மியான்மார் வன்முறை நிறுத்தப்படவேண்டும் - திருத்தந்தை

மியான்மாரில் வாழும் இளையோர், தங்கள் நாட்டில், உரையாடலுக்கு வாய்ப்பு உண்டு என்பதையும், வெறுப்பும் அநீதிகளும் இல்லாத ஓர் எதிர்காலம் தங்களுக்கு உண்டு என்பதையும் உணர்வதற்கு வழி செய்யப்படவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிப்ரவரி 28 கடந்த ஞாயிறன்று, மியான்மார் நாட்டில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள்மீது, இராணுவம் மேற்கொண்ட கடுமையான அடக்குமுறைகளையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டின் அமைதிக்காக, மார்ச் 3, இப்புதனன்று வழங்கிய மறைக்கல்வி உரையின் இறுதியில், மீண்டும் ஒருமுறை விண்ணப்பம் செய்தார்.

பிப்ரவரி 1ம் தேதி முதல், இராணுவ ஆடசியின் கீழ் வலுக்கட்டாயமாக கொணரப்பட்டிருக்கும் மியான்மார் நாட்டு மக்களுடன் ஒருமைப்பாட்டை அறிவிப்பதாகவும், நாட்டை ஆள்வோர் பொதுநலனைக் கருத்தில்கொண்டு செயல்படுமாறு அழைப்பு விடுப்பதாகவும், பிப்ரவரி 7, ஞாயிறன்று, நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின், திருத்தந்தை, விண்ணப்பம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

தற்போது, அந்நாட்டில் தொடர்ந்து ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் போராட்டங்களையும், அவற்றை அடக்க இராணுவம் பயன்படுத்தும் கடுமையான அடக்குமுறைகளையும் கருத்தில் கொண்டு, திருத்தந்தை, இப்புதனன்று, மீண்டும் ஒரு விண்ணப்பத்தை முன்வைத்துள்ளார்.

மியான்மார் நாட்டில் வாழும் இளையோர், தங்கள் நாட்டில் உரையாடலுக்கு வாய்ப்பு உண்டு என்பதையும், வெறுப்பும் அநீதிகளும் இல்லாத ஓர் எதிர்காலம் தங்களுக்கு உண்டு என்பதையும் உணர்வதற்கு வழி செய்யப்படவேண்டும் என்று திருத்தந்தை தன் விண்ணப்பத்தில் குறிப்பிட்டார்.

மிகக் குறைந்த காலமே மக்களாட்சியின் சுவையை உணர்ந்துள்ள மியான்மார் நாட்டு மக்கள், மீண்டும் அந்த மக்களாட்சி வழியில் முன்னேற்றத்தைக் காண அனைவரும் இணைந்து உரையாடல்களை மேற்கொள்ளவும், சிறையில் உள்ள அரசியல் தலைவர்கள் விடுவிக்கப்படவும் தான் மீண்டும் ஒருமுறை வேண்டிக் கேட்டுக்கொள்வதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த விண்ணப்பத்தை விடுத்த இதே புதனன்று, மியான்மார் நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 9 பேர் கொல்லப்பட்டனர் என்றும், பிப்ரவரி 1, இத்திங்கள் முடிய அந்நாட்டில் இராணுவ அடக்கு முறைகளால் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 30 என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 March 2021, 15:30