ஈராக் நாட்டில் Down Syndrome நோயுள்ளவர்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் ஈராக் நாட்டில் Down Syndrome நோயுள்ளவர்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 

அனைவருக்கும் குடிநீரும், நலப்பணிகளும் கிடைக்க...

கருவில் வளரும் ஒவ்வொரு குழந்தையும் குடும்பத்தின் வரலாற்றை மாற்றியமைக்கும் கொடை என்பதால், எல்லாக் குழந்தைகளும் வரவேற்கப்பட்டு, அன்புகூரப்பட்டு, பேணி வளர்க்கப்பட வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

'சகோதரி நீர்' என்பது, கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு ஒரு வியாபாரப் பொருள் அல்ல, மாறாக அது அகில உலக அடையாளம், மற்றும், வாழ்விற்கும், உடல் நலத்திற்கும் ஆதாரம் என இத்திங்களன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 22, இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட உலக தண்ணீர் நாளையொட்டி, டுவிட்டர் செய்தியொன்றை விடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய உலகில் எண்ணற்ற சகோதரர், சகோதரிகள், போதிய நீரின்றி, அதுவும் சுத்தமான நீரின்றி வாடுகின்றனர் என்ற கவலையை வெளியிட்டுள்ளதுடன், அனைவருக்கும் குடிநீரும், நலப்பணிகளும் கிடைப்பதற்குரிய உறுதிப்பாட்டின் தேவை உள்ளது என, அச்செய்தியில் கூறியுள்ளார்.

ஏற்கனவே, மார்ச் 21, தன் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில், உலக தண்ணீர் நாள் குறித்து தன்  கருத்துக்களைப் பகிர்ந்திருந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும்,மார்ச் 21, ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட, இனவெறிக்கு எதிரான உலக நாள், Down Syndrome என்றழைக்கப்படும் மனநலிவு நோய் உலக நாள், மாபியா குற்றக் கும்பலுக்கு பலியானோரை நினைவுகூரும் இத்தாலிய தேசிய நாள், ஞாயிறு நற்செய்தி வாசகம் ஆகியவை குறித்து, தனித்தனியாக நான்கு டுவிட்டர் செய்திகளை ஞாயிறன்று வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனநலிவு நோய் உலக நாள் குறித்து திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கருவில் வளரும் ஒவ்வொரு குழந்தையும் குடும்பத்தின் வரலாற்றை மாற்றியமைக்கும் கொடை என்பதால், எல்லாக் குழந்தைகளும் வரவேற்கப்பட்டு, அன்புகூரப்பட்டு, பேணி வளர்க்கப்பட வேண்டும், என்ற விண்ணப்பத்தை விடுத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 March 2021, 14:03