ஈராக்கில் திருப்பயண தயாரிப்புக்கள் ஈராக்கில் திருப்பயண தயாரிப்புக்கள்  

ஈராக் பயணம், தவக்காலம் - டுவிட்டர் செய்திகள்

ஈராக் பயணம் நல்ல முறையில் நடந்து, தகுந்த பலன்களை வழங்க, உங்களது இறைவேண்டலின் வழியே என் திருத்தூதுப் பயணத்தில் உடன்வர கேட்டுக்கொள்கிறேன் – திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஈராக் நாட்டில் தான் மேற்கொள்ளவிருக்கும் 33வது திருத்தூதுப் பயணத்தையொட்டி, இறைமக்களின் செபங்களை வேண்டி, மார்ச் 4, இவ்வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

ஈராக் திருத்தூதுப்பயணத்திற்காக செபியுங்கள்

"நாளை, நான் ஈராக் நாட்டிற்கு, மூன்று நாள் திருப்பயணம் செல்கிறேன். அதிக துன்பங்களை அடைந்துள்ள அந்நாட்டு மக்களை சந்திக்க நான் நீண்டகாலமாக விரும்பினேன். இந்தப் பயணம் நல்ல முறையில் நடந்து, தகுந்த பலன்களை வழங்க, உங்களது இறைவேண்டலின் வழியே என் திருத்தூதுப் பயணத்தில் உடன்வர கேட்டுக்கொள்கிறேன்" என்ற சொற்கள், திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மார்ச் 3ம் தேதி, தன் நூலக அறையிலிருந்து புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த உரையின் இறுதியில், தன் ஈராக் திருத்தூதுப் பயணத்தைப் பற்றி குறிப்பிட்டுப் பேசினார்.

ஆபிரகாம் பிறந்து வளர்ந்த நாட்டில் வேரூன்றி வளர்ந்துள்ள திருஅவையின் மக்களை, தான் சந்திக்கச் செல்வதாகவும், கிறிஸ்தவ மறையின் சாட்சிகளாக வாழ்ந்துவரும் ஈராக் மக்களைச் சந்திப்பதை ஓர் அரிய வாய்ப்பாக, தான் கருதுவதாகவும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

2019ம் ஆண்டு, நவம்பர் மாதத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தாய்லாந்து, மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்திற்குப் பின், கடந்த 15 மாதங்களாக வெளிநாட்டுப் பயணங்கள் எதையும் மேற்கொள்ளவில்லை.

விவிலியத்துடன் தொடர்புடைய பல்வேறு நாடுகளின் ஒருங்கிணைந்த பகுதி, புனித பூமி என கிறிஸ்தவ பாரம்பரியத்தில் கருதப்படுகிறது என்பதும், இந்நாடுகளில், இதுவரை, ஈராக் நாட்டிற்கு மட்டும், திருத்தந்தையர் யாரும் செல்லமுடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கன.

தவக்காலத்தையொட்டிய டுவிட்டர் செய்தி

மேலும், நாம் கடைபிடித்துவரும் தவக்காலத்தையொட்டிய கருத்துக்களை தன் டுவிட்டர் பதிவில் வெளியிட்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 4, இவ்வியாழனன்று, தவக்காலத்தையும், நம் நம்பிக்கையையும் இணைத்து மற்றொரு டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

"தவக்காலம், நம்பிக்கையின் காலம், அல்லது, 'இறைவனுடன் குடிகொள்வதற்கு' (யோவான் 14:23) ஏதுவான முறையில், அவரை நம் வாழ்வில் வரவேற்கும் காலம்" என்ற சொற்கள், @pontifex என்ற டுவிட்டர் முகவரியுடன் கூடிய பக்கத்தில் இடம்பெற்றிருந்தன.

ஈராக் பயணம் குறித்து நீதிபதி Abdelsalam

இதற்கிடையே, போர்கள், சமுதாயப் பிளவுகள், மற்றும் பயங்கரவாதம் ஆகிய பிரச்சனைகளால் பல ஆண்டுகளாகத் துன்புற்றுவரும் ஈராக் நாட்டிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு பயணத்தை மேற்கொள்கிறார் என்று, சவூதி அரேபியாவின் நீதிபதி Mohamed Abdelsalam அவர்கள் வெளியிட்ட அறிக்கையொன்றில் கூறியுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியுள்ள நெருக்கடி காலத்திலும், திருத்தந்தை, இந்த பயணத்தை மேற்கொண்டிருப்பது, மனிதாபிமான உணர்வுகளுக்கு அவர் தன் வாழ்வை அர்ப்பணித்துள்ளார் என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு என்று நீதிபதி Abdelsalam அவர்களின் அறிக்கை கூறுகிறது.

அபுதாபியில் இயங்கும் மனித உடன்பிறந்த நிலை உயர்மட்டக் குழுவின் செயலராகவும், Zayed விருதுக்குழுவின் தலைவராகவும், நீதிபதி Mohamed Abdelsalam அவர்கள் பணியாற்றி வருகிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 March 2021, 15:43