ஈராக் அரசுத்தலைவர் மாளிகையில் திருத்தந்தையின் உரை 050321 ஈராக் அரசுத்தலைவர் மாளிகையில் திருத்தந்தையின் உரை 050321 

அரசு அதிகாரிகளுக்கு திருத்தந்தை வழங்கிய உரை

திருத்தந்தை : அனைவரும் மாண்புடன்கூடிய வாழ்வை அனுபவிக்கும் வண்ணம், ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

அரசுத்தலைவரே, அரசு அதிகாரிகளே, பன்னாட்டுத் தூதர்களே,  சமுதாயத் தலைவர்களே, சகோதரர்களே, சகோதரிகளே,

ஆபிரகாம், மற்றும் எண்ணற்ற இறைவாக்கினர்களின் வாழ்வோடு தொடர்புடைய, கலாச்சாரத் தொட்டிலான இந்நாட்டில் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ள, எனக்கு கிடைத்த இவ்வாய்ப்பிற்காக நன்றிகூறுகிறேன்.

இந்நாட்டு ஆயர்கள், அருள்பணியாளர்கள், ஆண், பெண் துறவிகள், மற்றும் கத்தோலிக்கத் திருஅவையின் விசுவாசிகள் அனைவருக்கும் என் பாசமிகு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஈராக் சமுதாயத்தில் அவர்கள் விசுவாசம், நம்பிக்கை, மற்றும் அன்பின் சான்றுகளாக செயல்பட்டுவருவதற்கு மேலும் ஊக்கமளிக்கும் நோக்கத்தில் இங்கு வந்துள்ளேன். அதேவேளை, ஏனைய கிறிஸ்தவ சபைகளுக்கும், மதக் குழுக்களுக்கும், இஸ்லாமிய மதத்தினருக்கும், ஏனைய மத பாரம்பரியங்களை பின்பற்றுவோருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அமைதியின் மதிப்பீடுகளிலும், ஒருவரையொருவர் புரிந்துகொள்தலிலும், மனிதகுல உடன்பிறந்த நிலையிலும், இணக்கவாழ்வில் ஒன்றிணைந்து வாழ்வதிலும், நாம்  வேரூன்றியவர்களாக இருக்கவேண்டும் என்பதையே, அனைத்து மதங்களும் நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றன.

தற்போது உலகை துயரத்தில் ஆழ்த்திவரும் கோவிட்-19 பெருந்தொற்று, அனைவருக்கும் தடுப்பூசி சரிசமமாக கிடைப்பதற்கு வழிவகைச் செய்யப்படுவது உட்பட, பல்வேறு ஒன்றிணைந்த நடவடிக்கைகளுக்கு அழைப்புவிடுக்கிறது. இது மட்டும் போதாது. நம் வாழ்க்கை முறைகள் குறித்தும், நம் வாழ்வின் அர்த்தம் குறித்தும் நாம் மீண்டும் சிந்திக்க, இந்த பெருந்தொற்று காலம் அழைப்புவிடுக்கிறது.

பல்வேறு  கலாச்சாரங்களுடனும், மதங்களுடனும், கொள்கைகளுடனும் அமைதியில் இணைந்து வாழமுடியும் என்ற உண்மையில் நம்பிக்கை வைக்காததால் விளைந்த போர், பயங்கரவாதம், பிரிவினை மோதல்கள் போன்றவற்றின் அழிவுகளை, கடந்த பல ஆண்டுகளாக, இந்த ஈராக் நாடு அடைந்துவருவதைக் காண்கிறோம்.

தங்கள் மத நம்பிக்கைகளுக்காக பல்வேறு வகைகளில் சித்ரவதைகளை அனுபவித்துள்ள இந்நாட்டின் யாசிதி (Yazidis) இன மக்களை நோக்கி, என் எண்ணங்கள் செல்கின்றன. நமக்குள் காணப்படும் பிரிவினையையும் தாண்டி, நாமனைவரும் ஒரே மனித குடும்பத்தின் அங்கத்தினர்கள் என செயல்படத் துவங்கும்போதுதான், நம் வருங்காலத் தலைமுறைக்கென, நீதியும் மனிதாபிமானமும் நிறைந்த ஓர் உலகை கட்டியெழுப்பும் பணிகளைத் துவக்கமுடியும்

ஒரு சமுதாயத்தில் காணப்படும் பன்முகத்தன்மை, மோதல்களுக்கு காரணமாகாமல், இணக்கமான ஓர் ஒத்துழைப்பை வழங்க உதவமுடியும் என்பதை, இன்றைய ஈராக் நாடு, உலகமனைத்திற்கு, குறிப்பாக, மத்தியகிழக்குப் பகுதிக்கு காட்டமுடியும். உடன்பிறந்த உணர்வுடன்கூடிய ஒன்றிணைந்த வாழ்வு என்பது, சட்டத்திற்கு மதிப்பையும், நீதிக்குரிய பாதுகாப்பையும் உள்ளடக்கிய நேர்மையான உரையாடலுக்கு அழைப்புவிடுக்கிறது.

