கோவிட் நோயாளிகளுக்கென திருத்தந்தை வழங்கிய ஊர்தி மருத்துமனை ஆசிர்வதித்து துவக்கிவைக்கப்பட்டது கோவிட் நோயாளிகளுக்கென திருத்தந்தை வழங்கிய ஊர்தி மருத்துமனை ஆசிர்வதித்து துவக்கிவைக்கப்பட்டது 

அர்மேனியா நாட்டிற்கு திருத்தந்தையின் மருத்துவ உதவிகள்

திருத்தந்தையின் பெயரால், வத்திக்கானின் நல்ல சமாரியர் அமைப்பு, அர்மேனியா நாட்டிற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை அனுப்பியுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் வானொலி

அர்மேனியா நாட்டில் பரவியுள்ள கோவிட் பெருந்தொற்றை தடுக்கும் திட்டங்களுக்குத் தேவையான மருத்துவ உதவிக்கருவிகளை, கொடையாக அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அர்மேனியாவின் Yerevan பகுதி கத்தோலிக்க சமுதாயத்தின் பங்கேற்புடன் நடைபெற்ற ஒரு நிகழ்வில், அந்நாட்டிற்கான திருப்பீடத் தூதர், பேராயர் José Bettencourt, மற்றும் Redemptoris Mater மருத்துவமனை இயக்குனர், அருள்பணி Mario Cuccarollo ஆகியோர் இணைந்து, திருத்தந்தை, அந்நாட்டிற்கு வழங்கிய மருத்துவ சாதனங்களை, ஆசிர்வதித்து துவக்கி வைத்தனர்.

கோவிட் பெருந்தொற்றால் துயருறும் மக்களுக்கு உதவுவதற்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மருத்துவ உதவிப் பொருட்களுள், அனைத்து மருத்துவ கருவிகளையும் உள்ளடக்கிய மருத்துவ வாகனமும் அடங்கும்.

Kanakar நகரிலுள்ள கோவிலில், ஏப்ரல் 25, ஞாயிறு வழிபாட்டிற்குப் பின்னர், கோவிட் நோயாளிகளுக்கான இந்த ஊர்தி மருத்துமனை துவக்கிவைக்கப்பட்டது.

அர்மேனியாவின் கத்தோலிக்க நல ஆதரவு திட்ட மையங்கள், கோவிட் நோயாளிகளை சோதிக்கவும், அவர்களுக்கு சிகிச்சை வழங்கவும் என பல மருத்துவ உபகரணங்களையும் அனுப்பி உதவியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏற்கனவே கடந்த ஆண்டின் துவக்கத்தில் ஜார்ஜியா, மற்றும் அர்மேனியா நாட்டு காரித்தாஸ் அமைப்புக்கள், செயற்கை சுவாசக் கருவிகளைக் கொடுத்து உதவியுள்ள நிலையில், தற்போது திருத்தந்தையின் பெயரால் வத்திக்கானின் நல்ல சமாரியர் அமைப்பு, அந்நாட்டிற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை அனுப்பியுள்ளது.

கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு சிகிச்சைகளை வழங்குவதற்கு உதவும்வகையில், மருத்துவ உபகரணங்களை திருத்தந்தையிடமிருந்து பெற்றுள்ள, அர்மேனியாவின் Ashotsk எனுமிடத்தில் உள்ள Redemptoris Mater கத்தோலிக்க மருத்துவமனை, கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக, தென் Caucasus பகுதி மக்களுக்கு சேவையாற்றிவருகிறது.

சிகிச்சை பெறுபவர்கள், தங்களால் இயன்றதை, கட்டணமாக வழங்கலாம் என உரைக்கும் இந்த மருத்துவமனை, வறியோருக்கு இலவச சிகிச்சையையும் வழங்கிவருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 April 2021, 11:10