இந்தோனேசியா, கிழக்கு தீமோர் வெள்ளம் – திருத்தந்தை விண்ணப்பம்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
அண்மைய வெள்ளப்பெருக்கால், இந்தோனேசியா, மற்றும் கிழக்கு தீமோர் நாடுகளில் பாதிக்கப்பட்டோருக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 7, இப்புதனன்று வழங்கிய மறைக்கல்வி உரையின் இறுதியில், விண்ணப்பம் ஒன்றை வெளியிட்டார்.
இந்த வெள்ளத்தில் உயிரிழந்தோரை, இறைவன் தன் இல்லத்தில் வரவேற்குமாறும், உறவுகளை இழந்தோரின் குடும்பங்கள் ஆறுதல் அடையவும், இந்த வெள்ளத்தில் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தோர் உதவிகள் பெறவும் தான் இறைவேண்டல் செய்வதாக திருத்தந்தை கூறினார்.
ஏப்ரல் 4 உயிர்ப்புப் பெருவிழாவன்று, இந்தோனேசியா மற்றும் கிழக்கு தீமோர் பகுதிகளைத் தாக்கிய Seroja புயலால் இதுவரை, இந்தோனேசியாவில் 133 பேரும், கிழக்குத் தீமோரில் 27 பேரும் இறந்துள்ளனர் என்றும், இன்னும் வெள்ளத்திலும், சகதியிலும் புதையுண்டோரைக் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றும், செய்திகள் கூறுகின்றன.
மேலும், ஏப்ரல் 7 இப்புதனன்று, 'உலக நல நாள்' சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெருந்தொற்று, தடுப்பு மருந்து ஆகிய எண்ணங்களை மையப்படுத்தி, டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
"ஒவ்வொருவருக்கும், குறிப்பாக, மிகவும் நலிந்தோருக்கு, உதவி தேவை. அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே, நீதியான, நலமான, உலகைக் கட்டியெழுப்பமுடியும். பெருந்தொற்றை எதிர்த்துப்போராட, நாம் அனைவருமே அழைக்கப்பட்டுள்ளோம், தடுப்பு மருந்து, இந்த போராட்டத்தின் மிக முக்கிய கருவி" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.
ஒவ்வொரு நாளும், @pontifex என்ற வலைத்தள முகவரியில், திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.
ஏப்ரல் 7, இப்புதன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 3,177 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 89 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.