தேடுதல்

Vatican News
ஆஸ்திரேலிய வெள்ளப்பெருக்கு ஆஸ்திரேலிய வெள்ளப்பெருக்கு 

மார்ச் 24, புதனன்று உலக காசநோய் தினம் நினைவு கூரப்பட்டது

நைஜர் நாட்டு மக்கள் சந்தித்த வன்முறைகள், நாட்டின் குடியாட்சி, அமைதி மற்றும் நீதிக்கான பாதையில் இவர்களின் நம்பிக்கையை பறித்துவிடாமல் இருக்க செபிப்போம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

நைஜர் நாட்டில் பயங்கரவாத தாக்குதலில் 137 பேர் உயிரிழந்தது குறித்தும், ஆஸ்திரேலியாவில், இயற்கைப் பேரிடரால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்தும், தன் புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில், ஆழ்ந்த கவலையை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நைஜர் நாட்டில் 137 பேரின் உயிரிழப்புக்களை உருவாக்கிய பயங்கரவாத தாக்குதல் குறித்து தான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும், அவர்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும், அந்நாட்டு மக்கள் அனைவருக்குக்காகவும் செபிப்போம் என கேட்டுக்கொண்டார். இந்நாட்டு மக்கள் சந்தித்த வன்முறைகள், நாட்டின் குடியாட்சி, அமைதி மற்றும் நீதிக்கான பாதையில் இவர்களின்  நம்பிக்கையை பறித்துவிடாமல் இருக்க செபிப்போம் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அண்மை நாட்களில் ஆஸ்திரேலியாவின் New South Wales மாநிலத்தில் இடம்பெற்றுவரும் வெள்ளப்பெருக்கு குறித்தும் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதனால் பாதிக்கப்பட்ட மக்களுடனும் குடும்பங்களுடனும்,  தான் மிக நெருக்கமாக இருப்பதாகவும், எடுத்துரைத்தார்.

இந்த இயற்கை பேரிடரில் தங்குமிடங்களை இழந்துள்ள மக்களுடன் தன் அருகாமையை வெளியிட்ட அதேவேளையில், காணாமல்போயுள்ள மக்களைத் தேடுவதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டுவருவதிலும் ஈடுபட்டிருப்போருக்கு ஊக்கத்தை வழங்குவதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 24, புதனன்று உலக காசநோய் தினம் நினைவு கூரப்பட்டதையும் எடுத்துரைத்து, இந்நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சைகளை வழங்குவதில் புதிய உத்வேகத்தையும்,  நோயுற்றோருடன் ஒருமைப்பாட்டையும்  அதிகரிக்க இந்த உலக தினம் உதவட்டும் என கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காச நோயாளர்களின் மீதும், அவர்களின் குடும்பங்கள் மீதும் இறைவனின் ஆறுதலை வேண்டினார்.

24 March 2021, 11:56