அனைவரும் ஒரே கடவுளின் குழந்தைகள் என்பதை மனதில் கொண்டு, அனைத்து மனிதர்களின் மத நம்பிக்கைகளும் மதிக்கப்படுவதுடன், அவர்களின் உரிமைகளும் மதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என, திருப்பீடம், ஈராக், மற்றும் ஏனைய நாடுகளின் அதிகாரிகளுக்கு, தொடர்ந்து, சோர்வின்றி, அழைப்புவிடுத்து வருகின்றது. உடன்பிறந்த நிலை என்ற ஒன்றிப்பின் அடையாளத்துடன் வாழ்வது என்பது, ஒரு சமுதாயத்தின் அங்கத்தினர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஒருமைப்பாட்டுடன் வாழ்வதாகும்.

உதவி அதிகமாகத் தேவைப்படும் மக்களுக்கும், துயருறுவோருக்கும், அக்கறையுடன் பணியாற்றுவதையும், இது எதிர்பார்க்கிறது. வன்முறைகளாலும், சித்ரவதைகளாலும், பயங்கரவாதத்தாலும் பாதிக்கப்பட்டு, தங்கள் குடும்ப அங்கத்தினர்களை இழந்துள்ள மக்களைக் குறித்து எண்ணிப்பார்க்கிறேன். ஏழ்மையாலும், வேலைவாய்ப்பின்மையாலும், துயருறும் மக்களை நோக்கியும் என் எண்ணங்கள் செல்கின்றன.

அனைவரின் வளர்சசி நடவடிக்கைகளில் நமக்கும் பொறுப்புண்டு என்பதை மனதில் கொண்டு, கல்வி, பொதுவான இல்லமாகிய பூமியைக் காத்தல் போன்றவைகளில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கவேண்டியது அவசியம். அனைவரும் மாண்புடன்கூடிய வாழ்வை அனுபவிக்கும் வண்ணம், ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். இந்த உடன்பிறந்த உணர்வுடன் கூடிய ஒருமைப்பாட்டை வளர்க்க, அரசியல் துறையில் உள்ளோரும் ஆதரவு வழங்கவேண்டும்.

ஊழல் எனும் நோய், அதிகார அத்துமீறல், சட்டம் மதிக்கப்படாமை போன்றவைகளுக்கு எதிரான செயல்பாடுகள் தேவைப்படுகின்றன. இதுமட்டுமல்ல, நீதியை ஊக்குவித்தல், நேர்மைக்கு ஆதரவளித்தல், வெளிப்படைத்தன்மை போன்றவைகளை வளர்ப்பதோடு, இதனோடு தொடர்புடைய அமைப்புக்களுக்கு ஊக்கமளிப்பதும் அவசியம்.

இந்நாட்டில் இடம்பெற்ற மிகப்பெரிய அழிவுகளுக்கும், கொடுமைகளுக்கும் இறைமன்னிப்பை வேண்டும், அமைதியின் திருப்பயணியாக இந்நாட்டிற்கு நான் வந்துள்ளேன். இந்நாட்டிற்காக தொடர்ந்து நீண்டகாலமாக இறைவேண்டல் செய்து வருகிறோம். இந்நாட்டில் அமைதி நிலவவேண்டும் என, திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள், தொடர்ந்து இறைவேண்டல் செய்ததோடு, தன் துன்பங்களையும் இதற்காக இறைவனிடம் ஒப்படைத்தார். கடவுள் எப்போதும் நம் குரல்களுக்கு செவிமடுப்பதுபோல், நாமும் அவர் குரலுக்கு செவிமடுத்து, அவர் பாதையில் நடைபோடவேண்டும்.

