ஏப்ரல் 2 புனித வெள்ளி சிலுவைப்பாதை - சிறார் தயாரித்துள்ள சிந்தனைகள் ஏப்ரல் 2 புனித வெள்ளி சிலுவைப்பாதை - சிறார் தயாரித்துள்ள சிந்தனைகள் 

திருத்தந்தை: சிறார் தயாரித்த புனித வெள்ளி சிலுவைப்பாதை

சிறார் தயாரித்துள்ள புனித வெள்ளி தியானங்கள், நீதி, மற்றும், ஒருமைப்பாட்டிற்கு அழைப்பு விடுப்பதாகவும், வருங்காலத்தின் மீது அவர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஏப்ரல் 2, புனித வெள்ளி, உரோம் நேரம் இரவு ஒன்பது மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் சிலுவைப்பாதையில், சிறார் தயாரித்த சிந்தனைகளும், உருவப்படங்களும் இடம்பெறுகின்றன.

இத்தாலியின் உம்பிரியா (Umbria) மாநிலத்தைச் சேர்ந்த “Foligno I” என்ற Agesci சாரணர் இயக்கம், மற்றும், உரோம் மாநகரின் உகாண்டா புனித மறைசாட்சிகள் பங்குத்தளச் சாரணர் இயக்கத்தைச் சார்ந்த சிறார் ஆகியோர், சிலுவைப்பாதையின் 14 நிலைகளுக்கும் தயாரித்த தியானச் சிந்தனைகள், புனித வெள்ளி சிலுவைப் பாதையில் வாசிக்கப்படவுள்ளன.

இந்த சிலுவைப்பாதை பக்திமுயற்சியில் வைக்கப்படும் உருவப்படங்கள், “இறையன்பு அன்னை குடும்ப இல்லம் (Mater Divini Amoris)” மற்றும், “Tetto Casal Fattoria” குடும்ப இல்லம் ஆகிய இரண்டு சிறார் பராமரிப்பு இல்லங்களிலும் வாழ்கின்ற சிறார் தயாரித்தவைகளாகும்.

மூன்று முதல், பத்தொன்பது வயதுக்குட்பட்ட சிறார் தயாரித்துள்ள, இவ்வாண்டு புனித வெள்ளி சிலுவைப் பாதை பக்திமுயற்சியின் தியானச் சிந்தனைகளும், உருவப் படங்களும், அவற்றில் இடம்பெற்றுள்ள வண்ணங்களும், அச்சிறார், பாகுபாடு மற்றும், கீழ்மைப்படுத்தப்பட்டு  இருப்பதன்  அர்த்தத்தை முழுமையாய் புரிந்துகொள்ளும் விதத்தில், எளிமையான சொற்களாலும், அடையாளங்களாலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அதேநேரம், அவை, நீதி, மற்றும், ஒருமைப்பாட்டிற்கு அழைப்பு விடுப்பதாகவும், வருங்காலத்தின் மீது நம்பிக்கை மற்றும், எதிர்நோக்கை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளன என்று, திருப்பீட தகவல் தொடர்பகம் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.

திருநற்கருணையை முதல் முறையாக வாங்குவதற்கும், உறுதிபூசுதல் பெறுவதற்கும் கிடைக்கும் மறைக்கல்வியை வைத்து, ஏறத்தாழ ஐந்நூறு சிறாரும், இளையோரும் இந்த சிலுவைப்பாதை தியானச் சிந்தனைகளைத் தயாரித்துள்ளனர்.

“Foligno I” எனப்படும் Agesci சாரணர் இயக்கத்தில், 8 முதல் 19 வயதுக்குட்பட்ட 145 இருபால் சிறாரும், 21 வழிநடத்துனர்களும் உள்ளனர். 14 நிலைகளுக்கும் இச்சிறார் தயாரித்துள்ள சிந்தனைகள், அவர்களின் அன்றாட வாழ்வின் அனுபவங்களையும், கல்விமுறையையும் மையப்படுத்தியுள்ளன.

உரோம் Ardeatino பகுதியில் அமைந்துள்ள உகாண்டா புனித மறைசாட்சிகள் பங்குத்தளத்தில், பல்வேறு சமுதாயத் தீமைகளுக்குப் பலியான பெண்களும், சிறாரும் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த பங்குத்தளத்தில் அமைந்துள்ள “பெத்லகேம் இல்லத்தில் (Casa Betlemme)” வீடற்ற குடும்பங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு, உரோம் மறைமாவட்டத்தின் 22வது பிரிவின் எட்டு பங்குத்தளங்கள் உதவிசெய்கின்றன.

உரோம் மாநகரின் கொலோசேயும் என்ற புனித இடத்தில் புனித வெள்ளியன்று, திருத்தந்தையர் சிலுவைப்பாதை பக்திமுயற்சியை தலைமையேற்று நிறைவேற்றுவது, 1758ம் ஆண்டில் இறைபதம் சேர்ந்த, திருத்தந்தை 14ம் பெனடிக்ட் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

கோவிட்-19 பெருந்தொற்று விதிமுறைகள் காரணமாக, இவ்வாண்டு இப்பக்திமுயற்சியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் தலைமையேற்று நிறைவேற்றுகிறார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 March 2021, 13:32