சிறாரும், இளையோரும் வடிவமைத்த சிலுவைப்பாதை

கோவிட்-19 உருவாக்கியுள்ள நெருக்கடியில், நம்பிக்கையைக் கொணரும் வகையில், இவ்வாண்டின் சிலுவைப்பாதை சிந்தனைகளை உருவாக்கும் பொறுப்பை, குழந்தைகள் மற்றும் இளையோரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒப்படைத்திருந்தார்.

ஜெரோம் லூயிஸ் – வத்திக்கான் செய்திகள்

ஏப்ரல் 2, புனித வெள்ளி மாலை 9 மணிக்கு, மனித நடமாட்டம் அதிகமின்றி, அதிக ஒளியின்றி காணப்பட்ட புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற சிலுவைப்பாதை பக்தி முயற்சியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்னின்று நடத்தினார்.

கோவிட்-19 பெருந்தொற்றினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றி, சென்ற ஆண்டைப்போலவே, இவ்வாண்டும், மக்களின் பங்கேற்பு அதிகமின்றி நடைபெற்ற சிலுவைப்பாதை, இந்தப் பெருந்தொற்று மனித குடும்பத்தின் மீது சுமத்தியுள்ள தனிமையை உணர்த்தி நின்றது.

நம்பிக்கையைக் கொணரும் சிலுவைப்பாதை

இருப்பினும், இச்சூழலில் நம்பிக்கையைக் கொணரும் வகையில், வருங்காலத் தலைமுறையினர் உள்ளனர் என்பதை உணர்த்த, இவ்வாண்டின் சிலுவைப்பாதை சிந்தனைகளை உருவாக்கும் பொறுப்பை, குழந்தைகள் மற்றும் இளையோரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒப்படைத்திருந்தார்.

இத்தாலியின் உம்பிரியா (Umbria) மாநிலத்தைச் சேர்ந்த “Foligno I” என்ற Agesci சாரணர் இயக்கம், மற்றும், உரோம் மாநகரின் உகாண்டா புனித மறைசாட்சிகள் பங்குத்தளச் சாரணர் இயக்கத்தைச் சார்ந்த சிறார் ஆகியோர், சிலுவைப்பாதையின் 14 நிலைகளுக்கும் உரிய சிந்தனைகளை உருவாக்கியிருந்தனர்.

அத்துடன், இந்தச் சிலுவைப்பாதை பக்திமுயற்சியின்போது பயன்படுத்தப்பட்ட உருவப்படங்களை, “இறையன்பின் அன்னை (Mater Divini Amoris) இல்லம்” மற்றும், “Tetto Casal Fattoria இல்லம்” ஆகிய சிறார் பராமரிப்பு இல்லங்கள் இரண்டிலும் வாழ்கின்ற சிறார் தயாரித்திருந்தனர்.

புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில், ஒளி விளக்குகளுடன் உருவாக்கப்பட்டிருந்த தடத்தில், ஒரு சில குழந்தைகள், இளையோர், மற்றும் அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் சிலுவை ஒன்றை கையிலேந்தி நடந்து செல்ல, ஒவ்வொரு நிலைக்கும் உருவாக்கப்பட்டிருந்த சிந்தனைகளை குழந்தைகளும், இளையோரும் வாசித்தனர்.

புனித வெள்ளி  சிலுவைப்பாதை
புனித வெள்ளி சிலுவைப்பாதை

சிலுவைப்பாதை பக்திமுயற்சி பாரம்பரியம்

ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன், 1964ம் ஆண்டு, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், சிலுவைப்பாதை பக்திமுயற்சியில் மறுமலர்ச்சியை உருவாக்கும் நோக்கத்தில், புனித வெள்ளியன்று, உரோம் நகரில் அமைந்துள்ள கொலோசேயும் என்ற அரங்கத்தைச் சுற்றி, மக்களின் பங்கேற்புடன் நடைபெற்ற, சிலுவைப்பாதையை முன்னின்று நடத்தினார்.

கடந்த 50 ஆண்டுகளாக, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருத்தந்தை பிரான்சிஸ் ஆகியோர் பின்பற்றி வந்த இந்த சிலுவைப்பாதை பாரம்பரியம், கோவிட்-19 நெருக்கடியின் காரணமாக, கொலோசேயும் திடலிலிருந்து மாற்றப்பட்டு, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் 2020 மற்றும் 2021 ஆகிய இரு ஆண்டுகள் நடத்தப்பட்டன.

புனித வெள்ளி  சிலுவைப்பாதை
புனித வெள்ளி சிலுவைப்பாதை

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 April 2021, 10:30