பிரான்சிஸ்கன் ஒருமைப்பாட்டு மைய அங்கத்தினர்களுக்கு உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் பிரான்சிஸ்கன் ஒருமைப்பாட்டு மைய அங்கத்தினர்களுக்கு உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

சேவை வழி, இறையரசின் விதைகளை விதைக்கும் செயல்

அனைவரும் உடன்பிறந்தோர் என்ற நிலையை ஊக்குவித்து, எங்கும் அமைதியை விதைத்துச் சென்ற அசிசியின் புனித பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மிகக் கடினமான பொருளாதார, மற்றும் சமுதாயச் சுழலினால் துன்புறும் மக்களுக்கு அருகாமையில் இருந்து அவர்களின் துயர்களுக்கு செவிமடுக்கும் பிரான்சிஸ்கன் ஒருமைப்பாட்டு மைய அங்கத்தினர்களை, மார்ச் 1, இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்தபோது தன் பாராட்டுக்களை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

துன்பகரமான பொருளாதார, மற்றும் சமுதாய நிலைகளால், பிறரின் அருகாமையையும் ஆதரவையும் எதிர்பார்க்கும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு உறுதுணையாக, இத்தாலியின் புளாரன்ஸ் நகரில், கடந்த பல ஆண்டுகளாக பணியாற்றிவரும் பிரான்சிஸ்கன் குழுமத்தினருக்கு சிறப்பான விதத்தில் தன் நன்றியை வெளியிடுவதாகத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒருபுறம் செல்வத்தை குவித்துக் கொண்டும், மறுபுறம் சரிநிகரற்ற நிலைகளை உருவாக்கிக் கொண்டும், இருவித வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகில், உதவி தேவைப்படும் மக்களுடன் பணியாற்றும் பிரான்சிஸ்கன் ஒருமைப்பாட்டுக்குழுவின் சேவை, இறையரசின் விதைகளை விதைக்கும் செயலாகும் என எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இறையரசை அறிவிக்க இவ்வுலகிற்கு வந்த இயேசு, மனிதர்களின் காயங்களை கருணையுடன் அணுகினார் என்றுரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துயருவோர், ஒடுக்கப்பட்டோர், கைவிடப்பட்டோர் என அனைத்து மக்களும் மனித மாண்புடனும், தனிமையை உணரா நிலையிலும், பசியின்றியும் வாழ்வதை, நாம் உறுதி செய்வதை இயேசு நம்மிடம் எதிர்பார்க்கிறார் என்று கூறினார்.

அனைவரும் உடன்பிறந்தோர் என்ற நிலையை ஊக்குவித்து, ஏழைகள், மற்றும் கைவிடப்பட்டோருடன் உடன் நடந்து, எங்கும் அமைதியை விதைத்துச் சென்ற அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின் ஒளிர்மிகு சாட்சிய வாழ்வால் தூண்டப்பட்டு இந்த பிரான்சிஸ்கன் ஒருமைப்பாட்டுக்குழு பணியாற்றிவருவதாகத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்கள், ஏறத்தாழ, கடந்த 40 ஆண்டுகளாக, நம்பிக்கையின் விதைகளை, சமுதாயத்தில் விதைத்து வருவதை சுட்டிக்காட்டி, தன் பாராட்டுக்களை வெளியிட்டார்.

பாராமுகம் எனும் நிலையிலிருந்து நாம் வெளியேறி, தூங்கும் நம் மனச்சான்றுகளை தட்டியெழுப்பி, காயமடைந்துள்ள மக்களை நோக்கி கருணையுடன் குனியவேண்டும் என, ஒவ்வொருவருக்கும் அழைப்புவிடுப்பதாகவும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 March 2021, 14:29