எர்பில் நகரில், பிரான்ஸோ ஹரிரி திறந்தவெளி அரங்கில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிறைவேற்றிய திருப்பலி எர்பில் நகரில், பிரான்ஸோ ஹரிரி திறந்தவெளி அரங்கில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிறைவேற்றிய திருப்பலி  

எர்பில் ஞாயிறு திருப்பலி – திருத்தந்தையின் மறையுரை

உங்களுக்கு நன்றி கூறி, உங்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தவேண்டும் என்பது, இந்நாட்டிற்கு ஒரு திருப்பயணியாக நான் வருவதற்கு, ஒரு முக்கிய காரணம் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் – வத்திக்கான்

மார்ச் 7, இஞ்ஞாயிறு மாலை, ஈராக் நாட்டின் எர்பில் நகரில், பிரான்ஸோ ஹரிரி (Franso Hariri) திறந்தவெளி அரங்கில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலி நிறைவேற்றினார். அவ்வேளையில் அவர் வழங்கிய மறையுரையின் சுருக்கம்:

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே,

"கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்" (1 கொரி. 1:24) என்று, புனித பவுல், நமக்குக் கூறியுள்ளார். அந்த வல்லமையையும், ஞானத்தையும், மன்னிப்பு வழங்குவதிலும், இரக்கம் காட்டுவதிலும் இயேசு வெளிப்படுத்தினார். தன் சக்தியை வெளிப்படுத்தி, வானத்திலிருந்து நீண்ட, அறிவுப்பூர்வமானதோர் உரையை நமக்கு வழங்குவதை அவர் தெரிவு செய்யவில்லை. மாறாக, சிலுவையில் தன் வாழ்வை வழங்குவதன் வழியே, அவர், வல்லமையையும், ஞானத்தையும், வெளிப்படுத்தினார்.

நம் வல்லமையையும், ஞானத்தையும், மற்றவர்களுக்கு காட்டவேண்டும் என்ற பொறிக்குள்ளும், நமக்கு பாதுகாப்பு தரும் பொய் தெய்வங்களை உருவாக்கும் (காண்க. வி.ப. 20:4-5) பொறிக்குள்ளும் மிக எளிதாகச் சிக்கிக்கொள்கிறோம். இருப்பினும், சிலுவையில் இயேசு வெளிப்படுத்திய கடவுளின் வல்லமையும் ஞானமும் நம் அனைவருக்கும் தேவையானவை என்பதே உண்மை.

கல்வாரியில் அவர் தன் காயங்களை கடவுளுக்கு காணிக்கையாக்கினார், அந்தக் காயங்கள் வழியே நாம் குணமடைந்தோம் (காண்க 1 பேதுரு 2:24). இங்கே, ஈராக்கில், நம் சகோதரர்கள், சகோதரிகள், போர் மற்றும் வன்முறையின் காயங்களைத் தாங்கியிருக்கின்றனர். இந்தக் காயங்களுக்குப் பதிலிருப்பாக, மனித வல்லமையுடன், ஞானத்துடன் செயலாற்ற சோதனை எழுகிறது. இதற்குப் பதிலாக, இயேசு நமக்கு கடவுளின் வழியைக் காட்டுகிறார். அந்த வழியை அவர் மேற்கொண்டார், நம்மையும் அவ்வழியைப் பின்பற்ற அழைக்கின்றார்.

எருசலேம் ஆலயத்திலிருந்து, விற்பவர்கள், வாங்குவோர், நாணயம் மாற்றுவோர் அனைவரையும் இயேசு விரட்டியடிப்பதை, இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 2:13-25) கேட்டோம். இவ்வளவு சக்திநிறைந்த, ஆத்திரமூட்டும் செயலை இயேசு ஏன் செய்தார்? அவர் அதை செய்ததற்குக் காரணம், அவரது தந்தை, கோவிலைச் சுத்தம் செய்ய அவரை அனுப்பினார். கற்களால் கட்டப்பட்ட கோவிலை மட்டுமல்ல, அனைத்திற்கும் மேலாக, நம் உள்ளம் என்ற கோவிலை. தன் தந்தையின் இல்லம் சந்தையாக மாறுவதை, (காண். யோவான் 2:16) இயேசுவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதேவண்ணம், நம் இதயங்கள் குழப்பத்தாலும், கொந்தளிப்பாலும் நிறைவதை அவர் விரும்புவதில்லை. நம் இதயங்களும் தூய்மையாக்கப்படவேண்டும். எவற்றிலிருந்து? பொய்மை, வெளிவேடம் ஆகியவற்றிலிருந்து தூய்மை அடையவேண்டும். கடவுளுக்குப் பதிலாக, கடந்துசெல்லும் விடயங்கள் வழியே நாம் பெறும் பொய்மையான பாதுகாப்பிலிருந்து தூய்மை பெறவேண்டும். அதிகாரம், செல்வம் என்ற சோதனைகள், நம் இதயங்களிலிருந்தும், திருஅவையிலிருந்தும் தூய்மை பெறவேண்டும்.

