தேடுதல்

Vatican News
மறைக்கல்வியுரையின்போது - 030321 மறைக்கல்வியுரையின்போது - 030321  (AFP or licensors)

மறைக்கல்வியுரை – இறையன்பை நோக்கிய இறைவேண்டல்

மூவொரு கடவுளின் வாழ்வுக்குள்ளும், இறையன்பின் முடிவற்ற மறையுண்மைக்குள்ளும் நுழைய நம் இறைவேண்டல் உதவுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

இரு வார இடைவெளிக்குப்பின், மார்ச் 3ம் தேதி, இப்புதன்கிழமை, தன் நூலக அறையிலிருந்து  மறைக்கல்வி உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். கடந்த வாரம், தவக்கால ஆண்டு தியானத்தில் இருந்ததாலும், அதற்கு முந்தைய புதன்கிழமையன்று, தவக்கால திருநீற்றுப்புதன் திருப்பலியை நிறைவேற்றியதாலும், அந்நாட்களில், திருத்தந்தையின் மறைக்கல்வியுரைகள் இடம்பெறவில்லை. இப்புதன்கிழமையன்று வழங்கிய மறைக்கல்வியுரையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூவொரு கடவுளின் வாழ்வுக்குள்ளும், இறையன்பின் முடிவற்ற மறையுண்மைக்குள்ளும் நுழைய நம் இறைவேண்டல் எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இறைவேண்டல் குறித்த நம் தொடர் மறைக்கல்வியுரையில் இன்று, மூவொரு கடவுளின் வாழ்வுக்குள்ளும், இறையன்பின் முடிவற்ற மறையுண்மைக்குள்ளும், எவ்வாறு நம் இறைவேண்டல் வழிநடத்திச் செல்கின்றது என்பது குறித்து நோக்குவோம். இந்த அகிலம் முழுமைக்கும், ஆதாரமாகவும், மகிழ்வாகவும் இறையன்பே உள்ளது. இறைவனின் முடிவற்ற அன்பை நமக்குக் காண்பிக்க, நம்மைப்போல் மனிதனாக உருவெடுத்த இயேசுவும் இதே பாதையை நமக்கு வெளிப்படுத்தினார். தன் பாஸ்கா மறையுண்மை வழியாக வானகத்தின் கதவுகளைத் திறந்த இயேசு, தூய ஆவியாரின் கொடைகள் வழியாக, இறைத்தந்தையுடன், குழந்தைகளுக்குரிய உறவில் நமக்கு பங்களித்தார். இறைவன் வழங்கும் இவ்வளவு பெரிய கொடைக்கு நாம் தகுதியற்றவர்கள் என்பதை உணர்ந்தவர்களாக, இயேசுவின் சீடர்கள் உரைத்ததுபோல், “ஆண்டவரே, இறைவனிடம் வேண்ட எங்களுக்கும் கற்றுக்கொடும்”  (லூக் 11:1) என இயேசுவை நோக்கிக் கேட்போம். நாம் இறைவேண்டலில் பயன்படுத்த வேண்டிய வார்த்தைகளை மட்டும் இயேசு நமக்குக் கற்றுத் தரவில்லை, மாறாக, தன்னை விட்டு விலகிப்போன குழந்தைகளையும், காணாமல் போன ஆடுகளையும் தேடிவரும் இறைத்தந்தையின் அளவிடமுடியாத கருணையையும் நமக்குக் காண்பிக்கிறார். கிறிஸ்துவில் நாம் பெற்றுள்ள உயரிய அழைப்பு குறித்த உணர்வை நம்மில் தட்டியெழுப்பவும், தந்தை, மகன், தூய ஆவியாரின் அன்புறவின் ஒன்றிப்பை நோக்கி நாம் ஈர்க்கப்படவும், நம் இறைவேண்டல் உதவுவதாக.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மியான்மார் நாட்டிலிருந்து தொடர்ந்து வெளிவரும் துயரச் செய்திகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டு,  அடக்குமுறைகள் கைவிடப்பட்டு, அரசியல் தீர்வுக்கான வழிமுறைகள் காணப்படவேண்டும் என அழைப்பு விடுத்தார். மேலும், நாளை மறுநாள், அதாவது, மார்ச் 5, இவ்வெள்ளியன்று, ஈராக் நாட்டில், தான் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதை நினைவூட்டி, இப்பயணத்தின் வெற்றிக்காக அனைவரும் செபிக்குமாறும் விண்ணப்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

03 March 2021, 12:02