விமானப் பயணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு விமானப் பயணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு 

புடாபெஸ்ட் உலக திருநற்கருணை மாநாட்டிற்கு திருத்தந்தை

திருத்தந்தையின் வருகை, திருநற்கருணை மாநாட்டில் கலந்துகொள்ளும் எல்லாருக்கும் ஊக்கமூட்டும், ஆன்மீக அளவில் புத்துயிர் அளிக்கும் - ஹங்கேரி ஆயர் பேரவை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“தவக்காலம், நம் முழு வாழ்வையும் உள்ளடக்கிய ஒரு பயணம். நம்மை விண்ணக வீட்டிற்கு இட்டுச்செல்லும் பாதையில், எதைத் தேர்ந்தெடுத்துள்ளோம் என்பதை,  மறுபரிசீலனை செய்வதற்கும், அனைத்தும் சார்ந்து இருக்கின்ற, கடவுளோடு உள்ள ஆழமான உறவை மீண்டும் கண்டுணர்வதற்கும், தவக்காலம், ஏற்ற காலம்” என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.   

மார்ச் 05, கடந்த வெள்ளியன்று துவங்கிய ஈராக் திருத்தூதுப் பயணத்தை,  மார்ச் 08, இத்திங்கள் காலையில் நிறைவுசெய்து, அன்று பகல் 12.44 மணியளவில் உரோம் வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் வாழ்கின்ற தவக்காலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மார்ச் 09, இச்செவ்வாயன்று, தவக்காலம் (#Lent) என்ற ஹாஷ்டாக்குடன் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார். 

மேலும், பாக்தாத் நகரிலிருந்து உரோம் நகருக்குத் திரும்பிய விமானப் பயணத்தில், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஷியா இஸ்லாம் பிரிவின் தலைவர் Al Sistani அவர்களுடன் சந்திப்பு, வருங்கால வெளிநாட்டு திருத்தூதுப் பயணங்கள், ஆகியவை பற்றிய கேள்விகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பதிலளித்தார்.

புடாபெஸ்ட்டில் திருநற்கருணை மாநாடு

வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி முதல் 12ம் தேதி வரை, ஹங்கேரி நாட்டில் நடைபெறும் 52வது உலக திருநற்கருணை மாநாட்டில் தான் கலந்துகொள்ளப்போவதாகக் கூறியத் திருத்தந்தை, லெபனான் நாட்டுக்கும் திருத்தூதுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாகக் கூறினார்.

வருகிற செப்டம்பர் 12ம் தேதி, ஹங்கேரி நாட்டுத் தலைநகர் Budapestன் தியாகிகள் வளாகத்தில் நடைபெறும், 52வது உலக திருநற்கருணை மாநாட்டின் நிறைவுத் திருப்பலியில், தான் கலந்துகொள்ளப்போவதாக திருத்தந்தை கூறினார்.

ஹங்கேரி ஆயர்கள் மகிழ்ச்சி

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருநற்கருணை மாநாட்டின் நிறைவு திருப்பலியில் கலந்துகொள்வதாக அறிவித்திருப்பது குறித்து, ஹங்கேரி நாட்டு ஆயர் பேரவை, தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது.

திருத்தந்தையின் வருகை, எங்கள் அனைவருக்கும், வருங்காலத்தில் திருநற்கருணை மாநாட்டில் கலந்துகொள்ளும் எல்லாருக்கும் ஊக்கமூட்டுவதாகவும், ஆன்மீக அளவில் புத்துயிர் அளிப்பதாகவும் இருக்கும் என்று, ஹங்கேரி ஆயர் பேரவை வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.

வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணங்கள்

புடாபெஸ்ட் நகரம், சுலோவாக்கியா நாட்டுத் தலைநகர் Bratislavaவுக்கு, இரண்டு மணிநேரப் ப.யணத்தையே கொண்டிருப்பதால், வருகிற செப்டம்பரில் சுலோவாக்கியா நாட்டுக்கும் திருத்தந்தை செல்ல வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, மற்ற திருத்தூதுப் பயணங்களைவிட ஈராக் பயணம் தன்னை அதிகமாக களைப்படையச் செய்த்தென்றும், வருங்காலத்தில் பயணத் திட்டங்கள் எப்படி இருக்கும் என்று தெரியாது என்றும் கூறினார்.

84 வயது நிரம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது பாப்பிறை தலைமைப் பணியின் ஏழு ஆண்டுகளில், ஈராக் உட்பட, 52 நாடுகளில் 33 வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

2020ம் ஆண்டில், இந்தோனேசியா, கிழக்கு தைமூர் (East Timor), பாப்புவா நியு கினி ஆகிய நாடுகளுக்குச் செல்வதாய் திட்டமிடப்பட்டிருந்த திருத்தந்தையின் பயணங்கள், கோவிட்-19 பெருந்தொற்றால் இரத்துசெய்யப்பட்டன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 March 2021, 14:57