திருத்தந்தை பிரான்சிஸ், ஈராக்கின் ஷியா பிரிவின் சமயத் தலைவர் பெரும் Ayatollah Ali al-Sistani திருத்தந்தை பிரான்சிஸ், ஈராக்கின் ஷியா பிரிவின் சமயத் தலைவர் பெரும் Ayatollah Ali al-Sistani  

ஞானமுள்ள மனிதர்கள், எல்லா இடங்களிலும் இருக்கின்றனர்

ஈராக்கின் ஷியா பிரிவின் சமயத் தலைவர், Al Sistani அவர்களுடன் நடைபெற்ற சந்திப்பு, உலகளாவிய மனித உடன்பிறப்புநிலை செய்தியை வழங்கியுள்ளது - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஈராக்கின் ஷியா இஸ்லாம் பிரிவின் தலைவர் பெரும் Ayatollah Ali al-Sistani அவர்கள், தாழ்மையும், ஞானமும் நிறைந்த மனிதர் என்றும், அவரோடு நடைபெற்ற சந்திப்பு, உடன்பிறப்புநிலையின் முக்கியத்துவம் பற்றிய உலகளாவிய செய்தியைக் கொண்டிருக்கின்றது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

மார்ச் 08, இத்திங்களன்று, ஈராக் நாட்டுக்கு தான் மேற்கொண்ட முதல் திருத்தூதுப் பயணத்தை முடித்து, பாக்தாத் நகரிலிருந்து உரோம் நகருக்குத் திரும்பிய விமானப் பயணத்தின்போது, Ayatollah Al Sistani அவர்களைச் சந்தித்தது, மனித உடன்பிறப்புநிலை அறிக்கை, வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணங்கள் உட்பட, ஊடகவியலாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விக்கு, திருத்தந்தை தெளிவான பதில்களை வழங்கினார்.

Ayatollah Al Sistani அவர்களைச் சந்தித்தது, ஈரான் சமயத் தலைவர்களுக்கு வழங்கிய செய்தியாக இருந்ததா என்ற கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, அச்சந்திப்பு, உலகளாவிய செய்தி என்று, தான் நம்புவதாகவும், நம்பிக்கை மற்றும், தவத்தின் பயணமாக அமைந்த இந்த திருத்தூதுப்பயணத்தில், மாபெரும் மனிதரை, ஞானமுள்ள, மற்றும், கடவுளின் மனிதரை சென்று சந்திப்பதை, தனது கடமையாக உணர்ந்ததாகவும் கூறினார்.

இந்த மாமனிதரின் பண்புகளை, அவர் பேசுவதைக் கேட்டபோது உணர முடிந்தது என்றும், இந்த சந்திப்பு, தனது ஆன்மாவுக்கு நன்மை செய்துள்ளது என்றும், அவர் ஓர் ஒளி என்றும் திருத்தந்தை கூறினார்.

இந்த சந்திப்பு மிகவும் மரியாதையுடன் நடைபெற்றது என்றும், 90 வயது நிரம்பிய ஷியா பிரிவின் பெரிய குருவான இவர், எழுந்து நின்று இருமுறை தன்னை வாழ்த்தியபோது தான் மிகவும் மதிக்கப்படுவதாக உணர்ந்த்தாகவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு எழுந்து நின்று வணக்கம் செலுத்துவது, இவர் வழக்கமாக செய்யாத ஒன்று என்றும் கூறினார்.

ஈராக்கின் ஷியா பிரிவின் சமயத் தலைவர், ஞானம், மற்றும், விவேகம் உள்ள மனிதர், ஞானமுள்ள மனிதர்கள், எல்லா இடங்களிலும் இருக்கின்றனர், ஏனெனில், கடவுளின் ஞானம், உலகெங்கும் பரவியிருக்கின்றது என்றும், திருத்தந்தை, ஊடகவியலாளர்களிடம் எடுத்துரைத்தார். [ Photo Embed: ஷியா பிரிவின் சமயத் தலைவர், Al Sistani]

மெக்கா, மெதினா ஆகிய இரு நகரங்களுக்குப்பின், மத்திய ஈராக்கிலுள்ள நஜாஃப் நகரம், ஷியா இஸ்லாம் பிரிவினருக்கு மூன்றாவது புனித நகரமாகும். நஜாஃப் நகரில், al-Sistani அவர்களின் இல்லத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Ayatollah Al Sistani அவர்களோடு ஏறத்தாழ 45 நிமிடங்கள் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு, கத்தோலிக்கத் திருஅவைக்கும், ஷியா இஸ்லாம் மதத்திற்கும் இடையேயுள்ள உறவுகளில் மைல்கல் பதித்துள்ளது என்று திருப்பீட தகவல் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள் கூறியுள்ளார்.

பொதுவாக, Ayatollah Al Sistani அவர்கள், மற்ற தலைவர்களைச் சந்திக்கும்போது, எழுந்து நின்று வரவேற்பது கிடையாது. முதன்முறையாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை எழுந்து நின்று வரவேற்றுள்ளார். மேலும், அச்சந்திப்பில், இவர் திருத்தந்தையிடம், இனிமேல் போர் வேண்டாம் என்றும், கிறிஸ்தவர்கள், பாதுகாப்பு மற்றும், சுதந்திரத்தோடு வாழவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 March 2021, 15:06