திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

ஒவ்வொரு நாளையும் இறைவேண்டலோடு தொடங்கவேண்டும்

“அனைவருக்கும் மகிழ்ச்சி, என்றென்றும்” என்ற தலைப்பில், மார்ச் 20, இச்சனிக்கிழமையன்று, ஐக்கிய நாடுகள் நிறுவனம், உலக மகிழ்ச்சி நாளைச் சிறப்பித்தது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மார்ச் 20, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட, உலக மகிழ்ச்சி நாளை மையப்படுத்தி, உலக மகிழ்ச்சி நாள் (#WorldHappinessDay) என்ற ஹாஷ்டாக்குடன் தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு நாளையும் இறைவேண்டலோடு தொடங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி எடுத்துரைத்துள்ளார்.

“ஒவ்வொரு நாளும் இறைவேண்டலில் வரவேற்கப்பட்டால், அந்த நாள், துணிவோடு துணைவரும், இதனால், அந்த நாளில் நாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள், நம் மகிழ்ச்சிக்குத் தடைகளாக ஒருபோதும் இருக்கமாட்டா. மாறாக, அவை, கடவுளை நாம், சந்திப்பதற்கு அவர் விடுக்கும் வாய்ப்புக்களாக உள்ளன” என்ற சொற்கள், இறைவேண்டல், மகிழ்ச்சி (#prayer, #happiness) ஆகிய ஹாஷ்டாக்குகளுடன் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியுள்ளன

ஒவ்வொரு மனிதரின் நல்வாழ்விற்கு, மகிழ்ச்சி மிகவும் முக்கியம் என்பதை வலியுறுத்தி, 2012ம் ஆண்டு, ஜூலை 12ம் தேதி, ஐக்கிய நாடுகளின் பொது அவை, உலக மகிழ்ச்சி நாள் கொண்டாடப்படுவதற்கு இசைவு தெரிவித்தது. அதன்படி, 2013ம் ஆண்டிலிருந்து, ஒவ்வோர் ஆண்டும், ஒரு தலைப்பில், உலக மகிழ்ச்சி நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

“அனைவருக்கும் மகிழ்ச்சி, என்றென்றும்” என்ற தலைப்பில், மார்ச் 20, இச்சனிக்கிழமையன்று உலக மகிழ்ச்சி நாள் சிறப்பிக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 March 2021, 13:57