ஆயுதங்கள் அமைதியடையட்டும், அதன் பரவல் தடுக்கப்படட்டும். பிரிவினை எண்ணங்கள் மறையட்டும். அமைதியைக் கட்டியெழுப்புவோர், ஏழைகள், எளியமனத்தோர், சாதாரண மக்கள் ஆகியோரின் குரல்கள் கேட்கப்படட்டும்.  வன்முறைகள், தீவிரவாதம், பிரிவினைகள், சகிப்பற்ற நிலை போன்றவை முடிவுக்கு வரட்டும். நேர்மையான, வெளிப்படையான கலந்துரையாடல்கள் வழியாக நாட்டை கட்டியெழுப்ப முன்வருவோருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். பொதுநலனை மனதில் கொண்டு ஒப்புரவுக்காக உழைக்க முன்வரும் குடிமக்கள் தங்கள் சுயநலன்களை தூர விலக்கிவைக்கட்டும்.

அண்மைக்காலங்களில், ஜனநாயக சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுவரும் ஈராக் நாட்டில், அனைத்து அரசியல், சமுதாய, மற்றும் மத அமைப்புக்களின் பங்கேற்பு உறுதி செய்யப்படுவதுடன், எவரும் தங்களை இரண்டாம் தர மக்களாக கருதும் நிலை அகற்றப்படவேண்டும். 

ஈராக் நாட்டிலும், மத்தியகிழக்குப் பகுதியிலும் அமைதியைக் கொணர்வதில் அனைத்துலக சமுதாயத்தின் பங்கும் முக்கியமானது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர், சிரியாவில் துவங்கிய மோதல்கள் இன்றளவும் தொடர்ந்துவருவதை நாம் காண்கிறோம். பொருளாதார சரிநிகரற்ற நிலைகள், இப்பகுதியின் பதட்டநிலைகள் போன்றவை, அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

ஈராக் நாட்டிற்கு வெளியிலும், நாட்டிற்குள்ளும் புலம்பெயர்ந்து வாழ்வோருக்கும், நாட்டிற்கு திரும்பிவர முயல்வோருக்கும், தேவையான உதவிகளை ஆற்றிவரும் நாடுகளையும், உலக நிறுவனங்களையும் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

ஒப்புரவு, மற்றும் அமைதியை கட்டியெழுப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் பல்வேறு அமைப்புக்களை, கத்தோலிக்க நிறுவனங்களைப்பற்றி என்னால் குறிப்பிடாமல் இருக்கமுடியாது. நம் சகோதரர்கள், சகோதரிகளின் தேவைகளை உணர்ந்து, அவர்களுக்கு ஆற்றும் பிறரன்பு செயல்கள், நீடித்த அமைதிக்குப் பங்காற்றுகின்றன.

அனைத்துலக நாடுகள், தங்கள் அரசியல் மற்றும் கொள்கை சுயநலங்களால் தூண்டப்படாமல்,  பொறுப்புணர்வுடன், ஈராக்கை கட்டியெழுப்பும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவார்களாக.

மதம் என்பது, தன் இயல்பிலேயே, அமைதிக்கும் உடன்பிறந்த நிலைக்கும் பணியாற்றும் ஒன்றாகும். அடக்குமுறைகளையும், பயங்கரவாதத்தையும் நியாயப்படுத்துவதற்கு, மதம், ஒருநாளும் பயன்படுத்தப்படக்கூடாது. மனிதர்களை சரிநிகர் மாண்புடன் படைத்த கடவுள், அவர்கள், அன்பு, நல்மனம், மற்றும் இணக்கத்தை பரப்புகிறவர்களாகச் செயல்படவேண்டும் என எதிர்பார்க்கிறார்.

ஈராக்கிலும், கத்தோலிக்கத் திருஅவை, அனைவருடனும் நட்புடன் இருக்க விருப்பம் கொண்டு, மதங்களிடையே உரையாடலை ஊக்குவிக்கிறது. கிறிஸ்தவர்களின் பணி, அனைவருக்கும் தொடர்ந்து சேவையாற்றும் ஒரு பாரம்பரியமாகும். ஒரு நாட்டின் வளத்துக்கும், வளர்ச்சிக்கும், இணைக்க வாழ்வுக்கும், பல்வேறு மதங்களின், இனங்களின், கலாச்சாரங்களின் பன்மை நிலைகளில் பங்காற்றமுடியும்.

அன்பு நண்பர்களே, இந்நாட்டை கட்டியெழுப்புவதில் நீங்கள் தொடர்ந்து ஆற்றிவரும் பணிகளுக்கு என் நன்றியை மீண்டும் ஒருமுறை கூறி, இறையாசீரை வேண்டுகிறேன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 March 2021, 15:00