ஈராக் பிரதமருடன் திருத்தந்தை ஈராக் பிரதமருடன் திருத்தந்தை 

திருத்தந்தை - பாக்தாத்தில் முதல் நாள் நிகழ்வுகள்

திருத்தந்தை : ஈராக் மக்கள், உடன்பிறந்த உணர்வில், நாட்டை மீள்கட்டமைப்பதற்கு, அவர்களுக்கு வலிமையை வழங்குமாறு மன்றாடுகிறேன்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

மார்ச் 05, இவ்வெள்ளிக்கிழமை, ஈராக் நேரம் பகல் 2 மணியளிவில், அதாவது இந்திய நேரம், மாலை 4 மணியளவில், பாக்தாத் பன்னாட்டு விமானத்தளம் சென்றடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, ஈராக் பிரதமர் Mustafa al-Kazemi அவர்கள், விமானப்படிகளில் நின்று வரவேற்றார். பாரம்பரிய உடைகளை அணிந்த இரு சிறார், ஈராக் மற்றும், வத்திக்கான் கொடிகளை ஏந்திக்கொண்டு, மஞ்சள் நிற மலர்க்கொத்து ஒன்றை திருத்தந்தைக்கு அளித்தனர். சிவப்பு கம்பள இராணுவ மரியாதையும் திருத்தந்தைக்கு அளிக்கப்பட்டது. பின்னர், அந்த விமானநிலையத்தின் விருந்தினர் அறையில், திருத்தந்தையும், பிரதமரும் தனியே சந்தித்துப் பேசினர். அச்சமயத்தில், வெள்ளி பதக்கம் ஒன்றையும், “அனைவரும் உடன்பிறந்தோர் (Fratelli tutti)” என்ற திருமடலின் சிறப்புப் பதிப்பு ஒன்றையும், பிரதமருக்குப் பரிசாக அளித்தார் திருத்தந்தை.  அந்த சந்திப்பிற்குப் பின்னர், விமான நிலையத்திலிருந்து 21 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அரசுத்தலைவர் மாளிகைக்கு, பலத்த பாதுப்புடன் காரில் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். சாலைகளின் ஓரங்களில் மக்கள் ஈராக் மற்றும், வத்திக்கான் கொடிகளை ஆட்டிக்கொண்டு மகிழ்வோடு நின்று கொண்டிருந்தனர். ஈராக் அரசுத்தலைவர் Barham Ahmed Salih Qassim அவர்கள், அந்த மாளிகையின் நுழைவாயிலிலே நின்று, திருத்தந்தையை வரவேற்றார். திருத்தந்தைக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பும் வழங்கப்பட்டது. சிவப்பு கம்பளத்தில் நடந்துசென்ற திருத்தந்தைக்கு இரு சிறார் மலர்களை வழங்கினர்.

அதன்பின்னர், அரசுத்தலைவர் மாளிகையில், அரசுத்தலைவர் Salih அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, தனியே சந்தித்துப் பேசினார். அச்சமயத்தில், தங்கப் பதக்கம் ஒன்றையும், “அனைவரும் உடன்பிறந்தோர் (Fratelli tutti)” என்ற திருமடலின் சிறப்புப் பதிப்பு ஒன்றையும், அரசுத்தலைவருக்குப் பரிசாக அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அரசுத்தலைவரும் திருத்தந்தைக்கு பரிசாக நூல்களையும், மற்றும், பிற சிறந்த பொருள்களையும் வழங்கினார். இச்சந்திப்பிற்குப்பின், அந்த மாளிகையிலுள்ள பெரிய அறையில், அரசு, தூதரக, மற்றும், பொதுமக்கள் சமுதாயம் அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார் திருத்தந்தை. முதலில் அரசுத்தலைவர் Barham Salih அவர்கள், திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினார்.

பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ஈராக் நாட்டிற்கு தன் முதல் உரையை வழங்கினார். ஈராக் அரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற சந்திப்பை நிறைவுசெய்து, பாக்தாத் நகரிலுள்ள, மீட்பரின் அன்னை மரியா சீரோ கத்தோலிக்க ஆலயம் சென்றார் திருத்தந்தை. அங்கு இரு இளையோர் திருத்தந்தையிடம் மலர்க்கொத்தை அளிக்க, திருத்தந்தை அதனை திருநற்கருணை பெட்டியின்முன் வைத்து செபித்தார். முதலில், முதுபெரும்தந்தை யூனென் அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். அதன்பின்னர், அந்த ஆலயத்தில் அமர்ந்திருந்த, ஏறத்தாழ நூறு, ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவிகள், அருள்பணித்துவ பயிற்சி மாணவர்கள், வேதியோர் ஆகியோருக்கு உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். அந்த ஆலயத்தின் விருந்தினர் புத்தகத்தில், ஈராக் மக்கள், உடன்பிறந்த உணர்வில், நாட்டை மீள்கட்டமைப்பதற்கு, அவர்களுக்கு வலிமையை வழங்குமாறு, கன்னி மரியாவின் பரிந்துரை வழியாக, நம்பிக்கை, மற்றும், அமைதியின் திருப்பயணியாக, இறைவா உம்மிடம் மன்றாடுகிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதினார். இந்நிகழ்வு நிறைவுற்றபோது ஈராக் நேரம் மாலை ஏறத்தாழ 6 மணியாக இருந்தது. அதற்குப்பின் பாக்தாத் திருப்பீட தூதரகம் சென்றார் திருத்தந்தை. அங்கு மக்கள் வளாகத்தில் கூடியிருந்து திருத்தந்தையை வரவேற்றனர். இத்துடன் பாக்தாத் நகரில் திருத்தந்தையின் முதல் நாள் பயண நிகழ்வுகள் முற்றுப்பெற்றன. பல ஆண்டுகள் போர் மற்றும், இன வன்முறையின் பாதிப்புக்களிலிருந்து வெளிவருவதற்கு கடுமையாய் முயற்சித்துவரும் ஈராக் மக்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வரவால் உற்சாகத்துடன் இருப்பதைக் காண முடிகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 March 2021, 15:14