தேடுதல்

Vatican News
மூவேளை செபவுரை - 210321 மூவேளை செபவுரை - 210321  (Vatican Media)

துன்ப துயர்களில் மடியும்போது, அங்கு வாழ்வு மலர்கின்றது

திருத்தந்தை : இயேசுவை சந்திக்க விரும்பும் பலர், எல்லாக் காலத்திலும் எல்லா இடங்களிலும் வெளியிட்டுவரும் ஆவலுக்கு, நம் வாழ்வுச் சான்று வழியாக பதிலுரைப்போம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மார்ச் 21, இஞ்ஞாயிறன்று வழங்கப்பட்ட நற்செய்தியில், இயேசுவைக் காணவேண்டும் என கிரேக்கர்கள் வெளிப்படுத்திய விருப்பமானது, பல்வேறு காலங்களில், ஆண்களும், பெண்களும், திருஅவையை நோக்கியும், நம்மை நோக்கியும், இயேசுவைக் காண விழைந்து எழுப்பிவரும் விருப்பத்தைச் சுட்டிக்காட்டுகிறது, என ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த சில வாரங்களாக புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தையொட்டி உள்ள மாடி அறை சன்னலிலிருந்து மூவேளை செப உரையை வழங்கிவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கோவிட்-19 பெருந்தொற்றின் பரவலை மீண்டும் ஒருமுறை தடுப்பதற்கென இத்தாலிய அரசு, உரோம் நகரில் விதித்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு, இஞ்ஞாயிறு நண்பகல் உரையை தன் நூலக அறையிலிருந்து நேரடி ஒளிபரப்பின வழியே வழங்கினார்.

கிரேக்கர்கள் இயேசுவின் சீடர் பிலிப்புவை அணுகி, இயேசுவை சந்திக்க தங்கள் விருப்பத்தை வெளியிட்டதையும், பிலிப்புவோ அதனை அந்திரேயாவிடம் எடுத்துரைத்து பின்னர் அதனை இயேசுவிடம் கூறியதையும் பற்றி உரைக்கும் ஞாயிறு நற்செய்தி வாசகம் (யோவான்  12:20-33) குறித்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இயேசுவை சந்திக்க விரும்பும் பலர், எல்லாக் காலத்திலும் எல்லா இடங்களிலும் வெளியிட்டுவரும் ஆவலைக் காட்டுவதாக இந்நிகழ்வு உள்ளது என்று கூறினார்.

கிரேக்கர்களின் ஆவலுக்கு இயேசு உரைத்த பதிலோ, அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் விடையாக இல்லாமல், மண்ணில் மடியும் விதைக் குறித்தும், சிலுவையை உற்றுநோக்குவது குறித்தும் விடப்படும் அழைப்பாக உள்ளது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றும் கிறிஸ்துவைக் காணவரும் மக்கள், முதலில் காண்பது சிலுவையையே, ஏனெனில், அதுவே அன்பையும், சேவையையும், முற்றிலுமாக தன்னையே கையளிப்பதையும் உள்ளடக்கும் வாழ்வின் மரமாக உள்ளது என எடுத்துரைத்தார்.

இன்றும் எண்ணற்ற மக்கள் வெளிப்படையாக சொல்லாமலேயே இயேசுவைக் காணவும், சந்திக்கவும், அவரைக் குறித்து அறியவும் கொண்டுள்ள விருப்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர் என்பது, கிறிஸ்தவர்களாகிய நம் கடமையை நமக்கு உணர்த்துகின்றது எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்களுக்கு நாம் வழங்கும் பதிலுரை, சேவைகள் வழியாக நாம் வழங்கும் வாழ்வுச் சான்றுகளாக இருக்கவேண்டும் என மேலும் விளக்கிக் கூறினார்.

எளிமையான, மனவுறுதியுடைய சான்றுகளாக இருந்து, அன்பின் விதைகளை நாம் விதைக்கும்போது, இறைவன், நம்மை, மிகுந்த பலன் கொடுப்பவர்களாக மாற்றுகிறார் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

துன்ப துயரங்களில் விதை மடியும்போது, அங்கு வாழ்வு மலர்கின்றது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வும், மரணமும், ஒன்றிணையும் இந்நேரத்தில்தான், நாம், அன்பின் உண்மை கனிகளையும், மகிழ்வின் அனுபவங்களையும் பெறமுடியும் என மேலும் உரைத்தார்.

21 March 2021, 12:31