தேடுதல்

புதன் மறைக்கல்வியுரை - 310321 புதன் மறைக்கல்வியுரை - 310321 

புதன் மறைக்கல்வியுரை – பாஸ்கா புனித நாட்களின் சிறப்பு

இந்த பெருந்தொற்று காலத்தில், பாஸ்கா மறையுண்மையின் நம் கொண்டாட்டங்கள் அனைத்தும், இருளில் ஒளிர்விடும் ஒளியாக இயேசுவின் சிலுவையை முன்வைக்கின்றன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கடந்த பல வரங்களாக தன் நூலக அறையிலிருந்து இறைவேண்டுதல் குறித்த புதன் மறைக்கல்வியுரையை வழங்கிவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புனித வாரத்தின் புதனன்று, இதனைத் தொடர்ந்து வரும், பாடுகளின் மூன்று புனித நாட்கள் குறித்து தியான சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார். மார்ச் மாதம் 31ம் தேதி, இப்புதனன்று இடம்பெற்ற மறைக்கல்வியுரையின்போது, முதலில், இறைவாக்கினர் ஏசாயா நூலின் 15ம் பிரிவின் இறுதியில், துன்புறும் ஊழியர் குறித்துப் பேசும் பகுதி வாசிக்கப்பட, திருத்தந்தையின் உரை தொடர்ந்தது.

இதோ, என் ஊழியர் சிறப்படைவார்; அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார். அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர்; அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந்ததால் மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது; மானிடரின் உருவமே அவருக்கு இல்லை. அவ்வாறே, அவர் பல பிறஇனத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்; அரசர்களும் அவரை முன்னிட்டு வாய்பொத்தி நிற்பர்; ஏனெனில் தங்களுக்குச் சொல்லப் படாததை அவர்கள் காண்பர்; தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்து கொள்வர்.(ஏசா 52, 13-15)

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே,

பாஸ்காவின் புனித மூன்று நாட்கள், இயேசுவின் பாடுகள், மரணம், மற்றும், உயிர்ப்பை உள்ளடக்கிய மீட்பின் மறையுண்மை குறித்த கொண்டாட்டங்களுடன், நாளை துவங்குகின்றன. புனித வியாழனன்று, நாம் இயேசுவின் புதிய அன்புக் கட்டளையாகிய, தன் சீடர்களின் பாதங்களை அவர் கழுவியதை நினைவுகூர்கிறோம். அதனோடு, நம் அனைவரின் மீட்புக்காக, தன் உடலையும் இரத்தத்தையும் தியாகப் பலியாக வழங்கியதை நினைவுகூரும் வகையில், நம்மோடு என்றும் நிலைத்திருக்கும் திருநற்கருணையை இயேசு நிறுவியதையும் சிறப்பிக்கிறோம். புனித வெள்ளியன்றோ, இயேசுவின் பாடுகள், மற்றும், மரணம் குறித்து விவிலியம் கூறுவதை ஆழமாக வாசித்து தியானிப்பதுடன், திருஅவை, மற்றும், உலகின் தேவைகளுக்காகச் செபிக்கவும், இயேசுவின் சிலுவை மரத்தை வணங்கிடவும் செய்கின்றோம். இதன் வழியாக, நாம் துயருறும் நம் சகோதரர் சகோதரிகளையும், போர், வன்முறை, அநீதி ஆகியவைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களையும், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின்முன் கொண்டுவருகிறோம். புனித சனிக்கிழமையன்று, ஆழமான அமைதியை உள்ளடக்கிய அந்நாளில்,  தன் மகனின் மரணம் தந்த துயரத்திலும்,  இறைவனின் வாக்குறுதி நிறைவேறும் என்ற அசையாத நம்பிக்கையின் எதிர்பார்ப்பிலும் இருந்த அன்னை மரியாவோடு இந்நாளில் இணைகிறோம். உயிர்ப்புத் திருவிழிப்பின்போது, பாஸ்கா மெழுதிரியின் ஒளியும், அல்லேலூயா வாழ்த்தொலிகளும், இறைமகன் பாவத்தின் மீதும், சாவின் மீதும் வெற்றி கண்டதை பெருமகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றன. இந்த பெருந்தொற்று காலத்தில், பாஸ்கா மறையுண்மையின் நம் கொண்டாட்டங்கள் அனைத்தும், இருளில் ஒளிர்விடும் ஒளியாகவும், புதிய வாழ்விற்கான இறைவனின் வாக்குறுதியில் உறுதியான நம்பிக்கையை அறிவிப்பதாகவும் இயேசுவின் சிலுவையை முன்வைக்கின்றன.  

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த புனித வாரத்தில் நாமனைவரும், நமக்காக உயிரிழந்து, உயிர்த்த இயேசுவில் ஆழமாக ஒன்றிணைவோம் என்ற அழைப்பை விடுத்தார். நம்மை பாவத்திலிருந்து மீட்கவும், நாம் இவ்வுலகில் விண்மீன்களாக ஒளிர்விடவும், தன் ஒரே மகனையே அனுப்பிய இறைவனின் நன்மைத்தனத்தை நாம் இந்நாட்களில் அனுபவிப்போம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 March 2021, 12:13

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >