தேடுதல்

Vatican News
சிறுவன் Alan Kurdiன் தந்தை, திருத்தந்தை சந்திப்பு சிறுவன் Alan Kurdiன் தந்தை, திருத்தந்தை சந்திப்பு 

சிறுவன் Alan Kurdiன் தந்தை, திருத்தந்தை சந்திப்பு

சிறுவன் ஆலன் குர்தி, ஐரோப்பாவில் தஞ்சம் புகவேண்டும் என்ற ஆவலில் மத்தியதரைக் கடலைக் கடக்கும்போது இடம்பெறும் பெருந்துயரங்களின் அடையாளமாக இருக்கின்றான்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எர்பில் நகரின் Franso Hariri அரங்கத்தில் நிறைவேற்றிய திருப்பலியின் இறுதியில், 2015ம் ஆண்டில், துருக்கி கடற்கரைப் பகுதியில் சடலமாக, கரையில் ஒதுங்கிய, மூன்று வயது சிறுவன் ஆலன் குர்தியின் (Alan Kurdi) தந்தை அப்துல்லா குர்தி அவர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பு பற்றி, இஞ்ஞாயிறன்று திருப்பீட தகவல் தொடர்பகம், அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன், சிறுவன் ஆலனின் தந்தையோடு திருத்தந்தை, நீண்டநேரம் கலந்துரையாடினார். தனது குடும்பத்தின் இழப்பு பற்றி, அந்த தந்தையின் வேதனையை திருத்தந்தை கேட்டறிந்தார். அவரது துன்பங்களில் ஆண்டவர் மிகவும் பங்குகொண்டார் என்று திருத்தந்தை கூறியுள்ளார். தனது பெருந்துன்பத்தோடும், தங்களின் உயிரையும் பணயம் வைத்து தங்களின் நாடுகளைவிட்டு வெளியேறும்போது, புரிந்துணர்வு, அமைதி மற்றும், பாதுகாப்பைத் தேடும் புலம்பெயரும் மக்களோடும் தோழமையுணர்வுடன் திருத்தந்தை வெளிப்படுத்தும் வார்த்தைகளுக்கு, சிறுவன் ஆலனின் தந்தை நன்றி தெரிவித்தார். தன் மகன் ஆலனைக் குறிக்கும் படம் ஒன்றையும், அப்துல்லா ஆலன் அவர்கள் திருத்தந்தையிடம் பரிசாகக் கொடுத்தார்.

[ Photo Embed: மூன்று வயது சிறுவன் ஆலன் குர்தி]ஆலனின் கதை

 

சிறுவன் ஆலன் குர்தி, ஐரோப்பாவில் தஞ்சம் புகவேண்டும் என்ற ஆவலில் மத்தியதரைக் கடலைக் கடக்கும்போது இடம்பெறும் பெருந்துயரங்களின் அடையாளமாக இருக்கின்றான். ஐரோப்பாவில் குடியேறவேண்டும் என்ற ஆவலில், குர்தி இனத்தைச் சேர்ந்த சிரியா நாட்டவரான, சிறுவன் ஆலன் குர்தியின் தாய், தன் மகன்கள் காலிப், ஆலன் மற்றும் ஏறத்தாழ இருபது புலம்பெயர்ந்தோரோடு துருக்கி நாட்டு Bodrum என்ற நகரிலிருந்து சிறிய படகில் ஆபத்தான கடல்பயணத்தை மேற்கொண்டார். 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதி இரவில், Coo என்ற கிரேக்கத் தீவுக்கு அருகில் அந்த படகு கவிழ்ந்தது. அதில் ஆலன், தன் தாய் மற்றும், சகோதரன் Galibபோடு கடல் நீரில் மூழ்கினான். சிறுவன் ஆலனின் உடல், முகம் குப்புற படுத்தநிலையில் கடற்கரையில் ஒதுங்கியது. அவனின் அந்த புகைப்படத்தை, பன்னாட்டு ஊடகங்களில் பார்த்த பன்னாட்டு சமுதாயத்தின் மனசாட்சி அன்று உலுக்கி எடுக்கப்பட்டது. ஆலனும், அவனது தாயும், சகோதரனும் அடுத்த நாள் அடக்கம் செய்யப்பட்டனர்.

மூன்று வயது சிறுவன் ஆலன் குர்தி
மூன்று வயது சிறுவன் ஆலன் குர்தி
08 March 2021, 15:10