நம் இதயங்களை எவ்வாறு தூய்மையாக்குகிறோம்? நமது முயற்சிகளால் இதைச் செய்ய இயலாது, நமக்கு இயேசு தேவை. அவர், நமது தீமைகளை வென்று, நோய்களை குணப்படுத்தி, நமது உள்ளம் என்ற ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்புவார்.

இயேசு, நம் பாவங்களிலிருந்து மட்டும் நம்மை தூய்மையாக்குவதில்லை, மாறாக, தன் வல்லமையிலும், ஞானத்திலும் நமக்கு பங்களிக்கிறார். குறுகிய, பிளவுபடுத்தும் எண்ணங்களான குடும்பம், சமுதாயம், மதம் என்ற பிரிவுகளிலிருந்து நம்மை விடுவித்து, அனைவர் மீதும் அக்கறை கொண்ட ஒரு திருஅவையைக் கட்டியெழுப்ப உதவுகிறார். அதேவேளையில், பழிவாங்குதல் என்ற சோதனையை வெல்வதற்கு அவர் நமக்கு சக்தியளிக்கிறார்.

கடவுளின் கருணைக்கும், அமைதிக்கும், கருவிகளாக, புதிய சமுதாயத்தை வடிவமைக்கும் கலைஞர்களாக, உயிர்த்த ஆண்டவர், நம்மை மாற்றுகிறார். கிறிஸ்து மற்றும் தூய ஆவியார் வழங்கும் வல்லமையால், திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு கூறிய சொற்கள் நம்மில் நிறைவடைகின்றன: "மனித ஞானத்தைவிட கடவுளின் மடமை ஞானம் மிக்கது; மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது" (1 கொரி 1:25).

"இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்" (யோவான் 2:19) என்று இயேசு கூறியபோது, அவர், தன் உடலாகிய கோவிலைப்பற்றி பேசினார், அதேவேளையில், திருஅவையைக் குறித்தும் பேசினார். தன் உயிர்ப்பின் வல்லமையால், அவர், அநீதியால் உருவான அழிவிலிருந்தும், பிரிவு மற்றும் வெறுப்பிலிருந்தும், நம்மையும், நம் சமுதாயத்தையும், எழச்செய்வார். அவர்தம் காயங்களால் நாம் குணமடைந்துள்ளோம் (காண். 1 பேதுரு 2:24) இந்த காயங்களில், அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, அவரது இரக்கம் நிறைந்த அன்பு என்ற மருந்தை காண்கிறோம். நல்ல சமாரியரைப்போல், அவர் நம் ஒவ்வொரு காயத்திற்கும் மருந்திட்டு, நமது வேதனை நிறைந்த நினைவுகளிலிருந்து குணமாக்கி, அமைதியும், உடன்பிறந்த உணர்வும் கொண்ட ஓர் எதிர்காலத்தை இந்நாட்டில் உருவாக்குகிறார்.

சிலுவையின் வியப்பிற்குரிய ஞானத்தை அறிக்கையிடுவதிலும், குறிப்பாக, கிறிஸ்துவின் இரக்கமும், மன்னிப்பும் மிக அதிகமாகத் தேவைப்படுவோருக்கு அவற்றை வழங்குவதிலும், ஈராக்கில் உள்ள திருஅவை, கடவுளின் அருளால், ஏற்கனவே, அதிகம் செய்துள்ளது. அதிக வறுமை, துன்பம் ஆகியவற்றின் நடுவிலும், தேவையில் இருப்போருக்கு நீங்கள் உதவி வழங்கிவருகிறீர்கள். உங்களுக்கு நன்றி கூறி, உங்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தவேண்டும் என்பது, இந்நாட்டிற்கு ஒரு திருப்பயணியாக நான் வருவதற்கு, ஒரு முக்கிய காரணம். ஈராக் தலத்திருஅவை, துடிப்புடன் வாழ்கிறது என்பதை நான் நேரடியாகக் காணமுடிகிறது.

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, உங்களையும், உங்கள் குடும்பங்களையும், சமுதாயங்களையும், கன்னி மரியாவின் தாய்மைப்பாசமுள்ள பாதுகாப்பில் ஒப்படைக்கிறேன். அவர் நமக்காகப் பரிந்துபேசி, கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கும் கிறிஸ்துவிடம் நம்மை அழைத்துச் செல்வாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 March 2021, 10:38