திருத்தந்தை, சான் மரினோ குடியரசின் தலைவர்கள் Alessandro Cardelli, Mirko Dolcini  திருத்தந்தை, சான் மரினோ குடியரசின் தலைவர்கள் Alessandro Cardelli, Mirko Dolcini  

திருத்தந்தை, சான் மரினோ குடியரசின் தலைவர்கள் சந்திப்பு

நாம் ஆற்றும் பிறரன்புப் பணிகள், மற்றவருக்கு, வாழ்வு மீது நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமையவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மார்ச் 16, இச்செவ்வாயன்று, தவக்காலம் (#Lent) என்ற ஹாஷ்டாக்குடன் தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் பிறரன்பு பணிகள் எவ்வாறு அமையவேண்டும் என்பது பற்றி குறிப்பிட்டுள்ளார்.

“நம் வருங்காலம் பற்றிய நிச்சயமற்ற ஒரு நிலை உருவாகியிருக்கும் இந்நாள்களில், நாம் ஆற்றும் பிறரன்புப் பணிகள், வாழ்வுமீது நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துவது பற்றிப் பேசவேண்டும், மற்றும், தாங்கள் கடவுளால் அன்புகூரப்படும் மகன்கள் மற்றும், மகள்கள் என்பதை, மற்றவர் உணர்வதற்கு, அப்பணிகள் உதவவேண்டும்” என்ற சொற்கள், மார்ச் 16, இச்செவ்வாயன்று, திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் இடம்பெற்றிருந்தன.

சான் மரினோ குடியரசின் தலைவர்கள்

மேலும், சான் மரினோ குடியரசின் தற்போதையத் தலைவர்கள் Alessandro Cardelli, Mirko Dolcini ஆகிய இருவரும், மார்ச் 15, இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

திருத்தந்தையைச் சந்தித்தபின், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களையும், சான் மரினோ தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.

உலகை உலுக்கியுள்ள கோவிட்-19 பெருந்தொற்று, சான் மரினோ குடியரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் தூதரக உறவுகள், இந்த உறவுகளில் நிலவுகின்ற பலனுள்ள ஒத்துழைப்பு, பல பன்னாட்டு விவகாரங்கள் போன்ற விடயங்கள் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன.

சான் மரினோ குடியரசில் இடம்பெற்றுவரும் கோவிட்-19 தடுப்பூசி நடவடிக்கைகள், அக்குடியரசின் குடும்பம் சார்ந்த கொள்கைகள், குழந்தை பிறப்பு விகிதம், புலம்பெயர்வு விவகாரம், மனிதாபிமான உதவிகள் போன்றவையும், இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று, திருப்பீட தகவல் தொடர்பகம் அறிவித்துள்ளது.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 March 2021, 14:42