அருளாளர் மருத்துவர் கிரெகோரியோ  அருளாளர் மருத்துவர் கிரெகோரியோ  

மருத்துவர் கிரெகோரியோ பன்னாட்டு பணியாளர்

ஏழைகளின் மருத்துவர்” என்று அறியப்பட்ட மருத்துவர் கிரெகோரியோ அவர்கள், பாரிஸ், பெர்லின், மத்ரித், நியுயார்க் போன்ற நகரங்களில் கல்வி கற்றவர். இவர் புகழ்பெற்ற நுண்கிருமியியல் நிபுணர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மருத்துவரான இறை ஊழியர் ஹோசே கிரெகோரியோ ஹெர்னான்டெஸ் சிஸ்நெரோஸ் (José Gregorio Hernández Cisneros) அவர்கள், ஏப்ரல் 30, இவ்வெள்ளியன்று, வெனெசுவேலா நாட்டுத் தலைநகர் கரகாசில் அருளாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிகழ்வுக்கு, காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த காணொளிச் செய்தியை, வெனெசுவேலா நாட்டு ஆயர்கள் மற்றும், மக்களுக்கென்று அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மருத்துவர் கிரெகோரியோ அவர்கள், தனிப்பட்ட வாழ்விலும், பொது வாழ்விலும், நன்மைத்தனமும், நற்பண்புகளும் நிறைந்தவர் என்று பாராட்டியுள்ளார்.

ஏழைகளின் மருத்துவர்

“ஏழைகளின் மருத்துவர்” என்று அறியப்பட்ட மருத்துவர் கிரெகோரியோ அவர்கள், பாரிஸ், பெர்லின், மத்ரித், நியுயார்க் போன்ற நகரங்களில் கல்வி கற்றதன் வழியாக, புகழ்பெற்ற நுண்கிருமியியல் நிபுணராக மாறியிருந்தார், மற்றும், இவர், 1919ம் ஆண்டில், வாகன விபத்தில் ஒன்றில் இறைபதம் சேர்ந்தார்.

மக்களின் மருத்துவரான இவர், Coromoto அன்னை மரியாவோடு சேர்ந்து,  இறைவனிடம், தன் நாட்டு மக்களுக்காகவும், நம் அனைவருக்காகவும் மன்றாடி வருகிறார் என்று, வெனெசுவேலா மக்கள் ஏற்கனவே வைத்திருக்கும் நம்பிக்கையை திருஅவை இப்போது உறுதிசெய்கிறது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

பன்னாட்டு பணியாளர்

மருத்துவர் ஹோசே கிரெகோரியோ அவர்கள், கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்திருந்த சீடர், நற்செய்தியை தன் வாழ்வின் ஆதாரமாகக்கொண்டவர், தன்னடக்கம், மற்றும், தாழ்ச்சிக்கு எடுத்துக்காட்டாய் விளங்கியவர் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர் பன்னாட்டு அளவில் தொண்டாற்றிய மனிதர் என்று கூறியுள்ளார்.

வாழ்வைப் பாதுகாப்பதற்கும், வரலாற்றின் சவால்களை எதிர்கொள்வதற்கும் தன்னையே அர்ப்பணித்திருந்த இவர், நல்ல சமாரியர் போன்று, எவரையும் ஒதுக்காமல், அனைத்து குடிமக்களுக்கு ஆற்றிய பணி வியப்படையச் செய்கின்றது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

வெனெசுவேலாவில் மக்கள் கடினமான காலத்தில், குறிப்பாக, கோவிட்-19 பெருந்தொற்றின் துயரச்சூழலில் வாழ்ந்துவரும் இவ்வேளையில், மருத்துவர் ஹோசே கிரெகோரியோ அவர்கள் அருளாளராக உயர்த்தப்படும் நிகழ்வு நடைபெறுகின்றது, இது அந்நாட்டிற்கு சிறப்பு ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும் என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

வெனெசுவேலாவில், மருத்துவர் ஹோசே கிரெகோரியோ அவர்கள் அருளாளராக உயர்த்தப்படும் நிகழ்வையொட்டி, உரோம் இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், அமைதி அறிவியல் துறை கல்விக்கு, இணை பாதுகாவலராக அவர் அறிவிக்கப்பட்டார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 April 2021, 16:26