பிலிப்பீன்ஸ் பாப்பிறை கல்லூரி மாணவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் பிலிப்பீன்ஸ் பாப்பிறை கல்லூரி மாணவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

கிறிஸ்தவ வாழ்வு, வருங்காலத்தை நோக்கமாகக் கொண்டது

எந்த ஒரு தடையையோ, மனத்தளர்வையோ நாம் எதிர்கொள்ளும் வேளையில், நம் கடந்தகால மகிழ்வு நிலைகளை நினைவுகூர்ந்து, அவற்றிலிருந்து பலம் பெறுவோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் நாட்டில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டு, உரோம் நகரில் பிலிப்பீன்ஸ் அருள்பணியாளர்களுக்கென பாப்பிறை கல்லூரி திறக்கப்பட்டதன் 60ம் ஆண்டு ஆகிய நிறைவுகளையொட்டி, பிலிப்பீன்ஸ் பாப்பிறை கல்லூரி மாணவர்களை, மார்ச் 22, இத்திங்கள் காலையில், திருப்பீடத்தில் சந்தித்து உரை நிகழ்த்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த, ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களை நினைவுகூரும் வேளையில், காலம் குறித்த சில சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்வோம் என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித வாழ்வு வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்கும் கடந்த காலம் குறித்து முதலில் நோக்குவோம் என கேட்டுக்கொண்டார்.. 

கடந்தகாலத்திற்கு நாம் திரும்பிச்செல்லும்போது, இயேசுவின் அன்பை நம்மில் விதைத்தவர்களையும், நம் இறையழைத்தலுக்கு தூண்டுகோலாக இருந்தவர்களையும் நன்றியுடன் நினைவுகூர்வோம் என்றுரைத்த திருத்தந்தை, எந்த ஒரு தடையையோ, மனத்தளர்வையோ நாம் எதிர்கொள்ளும் வேளையில், நம் கடந்தகால மகிழ்வு நிலைகளை நினைவுகூர்ந்து, அவற்றிலிருந்து பலம் பெறுவோம் என அழைப்பு விடுத்தார்.

பழைய நிலைகளிலிருந்து நம் விசுவாசம், மற்றும் இறையழைத்தல்களுக்குத் தேவையான உறுதிப்பாட்டை நாம் பெறும்போது, வருங்காலத்திற்கான வாசலை அது திறப்பதுடன், நம்பிக்கையையும் வழங்குகிறது, என எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவ வாழ்வு என்பது, அதன் இயல்பிலேயே வருங்காலத்தை நோக்கமாகக் கொண்டது, என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எதிர்காலத்தில் நாம் அடைக்கலம் தேடும் வேளையில், அது, நிகழ்காலத்தை எதிர்கொள்வதற்கான நம் பலத்தை நம்மிடமிருந்து பறித்து விடக்கூடாது என கேட்டுக்கொண்டார்.

கடந்தகாலத்தையும், வருங்காலத்தையும் நோக்கியுள்ள நாம், நம் மனமாற்றத்திற்கும், புனித வாழ்வின் வளர்ச்சிக்கும் உதவும் பயணத்தில், நிகழ்காலத்திற்கு திரும்புவோம் என்ற அழைப்பை விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முடிவெடுப்பதற்கென நம் கைகளில் தரப்பட்டுள்ள காலம் நிகழ்காலம் என எடுத்துரைத்தார்.

கௌரவமான பதவிகளை நாடிச்செல்லாமல், நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு பணியாற்றுவதில் கிட்டும் மேய்ப்புப்பணி அனுபவங்களைப் பெறத் தயாராக இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

கடந்தகாலத்தை அறிவதையும், வருங்காலத்திற்கு தயாரிப்பதையும், நிகழ்காலத்தை முழுமையாக அனுபவிப்பதையும் நம்மை புனிதத்துவத்தில் வளர்ப்பதற்குரிய ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்வோம் என்ற அழைப்பையும் முன்வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவை பின் செல்வதற்கும், அவரோடு இணைந்து நடப்பதற்கும் இறைவன் கொடுக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, வாழ்வில் முன்னோக்கிச் செல்வோம் என, பிலிப்பீன்ஸ் அருள்பணியாளர்களை நோக்கி அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிகுதியான விசுவாசம், மற்றும் கலாச்சாரத்தை ஆதாரமாகக் கொண்டு, ஓர் உடன்பிறந்த உணர்வுச் சூழலில் வாழும் இந்த அருள்பணியாளர்கள், உண்மையின் முன்னோடிகளாக தங்கள் நாட்டிற்கு செல்லவேண்டும் என்று, இந்த பாப்பிறை கல்லூரியை திறந்து வைத்த திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்கள் கூறிய சொற்களுடன் தன் உரையை நிறைவுச் செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 March 2021, 13:54