IRAQ-VATICAN-POPE IRAQ-VATICAN-POPE 

திருத்தந்தை ஈராக்கில் மூன்று நாள்கள்

அனைவரும் நம் உடன்பிறப்புக்கள் என்ற உணர்வோடு, வாழ்வுப் பயணத்தைத் தொடரும்போதுதான், ஒருவர் ஒருவரை, ஒரே மனிதக் குடும்பத்தின் உறுப்பினர்களாக பார்க்க முடியும் - திருத்தந்தை

மேரி தெரேசா: வத்திக்கான்

மார்ச் 05, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  “நீங்கள் எல்லாரும் என் உடன்பிறப்புக்கள்” என்ற உணர்வோடு, ஈராக் தலைநகர் பாக்தாத், நஜாஃப், ஈராக்கிய குர்திஸ்தான் தன்னாட்சிப் பகுதியின் மோசூல், ஊர், கரகோஷ், மற்றும், எர்பில் ஆகிய நகரங்களில்,  மூன்று நாள்கள், முழுவீச்சுடன் பயண நிகழ்வுகளை நிறைவேற்றினார். அனைவரும் நம் உடன்பிறப்புக்கள் என்ற உணர்வோடு, வாழ்வுப் பயணத்தைத் தொடரும்போதுதான், வேறுபாடுகளையும் கடந்து, ஒருவர் ஒருவரை, ஒரே மனிதக் குடும்பத்தின் உறுப்பினர்களாக நாம் பார்க்க முடியும். அதோடு, நாட்டின் மீள்கட்டமைப்புப் பாதையை பயனுள்ள மற்றும், உறுதியுள்ள முறையில் தொடர முடியும். இவ்வாறு வாழும்போதுதான், நாட்டின் வருங்காலத் தலைமுறைகளுக்கு, நீதியும், மனிதமும் நிறைந்த சிறந்ததோர் உலகை விட்டுச்செல்ல முடியும் என்று திருத்தந்தை கூறி, ஈராக்கியர்களை உற்சாகப்படுத்தினார். பல ஆண்டுகள் போர், பிரிவினைவாத வன்முறை, பயங்கரவாதம் போன்றவற்றால் கடுமையாய்த் துன்புற்றுள்ள ஈராக் மக்களுக்கு, குறிப்பாக, கத்தோலிக்கர், மற்றும், கிறிஸ்தவர்களுக்கு, ஆறுதலளித்து அவர்களைத் தேற்றினார். சகிப்புத்தன்மை, மனிதகுல உடன்பிறந்த உணர்வு, நம்பிக்கை, மற்றும், அமைதிக்கு அழைப்பு விடுத்தார்.

ஈராக்கிய குர்திஸ்தான் பகுதியில் திருத்தந்தை

மார்ச் 07, இஞ்ஞாயிறன்று, ஈராக்கிய குர்திஸ்தான் பகுதிக்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐஎஸ் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பின் பயங்கரவாதக் கொடுமைகளை, தாங்கள் எதிர்கொண்ட முறை பற்றி, அந்த அமைப்பால் சிதைக்கப்பட்டுள்ள மோசூல் நகரின் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் பகிர்ந்துகொண்டதற்குச் செவிமடுத்தார். அப்போது திருத்தந்தை, சகோதரத்துவ கொலைகளைவிட உடன்பிறந்த உணர்வே அதிகம் உறுதியானது. வெறுப்பைவிட நம்பிக்கை வலிமையுள்ளது. போரைவிட அமைதி சக்திபடைத்தது என்று கூறினார். மோசூல் நகரில் குண்டுகளால் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ள ஆலயங்கள், வீடுகள் மற்றும், கட்டடங்களைப் பார்த்து திருத்தந்தை மிகவும் உள்ளம் வருந்தினார். உலகின் மிகப் பழமையான கிறிஸ்தவ சமுதாயங்களில் ஒன்றான ஈராக் கிறிஸ்தவர்கள், பல ஆண்டுகளாகப் போர்களால் பாதிக்கப்பட்டவர்கள். இதனால் 2003ம் ஆண்டில், ஈராக்கில் இடம்பெற்ற அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆக்ரமிப்பிற்குமுன், ஏறத்தாழ 15 இலட்சமாக இருந்த அவர்களின் எண்ணிக்கை தற்போது ஏறத்தாழ மூன்று இலட்சமாகக் குறைந்துள்ளது.

கரகோஷில் திருத்தந்தை

கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்ந்த கரகோஷ் நகரின் அமல மரி கத்தோலிக்க ஆலய வளாகத்தை, ஐஎஸ் இஸ்லாமிய அமைப்பினர், துப்பாக்கிச்சூடு நடத்துவதற்குப் பயிற்சித்தளமாகப் பயன்படுத்தியுள்ளனர். எனவே இந்நகரின் கிறிஸ்தவ சமுதாயத்தை அந்த ஆலயத்தில் சந்தித்து அவர்களோடு செபித்து உரையாற்றிய திருத்தந்தை, மன்னிப்பு மற்றும், உடன்பிறந்த உணர்வில் தங்களின் சமுதாயங்களை அமைக்குமாறு கேட்டுக்கொண்டார். திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப் பயணம், அந்நாட்டிற்கு மட்டுமல்ல, மத்திய கிழக்குப் பகுதி முழுவதற்கும், குறிப்பாக, சிரியாவிற்கு மிகவும் முக்கியத்துவம் பெற்றது. உலகளாவிய திருஅவையின் மேய்ப்பர், கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, வகுப்புவாதம் மற்றும், பயங்கரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள, மறைசாட்சியத்தை எதிர்கொண்டுள்ள தன் மந்தையைத் தேடிச் சென்றார். அவர்கள் மறக்கப்படவில்லை என்பதை, இந்த பயணத்தின் வழியாக அவர் உறுதி செய்துள்ளார். ஈராக்கில் அமைதி பற்றி போதித்த திருத்தந்தை, மன்னிப்பு மற்றும், உடன்பிறந்த உணர்வில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புங்கள் என அழைப்பு விடுத்தார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 March 2021, 15:04