தேடுதல்

புதன் மறைக்கல்வியுரையின்போது - 070421 புதன் மறைக்கல்வியுரையின்போது - 070421 

மறைக்கல்வியுரை : புனிதர்களுடன் ஆன ஒன்றிப்பில் இறைவேண்டல்

புனிதர்கள் அனைவரும், நம்மோடு இணைந்து கடவுளை மகிமைப்படுத்தியபடியே, நமக்காக இடைவிடாமல் இறைவேண்டல் செய்து கொண்டிருக்கின்றனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக தன் நூலக அறையிலிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 7, இப்புதனன்று வழங்கிய மறைக்கல்வியுரை, கடந்த பல வாரங்களைப்போல், இவ்வாரமும், நேரடியாக ஒளிபரப்பானது. புனிதர்களுடன் ஆன ஒன்றிப்பில் இறைவேண்டல் என்ற தலைப்பில் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை. முதலில் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் 12ம் பிரிவிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டது.

எனவே, திரண்டு வரும் மேகம் போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித்தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மனஉறுதியோடு ஓடுவோமாக. 2நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம். அவர் தாம் அடையவிருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது, கடவுளது அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.(எபி 12,1-2)

இவ்வாசகத்திற்குப் பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே,  கிறிஸ்தவ இறைவேண்டல் குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று, புனிதர்களுடன் நாம் கொண்டிருக்கும் ஒன்றிப்பு குறித்து நோக்குவோம். நாம் இறைவேண்டல் மேற்கொள்ளும்போதெல்லாம், தனியார்கள் மற்றும் உலகின் தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட கடந்தகால, நிகழ்கால, வருங்கால இறைவேண்டல்கள் எனும் நீரோடையில் மூழ்குகிறோம். ஏனெனில், நாம் புனிதர்களோடு இணைந்து, கிறிஸ்துவின் உடலாகிய திருஅவையோடு கூடிய ஒன்றிப்பில் இறைவேண்டல் செய்கிறோம். திரண்டு வரும் மேகம் போல் சாட்சிகளாக (எபி 12:1)  நிற்கும் புனிதர்கள்,  அதாவது, நமக்கு அறியப்பட்டவர்கள், அறியப்படாதவர்கள் என அனைவரும், நம்மோடு இணைந்து கடவுளை மகிமைப்படுத்தியபடியே, நமக்காக இடைவிடாமல் இறைவேண்டல் செய்து கொண்டிருக்கின்றனர். நாம் புனிதர்களுக்கு வணக்கம் செலுத்துவது, இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையாயான இடையீட்டாளராக இருக்கும் கிறிஸ்துவுக்கு நெருக்கமாக நம்மைக் கொண்டுச்செல்கிறது. நாம் தொடர்ந்து இறைவேண்டல் செய்துவரும், இறந்துபோன நம் அன்புக்குரியவர்களுடன் ஒரு புதிரான ஒருமைப்பாட்டை கிறிஸ்துவில் நாம் உணர்கிறோம். இதே செபத்துடன் கூடிய ஒருமைப்பாட்டை, நாம் ஏழைகளுக்காகவும், துயருறுவோருக்காகவும், தேவையில் இருப்போருக்காகவும் இறைவேண்டல் செய்யும்போது அனுபவிக்கிறோம். இந்த சோதனை மிகுந்த காலங்களில், நாம் புனிதர்கள் எனும் கொடைக்காக இறைவனுக்கு நன்றி கூறுவதோடு,  நற்செய்தி அறிவிப்புக்கும், மனித குடும்ப மீட்புக்கும் என,   புனிதர்களின் பரிந்துரையில் நம்மை ஒப்படைப்போம்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 April 2021, 12:00

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >