ஒப்புரவு அருளடையாளம் ஒப்புரவு அருளடையாளம் 

"ஆண்டவரோடு 24 மணி நேர" பக்திமுயற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள்

மார்ச் 12, இவ்வெள்ளி, மார்ச் 13, இச்சனி ஆகிய இரு நாள்களில் "ஆண்டவரோடு 24 மணி நேர இறைவேண்டல்" பக்திமுயற்சி கடைப்பிடிக்கப்படுகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கத்தோலிக்கத் திருஅவையில், "ஆண்டவரோடு 24 மணி நேர இறைவேண்டல்" என்ற பக்திமுயற்சி, மார்ச் 12, இவ்வெள்ளியன்று, துவங்கியுள்ளதை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நிகழ்வில் கத்தோலிக்கர் அனைவரும் ஆர்வத்தோடு பங்குகொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தி, மூன்று டுவிட்டர் செய்திகளை, வெளியிட்டுள்ளார்.

தவக்காலம், ஆண்டவரோடு 24 மணி நேரம் (#Lent #24hoursfortheLord) என்ற ‘ஹாஷ்டாக்’குகளுடன் திருத்தந்தை வெளியிட்டுள்ள முதல் டுவிட்டர் செய்தியில்,  “கடவுளிடம் திரும்பி வரத் தொடங்குதல், அவரும், அவரது இரக்கமும் நமக்குத் தேவை என்பதை ஏற்பதாகும். இதுவே சரியான பாதை, இதுவே தாழ்ச்சியின் பாதை” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

திருத்தந்தை வெளியிட்டுள்ள இரண்டாவது டுவிட்டர் செய்தியில், “கடவுளோடும், நம்மோடும், நம் அயலவரோடும் உள்ள உறவைப் புதுப்பிக்கும்பொருட்டு, இறைவார்த்தை, அருளடையாளங்கள், உண்ணாநோன்பு, இறைவேண்டல் ஆகியவற்றுக்கு, நேரத்தை ஒதுக்குமாறு, நான் உங்களை ஊக்கப்படுத்துகிறேன்” என்ற சொற்கள் வெளியாயின.

திருத்தந்தை வெளியிட்டுள்ள மூன்றாவது டுவிட்டர் செய்தியில், “நம் மனமாற்ற நடவடிக்கையின் மையமாக அமைந்துள்ள ஒப்புரவு அருளடையாளத்தில் மன்னிப்புப் பெறுவதன் வழியாக, நாம் மன்னிப்பைப் பரப்புகிறோம். மன்னிப்பைப் பெற்றபின், நாம் அதனை, கவனமுடன் மேற்கொள்ளும் உரையாடல் வழியாக, மனத்துயரமும், வேதனையும் அடைந்துள்ளவர்களுக்கு, ஆறுதலை வழங்கமுடியும்” என்ற சொற்கள் பதிவாகியிருந்தன

"ஆண்டவரோடு 24 மணி நேர இறைவேண்டல்"

மார்ச் 12, இவ்வெள்ளி, மார்ச் 13, இச்சனி ஆகிய இரு நாள்களில் கடைப்பிடிக்கப்படும், "ஆண்டவரோடு 24 மணி நேர இறைவேண்டல்" பக்திமுயற்சிக்கு, "அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கிறார்" (தி.பா.103:3) என்ற சொற்கள், தலைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டவரோடு 24 மணி நேரம் இறைவேண்டலில் செலவழிப்பதற்கு, கத்தோலிக்கர் அனைவரும், நேரம் ஒதுக்கி, ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற்று, இறைவார்த்தையை அடிப்படையாகக்கொண்டு இறைவேண்டல் செய்யவும், தியானம் மேற்கொள்ளவும் அழைக்கப்படுகின்றனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பின்பேரில், புதியவழி நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவை, "ஆண்டவரோடு 24 மணி நேர இறைவேண்டல்" என்ற பக்தி முயற்சியை, 2014ம் ஆண்டிலிருந்து,  ஏற்பாடு செய்து நடத்திவருகிறது. தவக்காலத்தின் நான்காம் ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் ‘மகிழும் ஞாயிறு’க்கு முந்தைய வெள்ளி, சனி, ஆகிய இரு நாள்களில், இந்த பக்திமுயற்சி, கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 March 2021, 15:20