தேடுதல்

Vatican News
மறைக்கல்வியுரை - 240321 மறைக்கல்வியுரை - 240321  (Vatican Media)

மறைக்கல்வியுரை – இறைவேண்டலில் அன்னை மரியா

நம் தாயும், திருஅவையின் தாயுமாகிய அன்னைமரியா, சிலுவை மரத்தில் இயேசு தொங்கியபோது, அவரால் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டவர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இத்தாலியில் கடைபிடிக்கப்பட்டுவரும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றி, தன் நூலக அறையிலிருந்தே புதன் மறைக் கல்வியுரையை வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், மார்ச் 24, புதன்கிழமையன்று, 'அன்னைமரியாவுடன் இணைந்து செபித்தல்' என்ற தலைப்பில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். முதலில், திருத்தூதர் பணிகள் நூலின் முதல் பிரிவிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டது. அதன்பின், திருத்தந்தையின் உரை தொடர்ந்தது.

  •  
  • பின்பு, அவர்கள் ஒலிவமலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பினார்கள். இம்மலை எருசலேமுக்கு அருகில், ஓய்வுநாளில் செல்லக்கூடிய தொலையில் உள்ளது. 
  • பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தலமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதியான சீமோன், யாக்கோபின் மகன் யூதா ஆகியோர் திரும்பி வந்தபின் தாங்கள் தங்கியிருந்த மேல்மாடிக்குச் சென்றார்கள். அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள். (தி.ப. 1,12-14)
  •  

அன்பு சகோதரரே, சகோதரிகளே, இறைவேண்டல் குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று, இறைவேண்டல் வாழ்வில் அன்னை மரியா வகிக்கும் பங்கைக் குறித்து சிந்திப்போம். கிறிஸ்தவ இறைவேண்டல்கள் அனைத்தும், இயேசுவின் இறைவேண்டலை  அடிப்படையாகக் கொண்டவை. மனுவுருவெடுத்த இறைமகன் இயேசு, நமக்கு, இறைவேண்டல் செய்ய மட்டும் கற்றுத்தரவில்லை, மாறாக, ஓர் இடையீட்டாளராக நமக்காக இறைத்தந்தையிடம் பரிந்து பேசிக்கொண்டேயிருக்கிறார். இயேசுவின் தாயாம் அன்னைமரியா, இயேசுவின் சீடர்கள் அனைவரது வாழ்விலும் ஒரு சிறப்புப் பங்கை வகிக்கிறார். நமது தாயும், திருஅவையின் தாயுமாகிய அன்னைமரியா, சிலுவை மரத்தில் இயேசு தொங்கியபோது, அவரால் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டவர். ஓர் அன்னைக்குரிய அன்புடன் அவர் நம்மீது அக்கறைக் காட்டி, பாதுகாப்பை வழங்கும் தன் மேலாடை கொண்டு, நம்மை அரவணைக்கிறார். அருள்நிறை மரியே வாழ்க, என்ற செபத்தில் நாம் செபிப்பதுபோல், அன்னை மரியா, பாவிகளுக்காக இறைவனிடம் பரிந்துரை செய்வதுடன், இறக்கும் தறுவாயில் இருப்போருக்காகவும் பரிந்துரைத்து, அவர்களை தன் மகனுக்கு மிக நெருக்கமாக கொண்டுவருகிறார். கைவிடப்பட்ட நிலையிலும், துயரத்திலும், இயேசு சிலுவையில் தொங்கியபோது, அதன் அடியில் நின்றவண்ணம், இயேசுவோடு ஒன்றித்திருந்ததுபோல், எல்லாவற்றையும் இழந்த நிலையில் வாழ்வோர், மற்றும் தங்களுக்கென செபிக்க யாரும் இல்லாமல் வாழ்வோர் ஆகியோருக்கு அருகாமையில் ஒரு தாய்க்குரிய அன்புடன் நெருக்கமாக உள்ளார் அன்னை மரியா.  இந்த பெருந்தொற்றுக் காலத்தில், தங்கள் உறவுகளின் ஆறுதல் தரும் பிரசன்னமின்றியும், அவரகளைக் காணமுடியாமலும், அவர்களிடமிருந்து தூரமாக விலக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த எண்ணற்ற சகோதரர் சகோதரிகளின் அருகில் அவர் நிசசயமாக இருந்தார் என்பது உறுதி. கிறிஸ்துவின் பிறப்பு அறிவிப்பு விழாவை சிறப்பிக்க நம்மை நாம் தயாரித்துவரும் இவ்வேளையில், வானதூதரின் செய்திக்கு, 'ஆம்' என பதிலுரைத்த அன்னை மரியா, நம் வேண்டுதல்களையும் கேட்டு, 'ஆம்' என உரைக்க தயாராக இருக்கிறார் என்பதை அறிந்தவர்களாக, நம் தேவைகளுக்காகவும், உலகின் மீட்பிற்காகவும் தன் மகனிடம் அன்னைமரியா பரிந்துரைத்துக் கொண்டிருக்கிறார் என்பதில் பெருவுவகை கொள்வோம்.

இவ்வாறு, தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

24 March 2021, 11:46