தாத்தாவும் பேரக்குழந்தையும் தாத்தாவும் பேரக்குழந்தையும் 

“எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்”

வயதானவர்களும், தாத்தா பாட்டிகளும் தங்களின் நம்பிக்கை வாழ்வால், இளையோரை உற்சாகப்படுத்தவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (மத்.28:20) என்ற, இயேசுவின் திருச்சொற்களை, வருகிற ஜூலை மாதம் 25ம் தேதி சிறப்பிக்கப்படும், தாத்தா பாட்டிகள் மற்றும், வயதுமுதிர்ந்தோர், முதல் உலக நாளுக்குரிய தலைப்பாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளார்.

திருத்தந்தை தேர்ந்தெடுத்துள்ள இத்தலைப்பு பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள, பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீட அவை, வயது முதிர்ந்த ஒவ்வொருவரோடும், குறிப்பாக, இந்த கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், அவர்கள் அனைவரோடும், ஆண்டவரும் திருஅவையும் மிக அருகாமையில் உளளனர் என்பதை, இந்த தலைப்பு வெளிப்படுத்துகின்றது என்று கூறியுள்ளது.

“எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்பது, இளையோர், மற்றும், முதியோர் இவர்களுக்கிடையே நிலவும் பகிர்வு, அருகாமை மற்றும், நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்றும், அவ்வறிக்கை கூறியுள்ளது.

வயதுமுதிர்ந்தோரின் வாழ்வில், பேரப்பிள்ளைகளும், இளையோரும் பங்குகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர், அதேநேரம், வயதானவர்களும், தாத்தா பாட்டிகளும் தங்களின் நம்பிக்கை வாழ்வால், இளையோரை உற்சாகப்படுத்தவேண்டும் என்றும்,  அவ்வறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

மேலும், வயதானவர்களும், தாத்தா பாட்டிகளும், நற்செய்தி அறிவிப்பு, இறைவேண்டல் ஆகிய மறைப்பணிகளையும்  கொண்டிருக்கின்றனர் என்றுரைக்கும் அவ்வறிக்கை, இந்த முதல் உலக நாளை, தலத்திருஅவைகள், மற்றும், நிறுவனங்களில் கொண்டாடுவதற்கு உதவியாக, வருகிற ஜூன் மாதம் பாதியில், சில மேய்ப்புப்பணி வழிகாட்டுதல்களை வழங்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்கள், www.amorislaetitia.va. என்ற இணையதள முகவரியில் பதிவுசெய்யப்படும் என்றும், பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீட அவை வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.  

இவ்வாண்டு சனவரி 31ம் தேதி திருத்தந்தை பிரகான்சிஸ் அவர்கள் வழங்கிய மூவேளை செப உரையின்போது, தாத்தா பாட்டிகள் மற்றும், வயதுமுதிர்ந்தோர் உலக நாள் பற்றி அறிவித்தார். இந்த உலக நாள், ஒவ்வோர் ஆண்டும், இயேசுவின் தாத்தா பாட்டிகளான, புனிதர்கள் சுவக்கீன் அன்னம்மாள் திருநாளுக்கு அருகில் வரும், ஜூலை மாதம் நான்காவது ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் என்றும் திருத்தந்தை அறிவித்தார்.

புனிதர்கள் சுவக்கீன் அன்னா திருநாள், ஜூலை மாதம் ஜூலை மாதம் 26ம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 April 2021, 15:22