27வது இபேரிய-அமெரிக்க உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட முக்கியத் தலைவர்கள் 27வது இபேரிய-அமெரிக்க உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட முக்கியத் தலைவர்கள் 

இபேரிய-அமெரிக்க உச்சி மாநாட்டிற்கு திருத்தந்தையின் செய்தி

மேம்பட்ட ஒரு சமுதாயத்தை உறுதி செய்வதற்கு, பன்னாட்டு கூட்டுறவு முயற்சிகள், வறிய நாடுகளின் கடன் தள்ளுபடி, சுற்றுச்சூழல் பராமரிப்பு ஆகிய பல அம்சங்கள் ஒருங்கிணைந்து செல்லவேண்டும் - திருத்தந்தையின் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியுள்ள நெருக்கடியால், ஒவ்வொரு நாடும் மேற்கொள்ளும் பெருமளவு தியாகங்களுடன், பன்னாட்டளவில் இடம்பெறும் கூட்டுறவு முயற்சிகளும் அவசியமாகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பன்னாட்டு கூட்டமொன்றுக்கு அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார்.

பிரான்ஸ், மற்றும் இஸ்பெயின் நாடுகளுக்கிடையே அமைந்துள்ள Andorra நாட்டில், ஏப்ரல் 21, இப்புதனன்று நடைபெற்ற 27வது இபேரிய-அமெரிக்க (Ibero-American) உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட அரசுத்தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

பாகுபாடுகளைப் பாராது பாதித்துள்ள கோவிட்-19

கலாச்சாரம், மதம், இனம், மொழி, பொருளாதார வேறுபாடு என்ற எவ்வித பாகுபாட்டையும் பாராது, அனைத்து மக்களையும் பாதித்துள்ள கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் உயிர் நீத்துள்ள மக்களுக்காகவும், அவர்கள் குடும்பங்களுக்காகவும் இறைவேண்டல் செய்கிறேன் என்ற சொற்களுடன் திருத்தந்தை தன் செய்தியைத் துவக்கியுள்ளார்.

துயரங்களையும், நெருக்கடிகளையும் உருவாக்கியுள்ள இந்த பெருந்தொற்றினால் வாழ்வை மட்டுமின்றி, வாழ்வாதாரங்களையும் இழந்து நிற்கும் கோடான கோடி மக்கள், இந்தப் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த அயராது அழைத்துவரும் மருத்துவப் பணியாளர்கள் ஆகியோரைக் குறித்து திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மிக விரைவானக் காலக்கட்டத்தில் கோவிட்-19 பெருந்தொற்றைத் தடுக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது பாராட்டுக்குரியது என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த தடுப்பு மருந்து மனித சமுதாயத்தில் அனைவரையும் அடையும் பொதுவான நன்மையை உறுதிசெய்வது அரசுகளின் கடமை என்பதையும் எடுத்துரைத்துள்ளார்.

இன்னும் மேம்பட்ட மனித சமுதாயத்தை உருவாக்க...

இந்தப் பெருந்தொற்றிலிருந்து வெளியேறும்போது, இன்னும் மேம்பட்ட ஒரு மனித சமுதாயத்தை நாம் உருவாக்க கடமைப்பட்டுள்ளோம் என்பதை தான் அடிக்கடி கூறிவந்துள்ளதை, இச்செய்தியில் மீண்டும் நினைவுறுத்தியுள்ள திருத்தந்தை, இந்த மேம்பட்ட சமுதாயத்தில், பொருளாதார இலாபம் முக்கிய குறிக்கோளாக அமையாமல், மனிதரின் முன்னேற்றம் முக்கிய இடம் வகிக்கவேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துள்ளார்.

மேம்பட்ட ஒரு சமுதாயத்தை உறுதி செய்வதற்கு, பன்னாட்டு கூட்டுறவு முயற்சிகள், வறிய நாடுகளின் கடன் தள்ளுபடி, சுற்றுச்சூழல் பராமரிப்பு ஆகிய பல அம்சங்கள் ஒருங்கிணைந்து செல்லவேண்டும் என்பதையும் திருத்தந்தை இச்செய்தியில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

Andorra நாட்டில், ஏப்ரல் 21, இப்புதனன்று நடைபெற்ற 27வது இபேரிய-அமெரிக்க உச்சி மாநாட்டில், இலத்தீன் அமெரிக்க கண்டத்தில் இஸ்பானிய மற்றும் போர்த்துகீசிய மொழிகள் பேசும் 19 நாடுகளின் தலைவர்களுடன், போர்த்துக்கல், இஸ்பெயின் மற்றும் Andorra நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 April 2021, 15:08