மோசூல் நகர் Hosh al-Bieaa வளாகத்தில் திருத்தந்தை மோசூல் நகர் Hosh al-Bieaa வளாகத்தில் திருத்தந்தை 

போருக்குப் பலியானவர்கள் குறித்து திருத்தந்தையின் உரை

ஈராக் நாட்டிற்கு திரும்பிவரும் கிறிஸ்தவர்களை இஸ்லாமியர்கள் வரவேற்பது, ஒப்புரவு, மற்றும் புதுவாழ்வு குறித்த நம்பிக்கைகளை வழங்குகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

போரால் உயிரிழந்த அப்பாவி மக்களின் ஆன்ம இளைப்பாற்றிக்கென, ஈராக்கின் மோசூல் நகர் Hosh al-Bieaa மையத்தில் இடம்பெற்ற இறைவேண்டல் கூட்டத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரையின் சுருக்கம்:  

இவ்வேளையில், இங்கு வழங்கப்பட்ட வரவேற்புரைக்கும் இருவரின் சான்று பகிர்தலுக்கும் முதலில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கிறிஸ்தவர்கள் கட்டாயமாக நாட்டைவிட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டது குறித்து வேதனையடைகிறேன். கிறிஸ்தவர்கள் வெளியேறிவருவது, அவர்களுக்கும், கிறிஸ்தவ சமுதாயத்திற்கும் மட்டுமல்ல, மத்திய கிழக்குப்பகுதியின் சமுதாயம் முழுமைக்கும் இழப்பாகும். பல்வேறு கலாச்சாரங்களாலும், மதநம்பிக்கைகளாலும் பின்னப்பட்டிருக்கும் ஒரு சமுதாயத்தில், ஏதாவது ஒரு குழு, தன் அங்கத்தினர்களை இழப்பது என்பது, முழு சமூதாயத்திற்கும் தீங்கு விளைவிப்பதாக உள்ளது. அழகாகப் பின்னப்பட்ட ஒரு கம்பளத்தில், ஓர் இழை அறுந்துபோனாலும், அது முழு கம்பளத்தையும் பாதிக்கும். இந்நாட்டிற்கு திரும்பிவரும் கிறிஸ்தவர்களை, இஸ்லாமியர்கள் வரவேற்றுவருவது, ஒப்புரவு, மற்றும் புதுவாழ்வு குறித்த நம்பிக்கைகளை வழங்குகிறது.

வேறுபட்ட பின்னணிகளையும், கலாச்சாரங்களையும் கொண்ட மக்களிடையே இணக்கமான ஒன்றிணைந்த வாழ்வு இடம்பெறும் ஈராக்கின் மோசூல் நகருக்கு கிறிஸ்தவர்கள் திரும்பிவந்து, குணப்படுத்தலிலும் புதுப்பித்தலிலும் தங்கள் உயிர்துடிப்புடைய பங்கை ஆற்றவேண்டும் என இங்கு அழைப்பு விடப்பட்டதை, நானும் வரவேற்கிறேன்.

போராலும், ஆயுதம் தாங்கிய வன்முறைகளாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, இறைவனை நோக்கி, நம் குரல்களை எழுப்ப, இங்கு கூடியுள்ளோம். போர், மற்றும் விரோத மனப்பான்மைகளின் பாதிப்புகளை, இந்நகரில், தெளிவாகக் காணமுடிகிறது. நாகரீகத்தின் தொட்டிலாக விளங்கும் ஒரு நாட்டில், பழமை வாய்ந்த வழிபாட்டுத்தலங்கள் அழிவுக்குள்ளானதும், இஸ்லாமியரகள், கிறிஸ்தவர்கள், யாசிதி இனத்தவர் என, பல ஆயிரக்கணக்கானோர், புலம்பெயர கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதும், கொல்லப்பட்டுள்ளதும், மிகவும் கொடூரமானதாகும்.

சண்டைகளைவிட, உடன்பிறந்த உணர்வு நிலை, நீண்டகாலம் நீடிக்கக்கூடியது, பகைமையைவிட, எதிர்நோக்கு, சக்தி வாய்ந்தது, போரைவிட, அமைதி வலிமை மிக்கது என்பவைகளில் நம் உறுதியான நம்பிக்கையை மீண்டும் இன்று உறுதி செய்கின்றோம்.

விரோத மனப்பான்மை, மற்றும் வன்முறைகளின் குரல்களைவிட, உறுதிவாய்ந்த இந்த நம்பிக்கையின் குரல் அதிக சக்திவாய்ந்தது. கடவுளின் பெயரை தவறாகப் பயன்படுத்தி, அழிவின் பாதையில் சென்றுகொண்டிருப்போரால், சிந்தப்பட்டுள்ள இரத்தத்தின் துணைகொண்டு, உறுதிவாய்ந்த இந்த நம்பிக்கையின் குரலை மௌனப்படுத்திவிட முடியாது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 March 2021, 14:59