கடல் வழியாக புலம்பெயர்ந்து வருவோருக்கு உதவும் குழு கடல் வழியாக புலம்பெயர்ந்து வருவோருக்கு உதவும் குழு  

மனித உயிர்களை இரக்கமின்மையால் இழப்பது அவமானத்திற்குரியது

திருத்தந்தை : அன்பின் வீரத்துவ சான்றுகளாக செயல்பட்டவர்களின் எடுத்துக்காட்டு, நாமும் நற்செய்தியை வாழ்வதில் தாராளமனதுடனும், மனவலிமையுடனும் செயல்பட நம்மை தூண்டுவதாக

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் வானொலி

மத்தியதரைக்கடலில் அண்மையில் உயிரிழந்த புலம்பெயர்ந்தோர், ஈராக் கோவிட் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தோர், St. Vincent மற்றும் Granadine தீவுகளில் இடம்பெற்ற எரிமலை வெடிப்பினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோர் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மத்தியதரைக்கடலில் மீண்டுமொருமுறை இடம்பெற்ற விபத்தில், 130 பேர் உயிரிழந்தது, மனித குலத்திற்கு பெரும் அவமானத்தைத் தருவதாக உள்ளது, ஏனெனில், இரண்டு நாட்களாக இவர்கள் உதவி கேட்டு விண்ணப்பித்தும், எவ்வித உதவியும் இவர்களை வந்தடையவில்லை, என்ற ஆழ்ந்த கவலையை, ஞாயிறு 'வானக அரசியே' வாழ்த்தொலி உரைக்குப்பின் வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மனித உயிர் இழப்புக்கள் குறித்து நாம் ஒவ்வொருவரும் நம்மையே கேள்வி கேட்கவேண்டிய நேரமிது என உரைத்தார்.

மனித உயிர்களை இவ்வாறு இழப்பது அவமானத்திற்குரிய ஒரு செயல் என்ற கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்பம் நிறைந்த இத்தகையப் பயணத்திற்கு தள்ளப்பட்டுள்ள இந்த மக்களுக்காக, ஒவ்வொருவரும் இறைவேண்டல் செய்வோம், என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார்.

ஈராக் நாட்டில், கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கிவந்த, பாக்தாத் மருத்துவமனையில் இடம்பெற்ற தீ விபத்தில், இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளது குறித்து கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிரிழந்தோருக்கென இறைவேண்டல் புரியுமாறு அழைப்பு விடுத்தார்.

St. Vincent மற்றும் Granadine தீவுகளில் இடம்பெற்ற எரிமலை வெடிப்பால், இழப்புக்களையும், துயரங்களையும், அடைந்துள்ள மக்களை நோக்கி, தன் எண்ணங்கள் செல்வதாகவும், அவர்களுடன் தன் நெருக்கத்தை வெளியிடுவதாகவும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், ஏப்ரல் 23, கடந்த வெள்ளியன்று, குவாத்தமாலா நாட்டின் Santa Cruz del Quiché எனுமிடத்தில் பத்து மறைசாட்சிகள், அருளாளர்களாக அறிவிக்கப்பட்டது குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் திருஇதய மறைபோதகசபையைச் சேர்ந்த 3 அருள்பணியாளர்களும், 7 பொதுநிலையினரும், 1980 மற்றும் 91 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்டக் காலத்தில், வறியோரை பாதுகாக்கும் பணியில், மறைசாட்சிகளாக கொல்லப்பட்டது குறித்து எடுத்துரைத்தார்.

நீதி, மற்றும் அன்பின் வீரத்துவ சான்றுகளாக செயல்பட்ட இவர்களின் எடுத்துக்காட்டு, நாமும், நற்செய்தியை வாழ்வதில், தாராளமனதுடனும், மனவலிமையுடனும் செயல்பட நம்மை தூண்டுவதாக, என்று மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 April 2021, 10:58