், Grenadines நாடு, முப்பதுக்கும் மேற்பட்ட தீவுகளையும், மண்திட்டுகளையும் உள்ளடக்கியது. இவற்றில் ஒன்பதில் மக்கள் வாழவில்லை.(UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 April 2021, 14:53