மனித உரிமை போராளிகள் – ஏப்ரல் மாத செபக்கருத்து

மனித உரிமைகள் அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதற்காகப் போராடுவோர், எவ்வித விசாரணையும் இன்றி கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்படுகின்றனர் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனிதர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க உலகெங்கும் போராடிவருவோருக்காக இறைவேண்டல் செய்வோம் என்ற விண்ணப்பத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஏப்ரல் மாத இறைவேண்டல் கருத்தாக வெளியிட்டுள்ளார்.

மனித உரிமை போராளிகளின் துணிவும், உறுதியும்

‘திருத்தந்தையின் இறைவேண்டல் உலகளாவிய வலைத்தளம்’ என்ற அமைப்பு, ஏப்ரல் 6 இச்செவ்வாய் மாலையில் வெளியிட்ட “The Pope Video” காணொளியில், "அடிப்படை மனித உரிமைகளுக்காக போராடுவதற்கு, துணிவும், உறுதியும் தேவைப்படுகின்றன" என்ற சொற்களுடன் திருத்தந்தை தன் செபக்கருத்தை துவங்கியுள்ளார்.

ஸ்பானிய மொழியில் திருத்தந்தை தன் எண்ணங்களை வெளிப்படுத்தும் வேளையில், இந்தக் காணொளியில், உலகின் பல்வேறு நாடுகளில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், காட்சிகளாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

முதல், இரண்டாம், மூன்றாம் தரத்தினர்

மனித சமுதாயத்தில் உள்ளோரை, முதல், இரண்டாம், மூன்றாம் தரத்தினர் என்றும் இன்னும் சிலரை, தூக்கியெறியப்படும் தரத்தினர் என்றும் பிரித்துள்ளோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்காணொளியில், வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் அனைவருக்கும் சமமாகக் கிடைக்கவேண்டும் என்று வலியுறுத்தும் திருத்தந்தை, இந்த உரிமைகளைப் பெற்றுத்தரப் போராடுவோர், எவ்வித விசாரணையும் இன்றி கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்படுகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏப்ரல் மாத இறைவேண்டல்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள ஏப்ரல் மாத இறைவேண்டல் கருத்தில் கூறப்பட்டுள்ள எண்ணங்களின் தொகுப்பு இதோ:

"அடிப்படை மனித உரிமைகளுக்காக போராடுவதற்கு, துணிவும், உறுதியும் தேவைப்படுகின்றன. வறுமை, சமமற்ற நிலை, வேலைகள், நிலஉரிமை மற்றும் குடியிருப்பு மறுக்கப்படுதல், சமுதாய மற்றும் தொழில் உரிமைகள் பறிக்கப்படுதல் ஆகியவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன். மனித சமுதாயத்தில், முதல், இரண்டாம், மூன்றாம் தரத்தினர் மற்றும், தூக்கியெறியப்படும் தரத்தினர் என்று பிரிவுகள் நிலவுகின்றன. இது முறையல்ல, அனைவரும் சமமானவர்கள்.

ஒரு சில இடங்களில் மக்களின் மாண்பை காப்பதற்காக உழைப்பவர்கள், எவ்வித விசாரணையும் இன்றி கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மனிதரும், முற்றிலும் வளர்ச்சியடைய உரிமை பெற்றுள்ளனர். இந்த அடிப்படை உரிமையை எந்த நாடும் தடுக்கமுடியாது.

அனைத்து அதிகாரத்தையும் கொண்ட கொடுங்கோல் ஆட்சி, அடக்குமுறை அரசியல், குடியரசின் சீர்குலைவு ஆகியவற்றை எதிர்த்து, அடிப்படை உரிமைகளுக்காக தங்கள் உயிரையும் பணயம் வைத்து போராடுவோருக்காக இறைவேண்டல் செய்வோம். அவர்களின் தியாகமும், பணிகளும் மிகுந்த பலன்களை வழங்கவேண்டும் என்று செபிப்போம்."

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 April 2021, 16:24