தேடுதல்

Vatican News
நேரடி ஒளிபரப்பில் திருத்தந்தையின் மறைக்கல்வி உரை நேரடி ஒளிபரப்பில் திருத்தந்தையின் மறைக்கல்வி உரை  (Vatican Media)

மறைக்கல்வியுரை - இறைவேண்டல் செய்ய கற்றுத்தரும் ஆவியார்

கிறிஸ்துவின் கருணையும் மீட்பும் நிறைந்த அன்பிற்கு நாம் சான்றுகளாக விளங்கவும், இறைவனை நம் தந்தை என அழைக்கவும் தூய ஆவியார் நம்மைத் தூண்டுகிறார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

இறைவேண்டல் குறித்து புதன் மறைக்கல்வி உரைகளில் கருத்துக்களைப் பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், 'இறைவேண்டலும் தூய மூவொரு இறைவனும்', என்ற தலைப்பில், இரண்டாம் பகுதியைத் தொடர்ந்தார். இம்மாதம் 3ம் தேதி வழங்கிய மறைக்கல்வியுரையில், மூவொரு கடவுளின் வாழ்வுக்குள்ளும், இறையன்பின் முடிவற்ற மறையுண்மைக்குள்ளும் நுழைய நம் இறைவேண்டல் எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார் திருத்தந்தை.

கடந்த வார மறைக்கல்வியுரையோ, ஈராக் திருத்தூதுப்பயணம் பற்றியதாக இருந்தது. கோவிட்-19 கட்டுப்பாடுகளையொட்டி, தன் நூலக அறையிலிருந்தே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நேரடி ஒளிபரப்பின் வழியாக, மறைக்கல்வியுரையை வழங்க, அதன் துவக்கத்தில், யோவான் நற்செய்தியிலிருந்து ஒரு பகுதி வாசித்தளிக்கப்பட்டது. பின், திருத்தந்தையின் உரை துவங்கியது.

நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்.

“உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில், அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில், அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார். […] உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார். (யோவான் 14:15-17,25-26)

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, கிறிஸ்தவ இறைவேண்டல் குறித்த நம்  புதன் மறைக்கல்வித்தொடரில், நாம் எவ்வாறு தூய மூவொரு கடவுளின் வாழ்வில் இறைவேண்டல் வழியாக பங்குபெறுகிறோம் என்பது குறித்து நோக்கியுள்ளோம். தூய ஆவியார் எனும் கோடைக்காக, நாம், இயேசுவுக்கு நன்றியுரைக்கவேண்டும். நம் வாழ்விலும், இவ்வுலகிலும் கிறிஸ்துவின் பிரசன்னத்தை அறியத்தந்து, அதனை செயல்படுத்தும் தூய ஆவியார்தான்  நமக்கு இறைவேண்டல் செய்ய கற்றுத்தருகிறார். புனிதத்துவத்தை நோக்கிய அழைப்பில் நாம் வாழவும், கிறிஸ்துவின் கருணையும் மீட்பும் நிறைந்த அன்பிற்கு நாம் சான்றுகளாக விளங்கவும், இறைவனை நம் தந்தை என அழைக்கவும் தூய ஆவியார் நம்மைத் தூண்டுகிறார்.  நமக்கு முன் வழிகாட்டிச் சென்றுள்ள, எண்ணற்ற புனிதர்கள்போல், இறைவேண்டல் மற்றும் பிறரன்பு செயல் வழியாக, நாமும் தூய ஆவியாரின் கொடைகளுக்கு நம் வாழ்வைத் திறக்கின்றோம். நம் மறைக்கல்வி நமக்கு எடுத்துரைப்பதுபோல், இறைவேண்டல் புரிவோரின் எண்ணிக்கையும், இறைவேண்டலின் பாதைகளும் பெருமெண்ணிக்கையில் உள்ளன. ஆனால், அனைத்து இறைவேண்டல்களிலும் செயலாற்றும் தூய ஆவியார் ஒருவரே. தூய ஆவியாரின் ஒன்றிப்பில் கிறிஸ்தவ இறைவேண்டல் என்பது, திருஅவையின் இறைவேண்டலாகிறது. தூய மூவொரு இறைவனின் வாழ்வில் நம்மை முற்றிலுமாக கவர்ந்திழுக்கவும், நம் தினசரி வாழ்வில் நம்மை வழிநடத்தவும், மனித குடும்பம், அன்பிலும் ஒன்றிப்பிலும் வளரவும் உதவும்வண்ணம், தூய ஆவியார், தன் கொடைகளை, திருஅவைமீது பொழியுமாறு மன்றாடுவோம்

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் இறுதியில், பல்வேறு துயர்களைச் சந்தித்துவரும் பாரகுவாய் நாட்டில் அமைதி நிலவ வேண்டும் எனவும், எண்ணற்ற மக்களின், குறிப்பாக, இளையோரின் உயிர்களை பலிவாங்கிக் கொண்டிருக்கும் மியான்மார் நாட்டின் துயர் நிலைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார். பின், தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அனைவருக்கும் அளித்தார்.

17 March 2021, 11:00