கொலம்பியா நாட்டில் மருத்துவ உதவிகளுக்காக காத்திருக்கும் மக்கள் கொலம்பியா நாட்டில் மருத்துவ உதவிகளுக்காக காத்திருக்கும் மக்கள் 

கொலம்பியா நாட்டிற்கு திருத்தந்தையின் மருத்துவ உதவிகள்

கொலம்பியா நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ள உதவிகளில், சுவாசக்கருவிகள், முகக்கவசங்கள், மற்றும் மருத்துவப்பணியாளர்களைக் காக்கும் மூக்குக்கண்ணாடிகள் ஆகியவை அடங்கும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்றின் விளைவாக, அண்மைய நாள்களில், 7 இலட்சத்திற்கும் அதிகமானோரின் மரணத்தை கண்டுள்ள இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மீண்டும் ஒருமுறை மருத்துவ உதவிகளை அனுப்பியுள்ளார்.

2020ம் ஆண்டு, பிரேசில் நாட்டிற்கு, குறிப்பாக, அமேசான் பகுதியில் வாழ்வோருக்கு சுவாசக்கருவிகள், மருத்துவ முகக்கவசங்கள், மற்றும் ஏனைய மருத்துவ கருவிகளை வழங்கி உதவிகள் செய்த திருத்தந்தை, இம்முறை, கொலம்பியா நாட்டிற்கு உதவிகளை அனுப்பியுள்ளார்.

திருத்தந்தையின் தர்மப்பணிகளுக்குப் பொறுப்பாளரான கர்தினால் Konrad Krajewski அவர்களின் வழியே, கொலம்பியா நாட்டின் திருப்பீடத் தூதரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள உதவிகளில், சுவாசக்கருவிகள், முகக்கவசங்கள், மற்றும் மருத்துவப்பணியாளர்களைக் காக்கும் மூக்குக்கண்ணாடிகள் ஆகியவை அடங்கும்.

இந்த உதவிகளைப் பெற்றுக்கொண்ட கொலம்பியாவின் திருப்பீடத்தூதரான பேராயர் Luis Mariano Montemayor அவர்களும், Quibdó மறைமாவட்ட ஆயர் Juan Carlos Barreto Barreto அவர்களும், கொலம்பிய மக்கள் மீது திருத்தந்தை காட்டிவரும் அன்பும், அக்கறையும், இந்த நெருக்கடியான வேளையில், ஆறுதல் தருகின்றன என்று கூறியுள்ளனர்.

2020ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 23ம் தேதி சிறப்பிக்கப்பட்ட தன் பாதுகாவலரான புனித ஜார்ஜ் திருநாளன்று, இத்தாலி, இஸ்பெயின், ரொமேனியா நாடுகளில் கோவிட்-19 நோயுற்றோருக்கு உதவிகள் செய்துவந்த மருத்துவமனைகளுக்கு பல மருத்துவ உதவிகளை அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 April 2021, 14:20